மேலும்

கட்சிக்குள் மகிந்த அணியினரை ஓரம்கட்டும் மைத்திரி – 26 புதிய அமைப்பாளர்கள் நியமனம்

maithriசிறிலங்கா சுதந்திரக் கட்சியில் மகிந்த ஆதரவு அணியைச் சேர்ந்த அமைப்பாளர்களை அதிரடியாக நீக்கியுள்ள, கட்சியின் தலைவரும் சிறிலங்கா அதிபருமான மைத்திரிபால சிறிசேன, புதிதாக 26 மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்களை நியமித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ச அணியினர் தனியான கட்சி ஒன்றை ஆரம்பிக்கும் முயற்சியில் இறங்கியிருந்த போதிலும், இன்னமும் அத்தகைய கட்சியை உருவாக்கவில்லை.

இந்தநிலையில் நேற்று கண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய மகிந்த ராஜபக்ச தாம் ஒருபோதும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியை விட்டு வெளியேறப் போவதில்லை என்று கூறியிருந்தார்.

இதையடுத்தே, 26 மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்களை புதிதாக நியமித்துள்ளார் மைத்திரிபால சிறிசேன.

மகிந்த ஆதரவாளர்களில் முக்கியமானவர்களான பிரசன்ன ரணதுங்க, துமிந்த சில்வா போன்றவர்கள் அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குப் பதிலாக மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

slfp-organizers

கொலன்னாவ தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து துமிந்த சில்வா நீக்கப்பட்டு, அந்தப் பதவிக்கு பிரசன்ன சோலங்காராச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.

மினுவாங்கொட தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து பிரசன்ன ரணதுங்க நீக்கப்பட்டு, அவரது சகோதரரான ருவான் ரணதுங்க அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

ஹேவாஹெட்ட தொகுதி அமைப்பாளராக அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க அறிவிக்கப்பட்டுள்ளார்.

மகரகம தொகுதி பிரதம அமைப்பாளர் பதவியில் இருந்து காந்தி கொடிக்கார நீக்கப்பட்டு, மேல்மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரியவிடம் அந்தப் பதவி ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்சவின் மற்றொரு ஆதரவாளரான தனசிறி அமரதுங்க, தெகிவளை தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதுடன் அந்தப் பதவிக்கு கீர்த்தி உடவத்தை நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிதாக நியமிக்கப்பட்ட 26 சுதந்திரக் கட்சி மாவட்ட, தொகுதி அமைப்பாளர்களுக்கும், கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன இன்று காலை நியமனக் கடிதங்களை வழங்கினார்.

மைத்திரிபால சிறிசேனவின் இந்த நகர்வு மகிந்த ராஜபக்ச சுதந்திரக் கட்சிக்குள் வலுப்பெறுவதை தடுக்கும் ஒரு நடவடிக்கையாகவே கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *