மேலும்

மறைந்து கிடந்த மகிந்த அரசு பெற்ற 1.46 ரில்லியன் ரூபா கடன்கள் – ஒரு ஆண்டுக்குப் பின் அம்பலம்

ravi-karunanayakeசிறிலங்காவின் முன்னைய அரசாங்கத்தினால் பெறப்பட்ட மேலும் 1.46 ரில்லியன் ரூபா கடன்கள் தற்போது கண்டறியப்பட்டுள்ளதாக, சிறிலங்காவின் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் தகவல் வெளியிட்ட அவர்,

”முன்னைய அரசாங்கத்தினால், பெற்றுக்கொள்ளப்பட்ட மேலும் 1.46 ரில்லியன் ரூபா கடன்கள் நிதியமைச்சினால் கண்டறியப்பட்டுள்ளன.

இதைவிட மேலும், 5.4 பில்லியன் ரூபா சமுர்த்தி அமைச்சினால் செலுத்தப்பட வேண்டிய கடனாக இருப்பதும், அதுபற்றிய கணக்குகள் ஏதும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.

இந்தக் கடன்களில் 60 வீதம் வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்டவையாகும். பெறப்பட்ட கடன் வட்டியுடன் சேர்த்து செலுத்தப்பட வேண்டியுள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்துடன் கடன்கள் தொடர்பான நெருக்கமான தொடர்பை வைத்திருந்த அனைத்துலக நாணய நிதியத்துக்கும் இதுபற்றித் தெரியவில்லை.

இதுதொடர்பாக அனைத்துலக நாணய நிதியத்துக்கு அறிவிக்கப்பட்டு, விசாரணைகளை மேற்கொள்ள தடயவியல் குழுவொன்றை அனுப்புமாறு கேட்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் என்ற ரீதியில் இன்னொரு நாட்டுடன் செய்துகொண்ட உடன்பாடுகளை முறித்துக்கொள்ள முடியாது.

இவ்வாறான சூழ்நிலையில் கடந்த அரசாங்கத்தின் கடன்கள் எனக் கூறி அவற்றை செலுத்தாமல் இருக்கவும் முடியாது.

எனவே மக்களுக்கு சுமையை ஏற்படுத்தாது எவ்வாறு இவற்றை ஈடு செய்வது என்பதை அமைச்சரவையிலேயே முடிவு செய்ய வேண்டும்.

மகிந்த ராஜபக்ச நிர்வாகத்தில் பல திட்டங்கள் இறுதி நேரத்தில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதியைப் பெற்று உரிய நடைமுறைகள் பின்பற்றப்படாமல் செலவு செய்யப்பட்டுள்ளன.

இவற்றுக்கு முன்னாள் நிதியமைச்சர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் நிதியமைச்சின் முன்னாள் செயலர் பீ.பி.ஜயசுந்தர ஆகியோரே பொறுப்புக் கூறவேண்டும்.

கடந்த அரசாங்கத்தின் இந்த மோசடிகளை நாடாளுமன்றத்திலும், அனைத்துலகத்துக்கு வெளிப்படுத்த வேண்டும்.

கண்டுபிடிக்கப்பட்ட செலவினங்கள் குறித்த விரிவான தகவல்களை விரைவில் வெளியிப்படும்” என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *