மேலும்

மூத்த சமூக -அரசியற் செயற்பாட்டாளர் சிவராஜா : நோர்வே தமிழ்3 இனால் மதிப்பளிப்பு

sivaraja (1)மூத்த சமூக -அரசியற் செயற்பாட்டாளரான சிவராஜா கணபதிப்பிள்ளை, நோர்வே தமிழ்3 வானொலியினால் மதிப்பளிக்கப்பட்டுள்ளார்.

நோர்வேயில் கடற்தொழில் ஆலோசகராகக் கடமையாற்றிய சிவராஜா கணபதிப்பிள்ளை, 1972 ம் ஆண்டுநோர்வேக்கு புலம்பெயர்ந்த காலம் முதல் தாயகத்தின் அபிவிருத்தித் திட்டங்களிற்கு உதவுவதிற்கு தன்னாலான பங்களிப்பினை வழங்கி வந்தவர். இவருடைய நீண்டகாலச் சமூக அரசியல் ஈடுபாட்டையும் சளைக்காத சேவை மனப்பாங்கினையும் கருத்திற் கொண்டு தமிழ்3 வானொலியினால் இம்மதிப்பளிப்பு இவருக்கு வழங்கப்பட்டது.

2010ம் ஆண்டு மார்ச் மாதம் இடம்பெற்ற இருதயசிசிச்சை ஒன்றின் பின்னர் மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டு எழுந்து நடமாட முடியாத நிலையில் வலுவிழந்து, பேசமுடியாத நிலையில் தனது காலத்தினை துரொம்சோ நகரில் கழித்து வருகிறார் சிவராஜா அவர்கள்.

தான் வாழும் காலத்தில் ஈடுபாட்டுடன் செயற்பட்டஅந்த சமூகச் செயற்பாட்டாளர் சிவராஜா அவர்களுக்கு அவர் வாழும் காலத்திலேயே அவரது பங்களிப்பினை அடையாளப்படுத்துவது, அவருக்கு நாம் வழங்கும் கௌரவமாகும், என தமிழ்3 வானொலி அவருக்குரிய மதிப்பளிப்பினை வழங்கும்போது தெரிவித்தது.

இந்தவாரம் தமிழ்3 தனது மூன்றாவது ஆண்டு நிறைவினைக் கொண்டாடிய‘சங்கமம் 2016’நிகழ்வின் போது மண்டபம் நிறைந்த மக்கள் முன்னிலையில் இந்த மதிப்பளிப்பு இடம்பெற்றது. ஓஸ்லோநகரில் வாழும் திரு. சிவராஜா அவர்களின் சகோதரி கமலராணி சேதார் அவர்கள் அரங்கத்தில் திரு.சிவராஜா அவர்களிற்குரிய விருதினைப் பெற்றுக்கொண்டார்.

Award

sivaraja (3)sivaraja (2)

நோர்வேஜிய பெரும்சமூகத்திலான செயற்பாடு

தாயகத்தில் தும்பளையைப் பிறப்பிடமாகக் கொண்டசிவராஜா பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியில் கல்வி கற்றுள்ளார். 972  ம் ஆண்டு தனது 27வது வயதில் நோர்வேக்கு புலம்பெயர்ந்தார்.

நோர்வேக்கு வந்த சிலகாலத்திலேயே நோர்வேஜிய பெரும்சமூக அரசியற் தளத்திலே ஈடுபட்ட இவர்  பலவருடங்களாகதீவிர இடதுசாரிக் கட்சியிலே (Rødt) இணைந்துசெயற்பட்டார். திரு.சிவராஜா. துரொம்சோ மாகாண மக்கள் சபை (County Council)- மற்றும் துரொம்சோ நகரசபை (Municipal council) ஆகியவற்றில் மக்கள் பிரதிநிதியாகதெரிவானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

sivaraja (4)

1980 முதல் 86 வரை கடற்தொழில் பற்றிய உயர்கல்வியை முடித்துக்கொண்ட சிவராஜா அவர்கள் துரொம்சோ கடற்தொழில் திணைக்களத்திலே ஆலோசகராக தனது பணியைத் தொடங்கினார். கடற்தொழில் வளஆலோசகராக இருந்தகாலத்தில் தாயகத்தில் கடல்வளஅபிவிருத்தியில் அக்கறையோடு செயற்திட்டங்களை முன்னெடுத்தார்.

தாயகம் நோக்கிய செயற்பாடும் யாழ் பல்கலைக்கழகத்தினுடனான கூட்டுத்திட்டமும்

தாயகத்தில் நன்கறியப்பட்டமறைந்த பேராசிரியர் மாமனிதர் துரைராஜாவுடன் இணைந்து நோர்வே துரொம்சோ பல்கலைக்கழகமும் யாழ் பல்கலைக்கழக மருத்துவபீடமும் இணைந்த செயற்திட்டத்தை வகுத்தவர். யாழ் பல்கலைக்கழகத்தில் கடற்தொழில் வளம் சார்ந்த பீடத்தினை ஆரம்பிக்க பலவழிகளில் உழைத்தவர் என்பது நினைவூட்டத்தக்கது.

பலதடவைகள் தாயகம் சென்றுஅங்கு பணியாற்றிய சிவராஜா 1990 ம் ஆண்டு தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்திற்கு பொறுப்பாக இருந்துள்ளார்.

sivarajah3

2005 ம் ஆண்டு தாயகத்தில் நிறுவப்பட்ட PDS – Planning Development sekretariatet- நிர்வாகத் திட்டமிடல் பணியகத்தில் பணிக்காகஅமர்த்தப்பட்டு மூன்று மாதங்கள் தாயகத்தின் சகலகடற்தொழில் மாவட்டங்களுக்கும் சென்று செயற்பட்டிருக்கிறார்.

நோர்வேயில் பல நோர்வேஜிய அமைப்புக்களில் ஈடுபாட்டுடன் செயற்பட்ட சிவராஜா, பல முக்கிய சமூகநலஅமைப்புக்களிலும் பொறுப்பான பதவிகளில் இருந்து பணியாற்றியுள்ளமை கவனத்திற்குரியது.

துடிப்புடன் நீண்டகாலமாக இயங்கிவந்த ஒருசமூகச்  செயற்பாட்டாளர் நடமாட முடியாமல் நோய்வாய்ப்பட்டிப்பது எம்மையெல்லாம் கவலையில் ஆழ்த்தும் விடயம். இன்றைய இந்த நிகழ்வில் சிவராஜா கணபதிப்பிள்ளையின் நீண்டகால சேவையையும் புலம்பெயர்வாழ் மற்றும் தாயகத்து தமிழர்களின் சமூக- அரசியல் –பொருளாதார மேம்பாடு சார்ந்த அவரது பங்களிப்பினை அடையாளப்படுத்தி, அவருக்கான மதிப்பளிப்பினை வழங்குவதில் பெருமையும் நிறைவும் அடைகிறோம்,எனத் தமிழ்3 வழங்கிய மதிப்பளிப்பில் தெரிவிக்கப்பட்டது.

– ராஜன் செல்லையா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *