மேலும்

தாஜுதீன் கொலை சந்தேகநபர்களை கைது செய்ய உத்தரவு – ராஜபக்ச குடும்பத்துக்கு அடுத்த பொறி?

Mahinda-Rajapaksa-ரக்பி வீரர் வசீம் தாஜுதீனின் மரணம், குற்றவியல் சட்டத்தின் 296ஆவது பிரிவின் கீழ், கொலை போலத் தோன்றுவதாகத் தெரிவித்துள்ள கொழும்பு மேலதிக நீதிவான் நிசாந்த பீரிஸ், சந்தேக நபர்களைக் கைது செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, குற்றப் புலனாய்வுத் துறையினருக்கு, நீதிவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

முன்னாள் சட்டமருத்துவ அதிகாரி ஆனந்த சமரக்கோன், மற்றும் இப்போதைய சட்டமருத்துவ அதிகாரி அஜித் தென்னக்கோன் ஆகியோரால் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு பிரேத பரிசோதனை அறிக்கைகளையும், மரபணுச் சோதனை அறிக்கைகள், குற்றப்புலனாய்வுத் துறையினர் வழங்கியுள்ள தகவல்கள், சிசிடிவி காணொளி்ப் பதிவுகள் என்பனவற்றின் அடிப்படையிலேயே, தாஜுதீன் மரணம் கொலை என்று தோன்றுவதாக நீதிவான் குறிப்பிட்டார்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் அனைவரையும் உடனடியாக கைது செய்யும்படி,  குற்றப்புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளருக்கு, கொழும்பு மேலதிக நீதிவான் உத்தரவிட்டார்.

இதையடுத்து, இந்தக் கொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் முக்கிய அரசியல் புள்ளிகள் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தக் கொலைக்கும் ராஜபக்ச குடும்பத்துக்கும் நெருங்கிய தொடர்புகள் இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.

குறிப்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச உள்ளிட்டோர் இந்தச் சம்பவத்துடன் தொடர்புபட்டிருப்பதாகவும், இவர்கள் விரைவில் கைது செய்யப்படுவர் என்றும் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்தநிலையில், நீதிமன்ற உத்தரவையடுத்து, சந்தேகத்தின் அடிப்படையில் ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *