மேலும்

வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லை என்கிறார் பரணகம

Maxwell Parakrama Paranagamaபொறுப்புக்கூறும் பொறிமுறைகளில் வெளிநாட்டு நீதிபதிகள் தீர்ப்புக் கூறுவதை தாம் அனுமதிக்கப் போவதில்லை என்று காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வல் பரணகம தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக மேற்கொள்ளப்பட்ட காணாமற்போனோர் குறித்த விசாரணைகள், நேற்றுடன் முடிவடைந்தன.

சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் நேற்று நடந்த விசாரணைகளின் முடிவில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வல் பரணகம-

காணாமற்போனோரை கண்டறியும் ஆணைக்குழு மூன்று கட்டங்களாக விசாரணைகளை நெறிப்படுத்தியுள்ளது. முதலில் மக்களுடைய முறைப்பாடுகளை உள்வாங்கியது. இதன்போது எழுத்து மூலமாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன.

அந்த தரவுகளை அடிப்படையாக வைத்து காணாமற்போனோரின் உறவுகளிடம் வாய்மூலமான பதிவுகளை ஆணைக்குழு பதிவு செய்தது.

இவ்வாறு பதியப்பட்ட தரவுகளின் பின்னர் அதனை விசாரணை செய்வதற்காக ஒரு சிறப்பு விசாரணைக்குழு ஒன்று நியமிக்கப்படும். சிறிலங்கா அதிபரின் ஆற்றுகையின் கீழேதான் அந்த விசாரணைக்குழு உருவாக்கப்படும். அந்த விசாரணைக்குழு தான் குறித்த விசாரணைகளை மேற்கொள்ளும்.

தற்போது காணாமற்போனவர்களின் உறவினர்கள் வழங்கும் முறைப்பாடுகள் அனைத்தும் குற்றச்சாட்டுக்களேயாகும். இந்த குற்றச்சாட்டுக்களை வைத்து யார் குற்றவாளிகள் என்பதை விசாரணை செய்வதே சிறப்பு விசாரணைக்குழுவின் பணியாகும்.

இத்தகைய சிறப்பு விசாரணைக்குழுவின் முடிவுகள் மீண்டும் எமது ஆணைக்குழுவிடம் வழங்கப்படும். அவ்வாறு வழங்கப்படும் முடிவுகளை நாம் சிறிலங்கா அதிபரிடம் கையளிப்போம். அதன்பின்னர் அவரே தீர்மானிப்பார்.

எனினும் உறவுகளால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களில் நிரூபிக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதற்கான பரிந்துரையை அறிக்கை மூலம் சிறிலங்கா அதிபரிடம் முன்வைப்போம்.

எமது ஆணைக்குழுவிடம் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

முதலாவதாக இராணுவத்தினர் மீதான குற்றச்சாட்டுக்கள் . இரண்டாவதாக விடுதலைப் புலிகள் மீதான குற்றச்சாட்டுக்கள்.  மூன்றாவதாக பொதுவான கடத்தல்கள் . (பின்னணியில் ஒட்டுக்குழுக்கள்)

இத்கைய குற்றச்சாட்டுக்கள் இடத்துக்கிடம் மாவட்டத்துக்கு மாவட்டம் வேறுபட்டவையாக உள்ளன. இந்திய இராணுவத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களும் உள்ளன. எனினும் அதற்கான தீர்வுகள் தொடர்பாக எனக்கு அறிக்கையிடக்கூடிய ஆற்றல் இல்லை.

மேலும் பொறுப்புக்கூறல் பொறிமுறைகளுக்கு  வெளிநாட்டு நீதிபதிகள் வரவேண்டிய அவசியமில்லை. நீதி வழங்கலில் வெளிநாட்டு நீதிபதிகள் தலையிடுவதை நான் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. ஆனால் எமது சட்ட ரீதியான செயற்பாடுகளுக்கு அவர்களின் உதவி பெறப்பட வேண்டும்.

எமது ஆணைக்குழுவுக்கு மூன்று மாத பதவி நீடிப்பே வழங்கப்பட்டுள்ளது. அதற்குள் எல்லா முறைப்பாடுகளையும் விசாரிப்பது சாத்தியமற்றது.

காணாமற்போனவர்களை கண்டறிவதற்கான அமைச்சு ஒன்று உருவாக்கப்படவுள்ளது. அந்த அமைச்சு உருவாக்கப்பட்டதும் அதனிடம் எமது சகல அறிக்கைகள் விபரங்களும் ஒப்படைக்கப்படும்”  என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *