மேலும்

கடந்த கால உண்மைகள் கண்டறியப்பட வேண்டும் – மங்கள சமரவீர

mangala-samaraweeraகடந்த கால துன்பங்களும் அவலங்களும் மீண்டும் நிகழ இடமளிக்கப்படக் கூடாது. அதற்கு, கடந்த காலங்களில் இடம் பெற்ற உண்மைகள் கண்டறியப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா  வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர.

நல்லிணக்க பொறிமுறைகளுக்கான ஆலோசனைச் செயலணியின், இணையத்தளத்தையும், ஆலோசனைச் செயலணியின் செயற்பாடுகளையும் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நேற்று யாழ் .மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“போர்க்குற்றம் மற்றும் நீதி வழங்கலை உறுதிப்படுத்துதல் தொடர்பான ரோம் உடன்பாட்டில் சிறிலங்கா  கையெழுத்திடவில்லை என்பதால் அவ்வாறான விடயங்கள் தொடர்பாக நீதி கிடைப்பதை உறுதி செய்வதற்கு சுயாதீனமான, உள்நாட்டு நீதி வழங்கல் பொறிமுறை போதுமானதாக இருக்கும்.

போரினால் ஏற்பட்ட காயங்களை குணப்படுத்தவும் சமாதானத்தையும் பாதுகாப்பையும் பெற்றுத் தருவதற்குமான பொறுப்பு என்மேல் சுமத்தப்பட்டிருக்கிறது.

இந்தச் சந்தர்ப்பத்தின் உச்ச பயனைப் பெற்று ஜனநாயக குடிமக்களுக்கான உரிமைகளை அனைவரும் ஒரேவிதமாக அனுபவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

mangala-jaffna-web launch (1)

mangala-jaffna-web launch (2)

போர் முடிந்த பின்னர், அமைதியான சுழ்நிலையை அனுபவித்த போதும், நாம் பெற்ற அனுபவங்களை கொண்டு நாங்களே செய்ய வேண்டியதாக இருந்த பணிகளை செய்து முடிக்கவில்லை.

அபிவிருத்தி முக்கியம் என்றாலும் மக்களின் மனங்களையும் உள்ளங்களையும் வெல்லாவிட்டால் நாட்டை முன்னேற்ற முடியாது.

எங்களுக்கு பல தெரிவுகள் இருந்தாலும் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் எவ்வாறு அடையப்பட வேண்டுமென்பது அனைத்து பங்காளர்களுடனும் ஆராயப்பட வேண்டும்.

கடந்த காலத்தை உணராவிடின் எமது நாட்டையும் மக்களையும் அவர்களின் பொருளாதார மற்றும் சமூகரீதியாக முன்னேற்ற முடியாது.

இங்கு ஒரு தாயை சந்தித்தேன். அவரின் கணவரும் அவரை தொடர்ந்து மூத்த மகனும் புலிகளுடன் இணைந்து சண்டையிட்ட போது கொல்லப்பட்டிருக்கிறார்கள் என அவர் அழுதார்.

இவ்வாறான பாதிப்புக்கள் தெற்கிலும் உண்டு. படையினரதும் அரசியல் செயற்பாட்டாளர்களினதும் தாய்மாரும் இப்படி அழுகிறார்கள்.

இம்முறை சுதந்திர நாள் விழாவில் இரண்டு மொழிகளிலும் தேசிய கீதம் பாடப்பட்டுள்ளது. 3ஆயிரத்து 300 ஏக்கர் நிலம் மக்களிடம் விடுவிக்கப்பட்டிருக்கிறது. 39 கைதிகள் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். மற்றவர்களும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள். சிறப்பு நீதிமன்றம் இதற்காக அமைக்கப்பட்டுள்ளது வடக்கிலும் கிழக்கிலும் குடிசார் நிர்வாகம் மீள நிறுவப்பட்டுள்ளது.

8 புலம்பெயர் அமைப்புகள் மற்றும் 429 தனிநபர்கள் மீதான தடைகள் நீக்கப்பட்டுள்ளன. சட்டம் நீதியினுடைய ஆட்சி நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

கறைப்படுத்தப்பட்டிருந்த ஆயுதப்படைகளின் நற்பெயர் தற்போது சீர்செய்யப்படுகிறது.

கறைபட்ட பெயரை சீர் செய்ய குற்றமிழைத்தோரை தண்டிப்பதொன்றும் புதிய எண்ணக் கரு அல்ல.

1970களில், மனம்பேரி சம்பவத்தையும், 1990 களின் கிருசாந்தி குமாரசுவாமி சம்பவத்தையும் இங்கே நினைவுகூருகிறேன். ஆயுதப்படைகளின் நற்பெயரை களங்கப்படுத்திய ஒரு சில குழப்படிகாரர்கள் தண்டிக்கப்படுவார்கள்.

நாங்கள் நல்லிணக்க முயற்சியை அனைத்துலக அழுத்தம் காரணமாக மேற்கொள்ளவில்லை. எமது நாட்டின் எதிர்காலத்தை உருவாக்க வேண்டும். எமது குடிமக்களை சமத்துவம் மேன்மை கௌரவம் கொண்டவர்களாக ஆக்க வேண்டும் என்பதற்காகவே அதனை மேற்கொள்கிறோம்.

கடந்த காலத்தின் துன்பங்களும் அவலங்களும் மீண்டும் நிகழ இடமளிக்கப்படக்கூடாது. எல்லோரும் இணைந்து முன்னேற வேண்டும்

அப்படி முன்னேற கடந்த கால உண்மைகள் அறியப்பட வேண்டும். தீவிரவாதம் வடக்கிலோ தெற்கிலோ மீண்டும் எழுவதற்கு அனுமதிக்கக் கூடாது.

எமது அரசானது நீண்டகால மற்றும் நிலை பேற்றுத்தன்மை அடிப்படையில் நல்லிணக்கம், சமாதானம், அபிவிருத்தி என்பவற்றை புதிய அரசியலமைப்பின் ஊடாக நிறுவ முனைகிறது.

இதன் மூலம் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுடைய அபிலாசைகள் பூர்த்தி செய்யமுடியும்.

புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. கலாநிதி மனோரி முத்தெட்டுவேகம தலைமையிலான பிரமுகர்கள், 25 மாவட்டங்களுகுக்கும் சென்று நேருக்கு நேராக சந்தித்து கருத்துககைள பெற்று பகுப்பாய்வு செய்து ஒருஅறிக்கையை அரசாங்கத்துக்குத் தருவார்கள். அதன் அடிப்படையில்அரசியலமைப்பு உருவாக்கப்படும்.

அரசாங்கத்தின் சார்பில் இந்த முயற்சியிலே அனைவரையும் பங்குபற்ற அழைக்கிறேன்.

1940 ஆம் ஆண்டுகளில் இலங்கை இந்து சமுத்திரத்தின் முத்தாக இருந்தது. கடந்த காலத்தில் இந்து சமுத்திரத்தின் கண்ணீர்துளியாக மாறிய இலங்கை மீண்டும் முத்தாகமாறவேண்டும்.

வங்குரோத்து அரசியல்வாதிகள் வடக்கிலும் தெற்கிலும் மக்களின் உணர்ச்சிகளை தூண்ட முயற்சிக்கிறார்கள். எமது அரசாங்கம் நாட்டை பல்லின, பல்மொழி, பல்மத, பல் கலாசாரமாக மாற்றவே முயற்சி செய்கிறது.

எமது எதிர்காலத்தை வடிவமைத்து வரையறை செய்து உருவாக்கவே முயற்சிக்கிறோம் .” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *