மேலும்

ஒட்டுமொத்த தமிழர்களையும் அவமதிக்கிறதா மலேசியா? – பி.இராமசாமி

P-ramasamyமுன்னாள் சிறிலங்கா இராணுவத்தினரை மலேசியா தனது நாட்டின் பாதுகாப்புப் பணிகளுக்காக ஆட்சேர்த்துக் கொள்ளுமாயின், அங்கிருக்கும் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பயங்கர மீறல்களை மலேசியா அசட்டை செய்துள்ளது என்ற அவப்பெயரைச் சம்பாதிக்க வேண்டியேற்படும். 

இவ்வாறு மலேசியாவின் பினாங் மாகாண பிரதி முதல்வர் பி.இராமசாமி free Malaysia today ஊடகத்தில் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

இந்த நாட்டில் செயற்படும் பாதுகாப்பு அமைப்புக்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவது அதிகரித்துள்ளதுடன் பயிற்றுவிக்கப்பட்ட உத்தியோகபூர்வ பாதுகாப்பு பணியாளர்களின் எண்ணிக்கையும் வீழ்ச்சியடைந்துள்ளது. பாதுகாப்பு சம்பந்தப்பட்ட தொழில்களில் ஈடுபடுவதற்காக முன்னர் நேபாள நாட்டவர்கள் இணைக்கப்பட்ட போதிலும், இவர்கள் மலேசியாவிற்கு வருகை தருவதில் ஆர்வம் கொள்ளவில்லை.

இதேவேளையில், மலேசியாவில் நிலவும் பாதுகாப்பு சார் பணி வெற்றிடங்களை நிரப்புவதற்காக சிறிலங்காவின் முன்னாள் இராணுவ வீரர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்கான மலேசிய உள்விவகார அமைச்சின் அறிவித்தலை குற்றவியல் தடுப்பு வலைப்பின்னல் சங்கம் வரவேற்றுள்ளது.

இந்த நகர்வானது மலேசியாவின் பாதுகாப்பு சார் வெற்றிடங்களை நிரப்புவதற்கு உதவுவதோடு மட்டுமல்லாது, துறைசார்ந்த அனுபவங்களைக் கொண்ட பாதுகாப்புப் பணியாளர்களையும் நாட்டிற்குள் உள்ளீர்த்துக் கொள்வதற்கும் உதவும் என குற்றவியல் தடுப்பு வலைப்பின்னல் சங்கத்தின் தலைவர் அலெக்ஸ் சந்திரன் கிருஸ்ணன் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறிலங்காவின் முன்னாள் இராணுவ வீரர்கள் விரிவான பயிற்சிகள் மற்றும் யுத்தகள அனுபவத்தைக் கொண்டிருப்பதால், இவர்கள் இந்த நாட்டின் பாதுகாப்பு அமைப்புக்களின் காத்திரமான அபிவிருத்திகளுக்கு பங்களிப்பு வழங்கக்கூடிய நிலையில் இருப்பார்கள் எனவும் கூறப்படுகிறது.

இதனை மலேசிய உள்விவகார அமைச்சு செயற்படுத்தினால், சிறிலங்காவின் முன்னாள் இராணுவ வீரர்கள் மலேசியாவிற்கு வருகை தருவது நிச்சயமாகும். இதனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களாகச் செயற்பட்டுப் பின்னர் சிறிலங்கா இராணுவத்தில் இணைந்து பணியாற்றவர்களை மலேசியாவிற்கு அழைக்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. எனினும், இந்த விவகாரம் தொடர்பில் அலெக்ஸ் தனது ஆதரவை வழங்கியுள்ளதானது பல்வேறு வினாக்களைத் தோற்றுவித்துள்ளது.

மலேசியாவின் பாதுகாப்பு சேவைகளில் காணப்படும் பணி வெற்றிடங்களை நிரப்புவதற்காக சிறிலங்காவின் முன்னாள் வீரர்கள் அழைக்கப்படுவார்களாயின்  இந்த நாடு பல்வேறு தேவையற்ற விளைவுகளைச் சந்திக்க வேண்டியேற்படும். முன்னாள் புலி உறுப்பினர்கள் பாதுகாப்புப் பணிக்காக இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என உறுதிப்பாடு வழங்கப்பட்டிருப்பினும் கூட, இவர்களில் எத்தனை பேர் சிறிலங்கா இராணுவத்தில் பணியாற்றுகின்றனர் என்கின்ற கேள்வி எழுப்பப்படுகிறது.

2009ல் சிறிலங்காவின் உள்நாட்டு யுத்தம் முடிவடைவதற்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் சிலர் சிறிலங்கா இராணுவத்தில் இணைந்திருக்கலாம். எனினும் இவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவானதாகும். இது தொடர்பான தகவலை அலெக்ஸ் எங்கிருந்து பெற்றுக் கொண்டார் என்பதோ அல்லது இவருக்கு சிறிலங்கா விவகாரங்கள் தொடர்பாக அவ்வளவு தூரம் தெளிவான விளக்கங்கள் உள்ளதா என்பதை என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.

சிறிலங்காவின் வடக்கு கிழக்கில் அதாவது தமிழ் மக்களின் பாரம்பரிய நிலத்தில் சிறிலங்கா இராணுவப் படைகளால் இனப்படுகொலை மேற்கொள்ளப்பட்டது. இதில் பல ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர் என்பதை முழு உலகமும் நன்கறியும். இதற்கும் மேலாக, சிறிலங்கா இராணுவப் படையினரால் ஆயிரக்கணக்கான தமிழ்ப் பெண்கள் திட்டமிட்ட ரீதியில் மிகக் கொடூரமாக பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்டனர்.

சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தத்தின் போதும் அதற்குப் பின்னரும் கூட, அந்நாட்டு இராணுவப் படையினரால் தமிழ்ப் பெண்கள் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்ட பல்வேறு சம்பவங்களை மனித உரிமை அமைப்புக்களின் அறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன.

சிறிலங்கா இராணுவத்தால் இழைக்கப்பட்ட இவ்வாறான சித்திரவதைகளை மலேசியா கருத்திற்கொள்ளவில்லை என அலெக்ஸ் கருதுகிறாரா?

தமிழராகிய அலெக்ஸ், சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்கள் அனுபவித்த பல்வேறு மீறல்கள் மற்றும் வடுக்கள் தொடர்பில் எவ்வித உணர்வற்றவராகவும் இருக்க முடியுமா?

இவ்வாறான மனிதாபிமானத்திற்கு எதிரான பல்வேறு மீறல்களில் சிறிலங்காவின் முன்னாள் இராணுவ வீரர்கள் பலர் ஈடுபட்டனர். தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மீறல்கள் தொடர்பாக அனைத்துலக சமூகம் தனது விசாரணையை மேற்கொள்வதற்கு சிறிலங்கா அனுமதிக்க வேண்டும் என தற்போது ஐ.நா மனித உரிமைகள் சபை வலியுறுத்தி வருகிறது.

முன்னாள் சிறிலங்கா இராணுவத்தினரை மலேசியா தனது நாட்டின் பாதுகாப்புப் பணிகளுக்காக ஆட்சேர்த்துக் கொள்ளுமாயின், அங்கிருக்கும் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பயங்கர மீறல்களை மலேசியா அசட்டை செய்துள்ளது என்ற அவப்பெயரைச் சம்பாதிக்க வேண்டியேற்படும்.

மலேசியா வாழ் தமிழ் மக்கள் சிறிலங்காப் படையினரை ஆட்சேர்ப்புச் செய்யும் நடவடிக்கையை வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கமாட்டார்கள் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். இவ்வாறானதொரு நகர்வானது மலேசியா மற்றும் சிறிலங்கா வாழ் தமிழ் மக்களின் நலனையும் அவர்களது கௌரவத்தையும் பாதிக்கின்ற ஒரு செயல் என்பதை மலேசிய அரசாங்கம் புரிந்துகொள்வதுடன் இதற்கான அனுமதியை வழங்காது என நான் நம்புகிறேன்.

மறுபுறத்தே, தமிழ் மக்களின் துன்ப துயரங்களிலிருந்து சுயலாபம் ஈட்டலாம் என அலெக்ஸ் ஒருபோதும் நினைக்கக் கூடாது. இதற்குப் பதிலாக அலெக்ஸ் தமிழ் மக்களின் துன்பங்களைக் களைவதில் கூடிய கவனம் எடுக்க வேண்டும்.

ஒரு கருத்து “ஒட்டுமொத்த தமிழர்களையும் அவமதிக்கிறதா மலேசியா? – பி.இராமசாமி”

  1. ரவி/சுவிஸ் says:

    ஏன் மலேசியாவில் பாதுகாப்புக்கு என்ன பிரச்சனை, உள்நாட்டு மக்களே தங்கள் நாட்டை பாதுகாப்பார்கள், வேறு நாட்டவர்கள் பணத்தை குறிவைத்தே செயல்படுவார்கள், மலேசியாவில் மக்களுக்கு தட்டுப்பாடா, அலெக்ஸ் சந்திரன் கிறிஸ்ணன் இந்திய உளவு நபரா , அல்லது ஏதும் பணம் வாங்கி விட்டு இப்படிக் கூறினாரா, எதுஎப்படியோ, இன்று தமிழனை அழிக்க வேறொரு நாட்டான் தேவை இல்லை, தமிழனே போதும், ஏனெனில் சிலைகளைக் கும்பிடும் மக்கள் என்றும் சிலைகலாகவே இருப்பார்கள்,===============

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *