மேலும்

வடக்கு,கிழக்கு இணைந்த ‘சமஸ்டி’ கட்டமைப்பின் கீழ் அதிகாரப்பகிர்வு – சமூக அபிவிருத்தி ஆய்வு நிறுவனம்

trinco-submissionபுதிய அரசியலமைப்பில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த, ஒரு தனி அலகு என்னும் அடிப்படையில் ‘சமஸ்டி’ கட்டமைப்பின் கீழ் அதிகாரப் பகிர்வு இடம்பெற வேண்டும் என்று, சமூக அபிவிருத்தி ஆய்வு நிறுவனம், யோசனை ஒன்றை சமர்ப்பித்துள்ளது.

புதிய அரசியலமைப்புக்கான யோசனைகளைப் பெற்று வரும் குழுவின் அமர்வு நேற்று இரண்டாவது நாளாக திருகோணமலையில் இடம்பெற்ற போது, சமூக அபிவிருத்தி ஆய்வு நிறுவனத்தின் சார்பில், அரசியல் ஆய்வாளர் ஆ.யதீந்திரா யோசனையைச் சமர்ப்பித்திருந்தார்.

சமூக அபிவிருத்தி ஆய்வு நிறுவனத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனையில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு-

தேசிய அரசாங்கம் ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் உறுதியளித்தற்கு அமைவாகவும் பின்னர் அரசாங்கத்தால் இணையனுசரனை வழங்கி ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜெனிவா பிரேணையின் (operative paragraph) 16வது பந்திக்கு அமைவாகவும் புதிய அரசியல் யாப்பொன்றை உருவாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் இலங்கை அரசாங்கம் ஒரு விடயத்தை பகிரங்கமாக ஏற்றுக் கொள்கின்றது அதாவது, 1978ல் கொண்டுவரப்பட்டு, தற்போதும் நடைமுறையில் இருக்கின்ற அரசியல் யாப்பானது, இனத்துவ பாரபட்சங்களையும் நியாயமற்ற விடயங்களையும் உள்ளடக்கியிருக்கிறது என்பதாகும்.

மேலும் இதற்கு முன்னர் கொண்டு வரப்பட்ட இரண்டு அரசியல் யாப்புக்களும், இலங்கைக்குள், இலங்கையர்களை உருவாக்குவதில் தோல்வியடைந்து விட்டது என்பதையும் அரசாங்கம் ஏற்றுக் கொண்டிருகின்றது. அந்த வகையில் புதிய அரசியல் யாப்பு இலங்கையில் வடக்கு கிழக்கை தங்களின் பூர்வீக வாழ்விடமாக கொண்டு வாழ்ந்துவரும் தமிழ் மக்களின் மனக்காயங்களை நிவர்த்தி செய்து, அவர்கள் தங்களை தனித்துவமாக உணரும் அதே வேளை இலங்கையர்களாகவும் உணரக் கூடியவாறான ஏற்பாடுகளை உள்ளடக்கியிருக்க வேண்டும்.

அவ்வாறானதொரு அரசியல் யாப்பே சிங்கள – தமிழ் இனச் சமூகங்களை இலங்கையர்களாக இணைக்கும். ஏனெனில் புதிய அரசியல் யாப்பிற்கான தேவை என்பது வெறுமனே ஒரு யாப்பு இலங்கைக்கு தேவை என்னும் அடிப்படையில் எழுந்த ஒன்றல்ல மாறாக, இலங்கையில் புரையோடிப் போயுள்ள இனமுரண்பாட்டிற்கு முற்றுப்புள்ளியிட்டு, இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை உருவாக்கும் நோக்கிலேயே கொண்டு வரப்படுவதாகவே நாங்கள் புரிந்து கொள்கின்றோம்.

trinco-submission

அந்த வகையில் அரசியல் தீர்வு அல்லது அதிகாரப் பகிர்வு தொடர்பான பரிந்துரை :

அதிகாரப் பகிர்வானது, வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த, ஒரு தனி அலகு என்னும் அடிப்படையில் ‘சமஸ்டி’ கட்டமைப்பின் கீழ் அமைந்திருக்க வேண்டும். இலங்கையின் இன முரண்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு சிறந்த தீர்வு சமஸ்டி தான் என்று 1978 அரசியல் யாப்பை அங்குரார்பணம் செய்து வைத்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனவே ஒப்புக்கொண்டிருக்கின்றார். அவர் ஓய்வு பெற்றதன் பின்னர் 1995 ஆம் ஆண்டு த சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.

திரு.ஜே.ஆர் ஜெயவர்த்தனவின் கூற்றுக்கு அப்பால் வேறு எதனையும் கூற வேண்டியதில்லை. எனினும் ‘சமஸ்டி’ தொடர்பில் தென்னிலங்கையில் ஒரு வகையான அச்சம் கலந்த பதட்டம் நிலவுகிறது. சிங்கள மக்கள் மத்தியில் சமஸ்டி என்பது பிரிவினையாகவே புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. இதற்கு இலங்கை தமிழரசு கட்சியும் ஒரு காரணம். தமிழ் மக்கள் மத்தியில் இலங்கை தமிழரசு கட்சியென்று தங்களை அடையாளப்படுத்திய தமிழ் தலைவர்கள், சிங்கள மக்கள் மத்தியில் தங்களை ‘பெடரல்’ கட்சி என்றவாறு அடையாளம் காட்டினர். இதன் மூலம் தமிழர்களுக்கான தனி அரசு என்பதும் ‘சமஸ்டி’ என்பதும் ஒன்றுதான் என்று, சிங்கள மக்கள் புரிந்துகொள்ளும் நிலைமை ஏற்பட்டது.

ஆனால் அறிவு பூர்வமாக சிந்திக்கும் சமூகங்கள் சமஸ்டி எண்ணக் கருவை நோக்கியே பயணித்திருக்கின்றன. இதன் மூலமாகவே அந்த நாடுகளில் எழக் கூடிய பிரிவினைக் கோரிக்கைகள் வெற்றிகரமாக தோற்கடிக்கப்பட்டன. இதற்கு தெற்காசியாவின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவை ஒரு சிறந்த உதாரணமாகக் கொள்ளலாம். ஆனால் இலங்கையின் பெரும்பான்மையின அரசியல் தலைவர்கள் அறிவாற்றலிலும், இராஜதந்திர அரசியலில் மிகவும் முதிர்ச்சி பெற்றவர்களாக இருந்த போதிலும் கூட, சில தேவையற்ற அச்சங்களால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இந்த அரசியல் பின்னணியின் சிக்கலான தன்மையை ஏற்றுக் கொள்ளும் நாம், அரசியல் பதட்டங்களை தவிர்க்கும் ஒரு மாற்று உபாயமாக, சமஸ்டி என்னும் சொல்லை வெளிப்படையாக பயன்படுத்தாத வகையில் ஆனால் அந்தச் சொல்லின் வழியாக எதிர்பார்க்கப்படும் உள்ளடக்கங்களில் கவனம் செலுத்த முடியும் என்பதை பரிந்துரைக்கிறோம். இதற்கு உதாரணமாக இந்திய அதிகாரப் பகிர்வு முறைமையை கருத்தில் கொள்ளலாம்.

சமஸ்டிதான் ஆனால் கட்டாயமாக சமஸ்டி என்றில்லை என்னும் அளவுகோலின் அடிப்படையிலேயே இந்திய அரசியல் யாப்பு அமைந்திருக்கிறது. இதே போன்றுதான் ஒற்றையாட்சி என்னும் சொற் பிரயோகம் சிங்கள மக்களால் ஒருவாறும் தமிழ் மக்களால் வேறு விதமாகவும் நோக்கப்படுகிறது. ‘ஒற்றையாட்சி என்பது, சிங்கள மக்கள் மத்தியில் அவர்களின் தனித்துவமாகவும் பாதுகாப்பாகவும் புரிந்துகொள்ளப்படுகின்ற அதே வேளை,  தமிழ் மக்களோ ஒற்றையாட்சி என்னும் சொற்பிரயோகத்தை தங்களின் மீதான ஒடுக்குமுறையாகவும், தங்களின் தனித்துவத்தை சிதைக்கும் ஒன்றாகவும் புரிந்துகொள்கின்றனர்.

எனவே புதிய அரசியல் யாப்பு இவ்வாறான இருவேறு புரிதல்களுடன் வாழும் இனச் சமூகங்களை எவ்வாறு திருப்திப்படுத்தப் போகிறது? எனவே இங்கும் ஒற்றை ஆட்சிதான் ஆனால் ஒற்றையாட்சி மட்டும்தான் என்றில்லை என்னும் விளக்கத்தை கொடுக்கக் கூடியவாறு புதிய அரசியல் யாப்பின் ஏற்பாடுகள் அமைந்திருக்க வேண்டும். இதற்கு பேராசிரியர் லக்சிறி பெர்னாண்டோ எடுத்தாண்டிருக்கும் ‘பெருப்பித்துக் கொள்ளக் கூடிய அதிகாரப்பகிர்வுடன் கூடிய ஒற்றையாட்சி  (Extensive Develotion) என்பதை ஒரு சிறந்த பரிந்துரையாக கொள்ள முடியும். இவ்வாறானதொரு ஏற்பாடு அரசியல் யாப்பில் இடம்பெறுமாக இருந்தால் ஒற்றையாட்சியை விரும்புவர்களுக்கு ஒற்றையாட்சியும் அதிகாரப் பகிர்வை விரும்புவர்களுக்கு அதிகாரப்பகிர்வும் ஒரே நேரத்தில் தெரியும்.

இதற்கும் இந்திய அரசியல் யாப்பின் ஏற்பாடுகளை கருத்தில் கொள்ளலாம். அவசரகால நிலைமைகளின் போது மட்டுமே, இந்திய சமஸ்டி அரசியல் சாசனம், ஒற்றையாட்சித் தன்மையை அல்லது நாடாளுமன்ற தன்மையை பெறுவதாக, இந்திய அரசியல் சாசனத்தை எழுதிய குழுவின் தலைவரான கலாநிதி அம்பேத்கார் குறிப்பிடுகின்றார். மூன்று விதமான அவசரகால நிலைமைகளை பற்றி அம்பேத்கார் குறிப்பிட்டிருக்கின்றார்.

வடக்கு கிழக்கு இணைப்பிற்கான அவசியப்பாடு:

வடக்கு கிழக்கு இணைப்பு என்பது தமிழ் மக்களின் சார்பிலான அடிப்படையான அரசியல் கோரிக்கையாக இருந்து வருகிறது. 1987 இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் வடக்கு – கிழக்கு என்பது தமிழ் பேசும் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்துவரும் நிலப்பகுதி என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டு, அது தற்காலிகமாக இணைக்கவும்பட்டது. இந்திய – இலங்கை ஒப்பந்தம் என்பது ஒரு சர்வதேச உடன்பாடு. அதனை எழுந்தமானமாக எவரும் மறுத்தலிக்க முடியாது. இதன் மூலம் வடக்கு கிழக்கு இணைப்பு என்பது இலங்கைக்கு அச்சுறுத்தலான விடயமல்ல என்பதும் அப்போதைய அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 2006 வரையில் வடக்கு கிழக்கு மாகாண நிர்வாகம் என்பது ஒரு தனி அலகாகவே இருந்தது. இதன் மூலமும் வடக்கு கிழக்கு ஒரு நிர்வாக அலகாக இயங்குவது ஒரு பிரச்சினைக்குரிய விடயமல்ல என்பது நடைமுறை ரீதியிலும் நிரூபணமானது.

2006இல் வடக்கு கிழக்கு இணைப்பு சட்டரீதியில் வலுவற்றது என்னும் தீர்ப்பின் அடிப்படையில் பிரிக்கப்பட்டது. அப்போதும் இணைக்கப்பட்ட முறைமை தவறு என்று சொல்லப்பட்டதே தவிர, இணைத்தது தவறு என்று குறிப்பிடப்படவில்லை. ஆனால் முன்னைய ஆட்சிக் காலத்தில் நீதித்துறை சுயாதீனமாக இயங்கியிருக்கவில்லை. அது முற்றிலும் அரசியல் மயப்படுத்தப்பட்டது என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்ற விடயம். OISL அறிக்கையிலும் முன்னைய ஆட்சியில் நீதித்துறை சுயாதீனத்தை இழந்துவிட்டது என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவ்வாறாயின் சுயாதீனமற்ற ஒரு நீதித்துறையின் கீழ் அரசியல் காரணங்களுக்காகவே மேற்படி பிரிப்பு மேற்கொள்ளப்பட்டது என்னும் முடிவுக்கே புதிய அரசாங்கம் வர வேண்டும்.

அதிகாரப்பகிர்வு தொடர்பில் புதிய அரசியல் யாப்பு உட்கொண்டிருக்கும் விடயம், வடக்கு கிழக்கை ஒரு அலகாக கருதுவதாக அமைந்திருக்க வேண்டும் என்னும் அடிப்படையிலேயே மேற்படி தகவல்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன. மேலும் வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் ஒரு தவறான புரிதல் நிலவுகிறது. வடக்கு கிழக்கு இணைப்பு என்பது தமிழர்களின் தாயகக் கோட்பாட்டின் விளைவு என்று சிலர் எண்ணலாம். அது தவறானது.

ஒரு மக்கள் கூட்டம் ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியை தங்களின் தாயகமாக கருதுவது அவர்களின் உணர்வு சார்ந்தது. அப்படி அவர்கள் உணர்ந்தால், அதனை எதேச்சாதிகாரத்தால் தடுக்கவும் முடியாது. ஆனால் வடக்கு கிழக்கு இணைப்பிற்கான கோரிக்கை தாயகக் கோட்பாட்டின் அடிப்படையைக் கொண்டதல்ல. ஏனெனில் 1957ஆம் ஆண்டு பண்டா செல்வா ஒப்பந்தத்தில் வடக்கு கிழக்கு இணைப்பு பற்றி குறிப்பிடப்படவில்லை. அதே போன்று 1965 டட்லி செல்வா ஒப்பந்தத்தில் அது குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. அப்போதெல்லாம் உணரப்படாத ஒரு விடயம் பின்னர் ஏன் உணரப்பட்டது?

1970களின் பின்னர் கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட குடியேற்றங்களால் ஏற்பட்ட அச்சுறுத்தலின் காரணமாகவே, வடக்கு கிழக்கு இணைப்பிற்கான கோரிக்கை தமிழ் மக்கள் மத்தியில் வலுப்பெற்றது. அதனை இந்திய-இலங்கை ஒப்பந்தம் தற்காலிகமாக சாத்தியப்படுத்தியது. 1970களின் பின்னர் தமிழ் மக்களின் அரசியல் மற்றும் சமூக இருப்பை கேள்விக்குள்ளாக்கும் வகையில் திட்டமிட்ட குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன என்பதை காலம்சென்ற சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்கள் ஏற்றுக் கொண்டுமிருக்கிறார். அவரது 1988இன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அதனை ஏற்றுக் கொண்டார். 1970களிலிருந்து அரசினால் மேற்கொள்ளப்பட்ட குடியேற்றங்கள் அனைத்தையும் கலைத்துவிடுவதாக அவர் வாக்குறுதியளித்திருந்தார். இதன் மூலம் சிறிலங்கா அரசு திட்டமிட்ட குடியேற்றங்களை மேற்கொண்டு தமிழ் சமூகத்தை பலவீனப்படுத்தின் ஜனநாயக பிரதிதித்துவத்தை சிதைக்க முற்பட்டது என்னும் உண்மை சிங்களத் தலைவராலேயே ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைப்பது சாத்தியமில்லை எனின் – கிழக்கு தமிழ் மக்களுக்கான தனியான நிர்வாக அலகு அவசியம்.

இன்றைய தென்னிலங்கையின் பதட்டங்களை கருத்தில் கொண்டு, வடக்கு – கிழக்கு இணைப்பு தற்போது சாத்தியமில்லை என்று அரசாங்கம் கருதினால், கிழக்கில் பூர்வீகமாக வாழ்ந்து வரும் தமிழ் மக்கள் (மதத்தால் இந்துக்களும் கிறிஸ்தவர்களும்) தங்களது அரசியல் பொருளாதார விவகாரங்களை தனித்துவமாக கையாளும் வகையிலான தனியான நிர்வாக அலகு அவசியம் என்பதை நாங்கள் பரிந்துரை செய்கிறோம். கிழக்கின் தமிழ் பகுதிகள் அனைத்தையும் ஒன்றிணைக்கும் வகையில் அந்த நிர்வாக அலகு அமைய முடியும். வடக்கு கிழக்கு இணைத்தால் முஸ்லிம்களுக்கான தனியானதொரு அலகு தொடர்பில் சிந்திக்க முடியும் என்றால், அது இணைக்கப்படாது விட்டால் கிழக்கு வாழ் தமிழர்களின் அச்சத்தை போக்கும் வகையில்  அவர்களுக்கான ஒரு தனியானதொரு நிர்வாக அலகு தொடர்பில் ஏன் சிந்திக்க முடியாது?

இவ்வாறானதொரு கோரிக்கையை கடந்த கால அனுபவங்களிலிருந்தும் நியாயமான அச்சங்களிலிருந்துமே முன்வைக்கப்படுகிறது. கிழக்கில் தமிழ் மக்கள் ஒரே நேரத்தில் இரண்டு சமூகங்களை எதிர்கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றனர். இந்த இரண்டு சமூகங்களில் ஏதோ ஒன்றுடன் இணைவதால் மட்டுமே அவர்களின் எதிர்காலம் தீர்மானிக்கப்படப் போகிறது. ஒரு இனத்தை சார்ந்து இன்னொரு சமூகத்தின் சமூக பொருளதார வாழ்வு இருக்க முடியாது. இரண்டும் தனித்துவங்களோடும் சம அதிகாரத்தோடும் இணைந்து பணியாற்றுவது என்பது வேறு ஆனால் தனித்துவத்தை கைவிட்டு செயலாற்றுவது என்பது வேறு.

எனவே கிழக்கின் யதார்த்தத்தை கருத்தில் கொண்டு தமிழ் மக்களுக்கான தனியான ஒரு நிர்வாக அலகு அவசியம் என்பதை நாங்கள் இங்கு அழுத்தம் திருத்தமாக வலியுறுத்துகின்றோம். இதன் மூலம்தான் கிழக்கு தமிழ் மக்களின் அச்சத்தை போக்க முடியும். கிழக்கு தமிழ் மக்களின் நியாயமான அச்சத்தை போக்கும் வகையிலான ஏற்பாடுகளை புதிய அரசியல் யாப்பு உள்ளடக்கவில்லையாயின் அது நல்லிணக்கம் நோக்கிய பயணத்தில் ஒரு பின்னடைவாகவே அமைய முடியும்.

ஒரு வரியில் : இணைந்த வடக்கு கிழக்கு எனின், முஸ்லிம்களுக்கு கிழக்கில் ஒரு தனி அலகு, இல்லாவிட்டால், கிழக்கில் தமிழ் மக்களுக்கான தனி அலகு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *