மேலும்

வினைத்திறனற்ற அமைச்சுக்களை தனது நேரடி கண்காணிப்பில் கொண்டு வருகிறார் சிறிலங்கா பிரதமர்

ranil-japanஇந்த ஆண்டின் முதல் காலாண்டுக்குள்  திட்டமிட்ட இலக்குகளை அடையாத அமைச்சுக்கள் மற்றும் முக்கிய பொது நிறுவனங்களை தனது நேரடி கண்காணிப்புக்குள் கொண்டு வருவதற்கு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.

சில அமைச்சுக்களும் பல பொது நிறுவனங்களும் கடந்த அரசாங்கத்தில் பின்பற்றிய அதே அசமந்தப் போக்கை தொடர்வதன் காரணமாக நல்லாட்சி அரசாங்கத்தின் கொள்கைகளை தவறவிட்டிருப்பதாக கிடைத்துள்ள முறைப்பாடுகளை அடுத்தே, சிறிலங்கா பிரதமர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

அதேவேளை, சிறிலங்கா பிரதமர் அடுத்த மாதம் முதல் வாரம் மேற்கொள்ளவுள்ள சீனப் பயணத்தை தொடர்ந்து கல்வி அமைச்சின் தேசிய மட்ட செயற்பாடுகளை முழுமையாக மீளாய்வு செய்யவுள்ளார்.

கல்வி அமைச்சின் உயர் மட்ட பெண் அதிகாரியொருவர் அனைத்து செயற்பாடுகளினதும் பின்னடைவுக்கு காரணமென பிரதமருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இத்துடன் இணைந்ததாக மேலும் மூன்று அமைச்சுக்கள் மற்றும் நான்கு பொது நிறுவனங்களும் அடுத்த வரவு – செலவு திட்ட முன்வைப்புக்கு முன்னர் பிரதமரின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்படவுள்ளது.

கடந்த காலங்களில் முற்றிலும் அரசியல் மயப்படுத்தப்பட்டிருந்த வெளிவிவகார அமைச்சை மறுசீரமைப்பதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேரடியாக தலையிட்டிருந்தார்.

அத்துடன் பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கும் உள்ளாகியிருந்த தேசிய பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் உப அதிபர்களையும் பிரதமர் இடமாற்றம் செய்திருந்தார்.

வினைத்திறனுடன் செயற்படாத அமைச்சுக்களைத் தமது நேரடிக்கண்காணிப்பில் கொண்டு வரும், சிறிலங்கா பிரதமரின் முடிவு, ஐதேக- சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்துக்குள் விரிசலை ஏற்படுத்தலாம் என்று கருதப்படுகிறது.

ஏற்கனவே, தமது அமைச்சுக்களில் சிறிலங்கா பிரதமர் தலையீடு செய்வதாகவும், தமக்குத் தெரியாமல் முடிவுகள் எடுக்கப்படுவதாகவும், சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் பலரும் விசனமடைந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *