மேலும்

பசிலுடன் முரண்பாடுகள் உள்ளன – ஒப்புக்கொள்கிறார் நாமல்

basil-namalபசில் ராஜபக்ச விடயத்தில் தாமும் விமர்சனங்களைக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச. கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அந்தச் செவ்வியில் சில பகுதிகள் வருமாறு-

முன்னைய அரசாங்கத்தின் தோல்விக்கு பசில் ராஜபக்சவே பிரதான காரணம் என்று முன்னைய அரசின் அமைச்சர்கள் குற்றம்சாட்டியுள்ளனரே?

இதில் இரண்டு பக்கங்கள் உள்ளன. தேர்தலில் வெற்றி பெற்றால், தேர்தல் பரப்புரை அமைப்பாளர் போற்றப்படுவார், தோல்வியடைந்தால் அவர் தூற்றப்படுவார். இந்தப் பரப்புரையில் பசில் ராஜபக்ச முக்கிய பங்கு வகித்தார். அவர் மக்களுடன் நெருக்கமான தொடர்பை வைத்திருக்கவில்லை. அது அவரது பாணி. அவர் காத்திரமாகப் பணியாற்றினார். அவர் விடயத்தில் சிலர் அதிருப்தி கொண்டுள்ளதற்கு அது ஒரு காரணமாக இருக்கலாம்.அவர் குறித்து நானும் விமர்சனங்களை கொண்டிருக்கிறேன்.

பசிலுக்கும் உங்களுக்கும் ஏதேனும் பிரச்சினை உள்ளதா?

அது 2005ஆம் ஆண்டு தொடக்கம் இருந்து வரும் பழைய பிரச்சினை. வேறு எந்த தனிப்பட்ட பிரச்சினையும் கிடையாது. அரசியல் விவகாரங்களில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. சில சமயங்களில் நான் எனது தந்தையைக் கூட விமர்சித்துள்ளேன்.

பசில் ராஜபக்சவை யோசித சுட முயன்றதாக வதந்தி உள்ளதே, உண்மையா?

அது முற்றிலும் பொய். அது ஒரு குழுவினரால் பரபரப்படுகிற வதந்தி.

 அரசியலில் உங்களின் வளர்ச்சி குறித்து பசில் மகிழ்ச்சி கொள்ளவில்லை என்று கூறப்படுகி்றதே உண்மையா?

ஏன் அவர் மகிழ்ச்சி கொள்ள முடியாது? எமது வயது வேறுபாடு மிகப்பெரியது. அதைவிட மகிந்த ராஜபக்ச அரசியலில் இருக்கும் வரையே தான் அரசியலில் ஈடுபடுவேன் என்று அவர் கூறியுள்ளார்.

சசீந்திர ராஜபக்ச அரசியலில் உங்களுக்குப் போட்டியாக இருக்கிறாரா?

இல்லை அவர், மொனராகலவில் அரசியல் செய்கிறார். எனது அரசியல் அம்பாந்தோட்டையில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *