மேலும்

மகிந்தவின் பாதுகாப்பு அதிகாரிகளாக இருந்த மூவருக்கு 79 வங்கி, நிதி நிறுவனங்களில் கணக்குகள்

mahinda-psdமகிந்த ராஜபக்ச ஆட்சியில் இருந்த போது. அவரது பாதுகாப்பு அதிகாரிகளாக இருந்த, மூன்று இராணுவ அதிகாரிகளின் 79 வங்கி மற்றும் நிதி நிறுவனக் கணக்கு விபரங்களை ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான், கிஹான் பிலாபிட்டிய,  இந்த உத்தரவை நேற்று பிறப்பித்துள்ளார்.

மகிந்த ராஜபக்சவுக்கு பாதுகாப்பு வழங்கிய, அதிபர் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றிய, அதிகாரிகளான பிரிகேடியர் தமித்த ரணசிங்க, மேஜர் நெவில் வன்னியாராச்சி, கப்டன் திஸ்ஸ விமலசேன ஆகியோரின் உள்ளூர் வங்கி மற்றும் நிதி நிறுவன வைப்புகள் தொடர்பான விபரங்கள் தேவைப்படுவதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்திடம் கோரினர்.

இதற்கமைய, நீதிவான் கிஹான் பிலாபிட்டிய,  32 வங்கிகள் மற்றும் 47 நிதி நிறுவனங்களில் உள்ள சந்தேக நபர்களான மூன்று இராணுவ அதிகாரிகளினதும் கணக்கு விபரங்களை வழங்குமாறு உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இவர்களில் மேஜர் நெவில் வன்னியாராச்சி மகிந்த ராஜபக்சவின் பிரதம பாதுகாப்பு அதிகாரியாக இருந்தவர்.

இவரது பெயருக்கு பல வெற்றுக்காணிகள், வீடுகள் மாற்றப்பட்டுள்ளன. அத்துடன் மகா நெகும திட்டத்துக்கான பாரஊர்திகளைப் பயன்படுத்தி இவர் மரக்கடத்தலிலும் ஈடுபட்டுள்ளார்.

இவரது பெயரில், ஒரு உந்துருளி, ஐந்து உழவு இயந்திரங்கள், இரண்டு பாரஊர்்திகள், ஏழு பேருந்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *