மேலும்

இனிமேலும் பொறுத்துக் கொள்வாரா இந்தியத் தூதுவர்? – உபுல் ஜோசப் பெர்னான்டோ

y.k.sinhaமகிந்தவைச் சூழ தற்போது இந்திய எதிர்ப்பாளர்கள் உள்ள நிலையில், எதிர்காலத்தில் இந்தியாவின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதில் மகிந்த பெரும் நெருக்கடியை எதிர்நோக்குவார்.

இவ்வாறு சிலோன் ருடே நாளிதழில் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார் உபுல் ஜோசப் பெர்னான்டோ. இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

மகிந்த ராஜபக்ச அரசாங்கம் எவ்வாறு இந்தியாவுடன் தொடர்பைப் பேணியிருந்தது என்பது தொடர்பாகவும் இது தொடர்பில் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் போன்ற முன்னாள் அமைச்சர்களின் கருத்துக்கள் மற்றும் கோட்பாடுகள் எவ்வளவு தூரம் முரண்பாடானவையாக உள்ளன என்பது தொடர்பாகவும் கொழும்பு மற்றும் புதுடெல்லிக்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளை இந்த அமைச்சர்கள் எவ்வளவு தூரம் தமது சுயநல அரசியலுக்காகப் பயன்படுத்தினர் என்பது தொடர்பாகவும் இங்கு ஆராயப்படுகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பைப் பேணிய தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கு எதிராக இந்திய மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் புதுடில்லிக்கான சிறிலங்கா உயர் ஆணையாளராகச் செயற்பட்ட பிரசாத் காரியவசம் அழுத்தம் கொடுத்திருந்தார். காரியவசத்தின் இந்த அழுத்தமானது இந்திய மத்திய அரசாங்கத்தைக் குழப்பத்திற்கு உள்ளாக்கியது. காரியவசத்தால் விடுக்கப்பட்ட இந்த அறிக்கைக்கு முரணாக, காரியவசத்தால் விடுக்கப்பட்ட இந்த அறிக்கை கொழும்பு அரசாங்கத்தின் நலன்களை அடிப்படையாகக் கொண்டது என ராஜபக்ச அரசாங்கம் பதிலளித்தது.

இந்தியாவுடனான பொருளாதார தொழினுட்ப கூட்டு உடன்படிக்கையை எதிர்த்து சிறிலங்காவில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளுக்கு எதிராக கொழும்பிலுள்ள இந்திய உயர் ஆணையாளர் வை.கே.சின்ஹா மிகத் தீவிரமான அறிக்கை ஒன்றை அண்மையில் வெளியிட்டிருந்தார். இந்தியாவுடனான பரந்த பொருளாதார கூட்டு உடன்படிக்கையை ஆதரித்த அதே அரசியல்வாதிகள் தற்போது பொருளாதார தொழினுட்ப கூட்டு உடன்படிக்கையை எதிர்க்கின்றமை தன்னை அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளதாக இந்தியாவின் உயர் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியாவின் முன்னாள் ஆணையாளர்களில் ஒருவரான ஜே.என்.டிக்சித் போன்றே சின்ஹாவும் தற்போது சர்ச்சைக்குரிய செயற்பாடுகளில் ஈடுபட முயற்சிப்பதாக, பரந்த பொருளாதார கூட்டு உடன்படிக்கையை முன்னர் ஆதரவளித்த பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் பதிலளித்துள்ளார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவிற்கும் இடையில் 1987 யூலையில் இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திட்ட பின்னரும் அதற்கு முன்னரும் டிக்சித் சர்ச்சைக்குரிய பங்கு வகித்திருந்தார்.

கொழும்பில் உயர் ஆணையாளர்களாகப் பணியாற்றிய சிலர் பின்னர் இந்தியாவின் வெளியுறவுச் செயலர்களாகக் கடமையாற்றியுள்ளனர். வி.வை.குண்டேவியா, ஜே.என்.டிக்சித், சிவ்சங்கர் மேனன் மற்றும் நிருபமா ராவ் ஆகியோரே கொழும்பில் உயர் ஆணையாளர்களாகவும் பின்னர் இந்திய வெளியுறவுச் செயலர்களாகவும் பணியாற்றியவர்களாவர்.

கொழும்பில் பணியாற்றிய இந்திய உயர் ஆணையாளர்களில் டிக்சித் மற்றும் நிருபமா ஆகிய இருவரும்  சர்ச்சைக்குரிய பங்கை வகித்திருந்தனர். இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் நிர்மாணி டிக்சித் ஆவார். நிருபமா ராவ் சிறிலங்காவின் உள்விவகாரங்களில் தலையிட்டதுடன் சிறிலங்காவின் அப்போதைய சுற்றுலாத்துறை அமைச்சர் அனுர பண்டாரநாயக்கவின் கடுமையான கண்டனங்களுக்கும் உட்பட்டிருந்தார்.

அப்போதைய அரசாங்கங்கள் மற்றும் எதிர்க்கட்சி ஆகிய இரண்டினதும் விமர்சனங்களை டிக்சித் மற்றும் நிருபமா ஆகிய இருவரும் சந்தித்தனர். ஆனால் இந்தியா இவ்விருவரையும் காப்பாற்றியது. ஏனெனில் இவர்கள் இந்தியாவின் அறிவுறுத்தல்களையே செயற்படுத்தியிருந்தனர். கொழும்பில் இவ்விருவரும் தமது பதவிக்காலத்தை முடித்து இந்தியாவிற்குத் திரும்பிய பின்னர் இவர்கள் இந்திய வெளியுறவுச் செயலர்களாக பதவி உயர்த்தப்பட்டனர்.

இவ்வாறானதொரு நிலையில், தற்போது சிறிலங்காவிற்கான இந்திய உயர் ஆணையாளராகப் பதவி வகிக்கும் வை.கே.சின்ஹா கூடிய விரைவில் இந்திய வெளியுறவுச் செயலராக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

சின்ஹா சர்ச்சைக்குரிய குணவியல்புகளைக் கொண்டிருப்பது போல் தெரியவில்லை. இவர் மிகவும் அமைதியான ஒருவராகவே காணப்படுகிறார். சிறிலங்காவின் இந்திய உயர் ஆணையாளராகச் செயற்பட்ட அசோக் காந்தாவை அடுத்தே சின்ஹா  கொழும்பிற்கு வருகை தந்தார். இவரது வருகையின் பின்னர் மகிந்தவின் ஆட்சியும் கைமாறியது.

அசோக் காந்தாவை  திருப்பி அழைக்குமாறு   இந்தியாவுக்கு மகிந்த மறைமுகமாக அழுத்தம் கொடுக்கப்பட்ட போதிலும், கொழும்பில் தனது கடமைகளை நிறைவு செய்யும் வரை அவரை இந்தியா திருப்பி அழைக்கவில்லை.  அசோக் காந்தாவைத் தொடர்ந்து கொழும்பிற்கான இந்திய உயர் ஆணையாளராக நியமிக்கப்பட்ட சின்ஹா, மகிந்த அரசாங்கத்துடன் சில சிக்கலான முக்கிய விடயங்கள் தொடர்பாக பேச்சுக்களை நடத்தாது அமைதி காத்தார்.

தனது ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு இந்தியப் புலனாய்வு அதிகாரி ஒருவர் முயற்சி செய்வதாக மகிந்த அரசாங்கத்தால் பழிசுமத்தப்பட்ட போதிலும், மகிந்த ஒருபோதும் சின்ஹாவையும் கொழும்பிலுள்ள அவரது உயர் ஆணையகத்தையும் பழிசுமத்தவில்லை. நரேந்திர மோடி கொழும்பிற்கு வருகை தந்த போது, மகிந்தவின் வேண்டுகோளுக்கு இணங்க, மகிந்தவிற்கும் மோடிக்கும் இடையிலான பேச்சுக்களுக்கு சின்ஹாவே அனுசரணையாளராகச் செயற்பட்டார்.

கூட்டு எதிர்க்கட்சி

ஜி.பி.எஸ் வரிச்சலுகை வழங்கப்படும் ஒரேயொரு தென்னாசிய நாடு சிறிலங்கா என பேராசிரியர் பீரிஸ் சுட்டிக்காட்டியிருந்தார். இந்த ஏற்பாடுகளின் கீழ் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு 7200 ஏற்றுமதிப் பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியும். இதனைப் பயன்படுத்துமாறு இந்திய நிறுவனங்களுக்கு சிறிலங்கா அழைப்பு விடுத்ததுடன் ஐரோப்பாவிற்கான ஒரு பாதையாக சிறிலங்கா அமைய வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

 ‘இந்த வரிச்சலுகை 2008ல் காலாவதியாகிய போதிலும் இதற்கான காலப்பகுதியை 2011வரை அதிகரிப்பதற்கான முயற்சியில் சிறிலங்கா ஈடுபட்டது’ சிறிலங்காவிற்குச் சேவையாற்றச் சென்ற TATA, Bajaj, Hero Honda, TVS,  தாஜ் விடுதிகள் மற்றும் அப்பலோ வைத்தியசாலை போன்றன சிறிலங்காவில் மிகவும் வெற்றிகரமான சேவைகளை ஆற்றியதாகவும் இவை சிறிலங்காவில் முதலீடு செய்துள்ளதாகவும் பீரிஸ் தெரிவித்தார். இந்தியா மற்றும் சிறிலங்கா ஆகிய இரண்டு நாடுகளும் தத்தமது நாடுகளின் வளங்களைக் கூட்டாகப் பயன்படுத்த வேண்டும் என பீரிஸ் தெரிவித்திருந்தார். – (ஐலண்ட் 2008-01-20)

இந்தியாவுடனான பரந்த பொருளாதார உடன்படிக்கையை ஆதரித்த பீரிஸ் தற்போது அதனை எதிர்ப்பதை அனுபவம் வாய்ந்த சின்ஹாவினால் சகித்துக் கொண்டிருக்க முடியாது. அதாவது பீரிஸ் போன்ற சிறிலங்காவின் அரசியல்வாதிகள் பரந்த பொருளாதார கூட்டு உடன்படிக்கை தொடர்பாக தமது சொந்த அரசியல் ஆதாயங்களுக்காக இந்தியாவை ஒரு துடுப்பாட்டப் பந்தாகப் பயன்படுத்துவதை இனியும் சின்ஹாவிவால் நிச்சயமாகப் பொறுத்துக் கொள்ள முடியாது.

இந்தியாவுடனான பரந்த பொருளாதார உடன்படிக்கைக்கு அப்பால், சீனாவுடன் மகிந்த அரசாங்கம் பல்வேறு உடன்படிக்கைகளை மேற்கொண்டது. சீனாவுடன் வர்த்தக சார் உடன்பாடு ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளதாக மைத்திரி-ரணில் அரசாங்கம் கூறுகின்றது. கொழும்பின் இந்த நகர்வு தொடர்பாக சிறிலங்காவின் கூட்டு எதிரணியானது எந்தவொரு எதிர்ப்பையும் வெளிப்படுத்தவில்லை. மகிந்தவால் கொழும்புத் துறைமுக நகரம் உருவாக்கப்படுவதற்கான அனுமதி சீனாவுக்கு வழங்கப்பட்ட போது இது தொடர்பில் எவரும் வாய்திறக்கவில்லை. இத்திட்டத்தை தற்போது எதிரணியில் அங்கம் வகிக்கும் ஜி.எல்.பீரிஸ் மற்றும் அவரது ஆதரவளர்கள் அனைவரும் ஆதரித்திருந்தனர்.

இந்தியாவுடன் எந்தவொரு திட்டங்கள் கைச்சாத்திடப்படும் போதும் சிறிலங்காவின் எதிரணியினர் இதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பார்கள். ஆனால் மகிந்தவின் செல்வாக்கிற்கு உட்பட்ட சீனாவுடன் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு இவர்கள் ஒருபோதும் எதிர்ப்புத் தெரிவிப்பதில்லை என்பது மிகத் தெளிவாகும். மைத்திரி-ரணில் அரசாங்கம் ஆட்சியை நடத்த ஆரம்பித்த போது சீனாவை விமர்சித்தனர். இந்நிலையில் சிறிலங்காவிற்கு உதவி வழங்குவதை சீனா மீள் பரிசீலனை செய்ய வேண்டியேற்படும் என சீனத் தூதுவர் அச்சுறுத்தியிருந்தார்.

சின்ஹாவின் அச்சுறுத்தல் அறிக்கையைத் தொடர்ந்து சில திருத்தங்களுடன் எட்கா உடன்பாடு மேற்கொள்ளப்பட வேண்டும் என மகிந்த கோரிக்கை விடுத்தார். சின்ஹாவின் ‘சிங்கக் குரலுக்கு’ மகிந்த அஞ்சுகிறார் போலும். தான் ஆட்சிக்கு வருவதற்கு மட்டுமல்லாது, தனக்கெதிராக முன்வைக்கப்பட்ட ஊழல் மோடிக் குற்றங்களிலிருந்து வெளிவருவதற்கு தனக்கு இந்தியாவின் உதவி தேவைப்படும் என்பதை மகிந்த உணர்ந்துள்ளார்.

இந்திய உயர் ஆணையாளராக கொழும்பில் செயற்பட்ட நிருபமா ராவுக்கு எதிராக அனுர பண்டாரநாயக்க குற்றச்சாட்டை முன்வைத்த போது, அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு மகிந்த கட்டளை வழங்கினார். சின்ஹா ஒரு அமைதியான ஆணையாளராக இருந்தாலும் கூட, எதிர்க்கட்சியினது நடவடிக்கை,  சின்ஹாவைக் கோபத்திற்கு உள்ளாக்கியிருக்கலாம் . மகிந்தவைச் சூழ தற்போது இந்திய எதிர்ப்பாளர்கள் உள்ள நிலையில், எதிர்காலத்தில் இந்தியாவின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதில் மகிந்த பெரும் நெருக்கடியை எதிர்நோக்குவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *