மேலும்

மோடியின் மாறுபட்ட நிலைப்பாட்டை சாதகமாக்கிக் கொண்டுள்ள சிறிலங்கா – கேணல் ஹரிகரன்

modi-maithri-talks (3)போர்க்குற்ற விசாரணை மீதான அனைத்துலக சமூகத்தின் பங்களிப்பு அவசியமற்றது என்பதை சிறிலங்கா அரசாங்கம் மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்காப் படைகளுக்கும் இடையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது பல்வேறு மீறல்கள் அரங்கேறின. இந்த மீறல்கள் மீதான விசாரணையில் அனைத்துலக சமூகத்தின் பங்களிப்பு அவசியமற்றது என பி.பி.சி சிங்கள சேவையிடம் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.

‘போர்க்குற்ற விசாரணையில் அனைத்துலக சமூகம் தலையீடு செய்வதற்கு ஒருபோதும் அனுமதி வழங்கப்படமாட்டாது. எமது உள்விவகாரங்களை தீர்வு செய்யக்கூடிய போதியளவு வல்லுனர்கள், நிபுணர்கள் மற்றும் அறிவாளிகள் எம்மிடம் உள்ளனர். போர்க்குற்ற விசாரணையும் உள்நாட்டில் இடம்பெறும். நாட்டின் எவ்வித சட்டங்களையும் மீறாது சுயாதீனமாக இந்த விசாரணை மேற்கொள்ளப்படும். நான் எனது நாட்டின் நீதி முறைமை மற்றும் இது தொடர்பான அதிகாரிகள் மீது நம்பிக்கை கொண்டுள்ளேன்’ என சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பி.பி.சி சிங்கள சேவைக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருந்தார்.

எனினும், ஜனவரி 26 அன்று சனல் 04 செய்திச் சேவையால் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், சிறிலங்கா அதிபர் தெரிவித்தது போன்று போர்க்குற்ற விசாரணையில் அனைத்துலகின் பங்களிப்பு ஏற்றுக்கொள்ளப்படவில்லையா என வினவியபோது, இது தொடர்பில் இன்னமும் சிறிலங்கா அதிபர் தீர்மானிக்கவில்லை எனத் தெரிவித்திருந்தார்.

அனைத்துலக சமூகத்தின் பங்களிப்புத் தொடர்பாக உறுதியாகத் தெரிவிக்குமாறு சனல் 04 செய்திச் சேவை ரணில் விக்கிரமசிங்கவிடம் வினவியபோது, ‘நாங்கள் ஜெனீவா தீர்மானம் தொடர்பில் வழங்கிய உறுதிப்பாடுகளைக் கருத்திற் கொண்டு செயற்படுவோம். மே மாதம் அளவில் சிறிலங்கா அரசாங்கமானது பொறுப்புக்கூறல் மற்றும் மீளிணக்கப்பாடு தொடர்பில் பொறிமுறை ஒன்றை உருவாக்கும்’ என பிரதமர் குறிப்பிட்டார்.

போர்க் குற்ற விசாரணை தொடர்பில் நீதிப் பொறிமுறையை உருவாக்குவதில் அனைத்துலகப் பங்களிப்பு மற்றும் நம்பகமான நீதிச் செயற்பாடு போன்றவற்றின் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்திய ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்திற்கு சிறிலங்கா இணை அனுசரணை வழங்கியிருந்தது. இந்நிலையில் சிறிலங்கா அதிபரினதும் பிரதமரினதும் முரண்பட்ட கூற்றுக்கள் பங்குதாரர்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெனீவா தீர்மானத்திற்கு முரணான வகையில் சிறிலங்கா அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் எந்தவொரு நகர்வையும் தமிழ் சமூகம் ஏற்றுக்கொள்ளாது என உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்திருந்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இதையொத்த நிலைப்பாட்டையே கொண்டுள்ளது.

சிறிலங்காவின் போர்க் குற்ற விசாரணையில் அனைத்துலக சமூகத்தின் பங்களிப்பும் அவசியமானது என்பதையே ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் வலியுறுத்துவதாக சிறிலங்கா அதிபரின் அறிவித்தல் தொடர்பில் பதிலளிக்கும் போது ஐ.நா செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் தெரிவித்திருந்தார். ஐ.நா செயலாளர் நாயகத்தின் பேச்சாளரின் இந்த அறிவிப்பானது சிறிலங்கா அதிபரின் அனைத்துலக சமூகத்தின் பங்களிப்பை ஏற்றுக்கொள்ளப்பட முடியாது என்கின்ற எதிர்மறையான அறிவித்தலுக்கான பதிலாக அமைந்துள்ளது.

சிறிலங்காவின் உள்நாட்டு மக்களையும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை மற்றும் அனைத்துலக சமூகம் ஆகிய பல்வேறு தரப்புக்களையும் திருப்திப்படுத்தும் விதமாக நீதிப் பொறிமுறை ஒன்றை உருவாக்குவது தொடர்பில் கூட்டு அரசாங்கத்திற்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளைக் களைவதற்கான முயற்சியில் சிறிலங்கா அதிபரும் பிரதமரும் ஈடுபட்டுள்ளனர் என்பது வெளிப்படை.

அனைத்துலக அமைப்புக்களில் பணியாற்றிய சிறிலங்காவின் முன்னாள் நீதிபதிகளை நீதிப்பொறிமுறையில் உள்வாங்குவதன் மூலம் பலதரப்புக்களையும் திருப்திப்படுத்த சிறிலங்கா அரசாங்கம் முனையலாம். இதனை சிறிலங்கா அரசாங்கப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனரட்னவின் கூற்றின் மூலம் உணரலாம்.

‘ஐ.நா மனித உரிமைகள் பேரவையால் வலியுறுத்தப்பட்டதற்கு அமைவாக அதன் அடுத்த கூட்டத் தொடர் ஜூன் மாதத்தில் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் சிறிலங்கா சுயாதீன உள்நாட்டு போர்க் குற்ற விசாரணை நீதிமன்றத்தை உருவாக்கும். இது சிறிலங்காவின் நீதிபதிகளை உள்ளடக்கியிருக்கும். ஒன்பது ஆண்டுகளாக அனைத்துலக நீதிமன்றில் பணியாற்றிய சிறிலங்காவின் நீதிபதியான வீரமந்தி்ரி போன்ற நீதிபதிகள் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைக்குள் உள்வாங்கப்படுவர்’ என சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியாவுடனான பொருளாதார தொழினுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கை:

சிறிலங்கா 2016 நடுப்பகுதியில், இந்தியாவுடன் பொருளாதார தொழினுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கையை மேற்கொள்ளவுள்ளது. இந்த உடன்படிக்கையானது இவ்விரு அயல்நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்தும் என சிறிலங்காவின் மூலோபாய அபிவிருத்தி மற்றும் அனைத்துக வர்த்தக அமைச்சர் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார். இவர் இந்த விடயத்தை கொழும்பில் இடம்பெற்ற இரண்டாவது அனைத்துலக முதலீட்டு ஊக்குவிப்பு மாநாட்டில் தெரிவித்திருந்தார்.

இந்தியா, சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் சிறிலங்கா ஏற்கனவே சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் இந்நிலையில் பொருளாதார மற்றும் தொழினுட்ப ஒத்துழைப்பு உடன்பாடானது இந்த நாடுகள் சிறிலங்கா மீதான பொருளாதார மற்றும் வர்த்தக நலன்களில் அதிக கவனம் செலுத்துவதற்கான வாய்ப்பாக அமையும் என அமச்சர் சமரவிக்கிரம குறிப்பிட்டார்.

எனினும், இந்தியாவுடனான இந்த ஒப்பந்தத்தை சிறிலங்காவின் வல்லுனர் அமைப்புக்கள், சிறிலங்கா மென்பொருள் மற்றும் சேவை வழங்குனர்கள், சிறிலங்கா அரசாங்கத்தின் மருத்துவ அதிகாரிகள் அமைப்பு போன்றன எதிர்த்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்டுள்ளன. இவ்வாறான உடன்படிக்கையானது இந்திய துறைசார் நிபுணர்கள் சிறிலங்கா நோக்கிப் படையெடுப்பதற்கான கெட்டவாய்ப்பை வழங்கலாம் என சிறிலங்காவிலுள்ள வல்லுனர்கள் அச்சம் கொள்கின்றனர். மாக்சிய மக்கள் விடுதலை முன்னணி இந்தியாவுடனான ஒத்துழைப்பு உடன்படிக்கையை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் ஒழுங்குபடுத்தப்படும் என அச்சுறுத்தியுள்ளது.

பாகிஸ்தான் பிரதமரின் வருகை:

ஜனவரி 06 உடன் முடிவுக்கு வரும் வகையில் பாகிஸ்தானியப் பிரதமர் நவாஸ் செரீப் சிறிலங்காவிற்கு மூன்று நாள் பயணத்தை மேற்கொண்டிருந்தார். பாகிஸ்தானியப் பிரதமரின் வருகையின் போது சிறிலங்கா அரசாங்கமானது சுகாதாரம், விஞ்ஞானம், தொழினுட்பம், வர்த்தகம், புள்ளிவிபர பகிர்வு, இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள், நிதி மோசடி மற்றும் பயங்கரவாதம், கலாசாரம் போன்ற விடயங்களை உள்ளடக்கி எட்டு உடன்படிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் பாகிஸ்தானியப் பிரதமரின் வருகையுடன் கைச்சாத்திடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட 400 மில்லியன் டொலர் பெறுமதியான பாகிஸ்தான் தயாரிப்பு சீன ஜே.எப் 17 ரக போர் விமானங்களைக் கொள்வனவு செய்வதற்கான டன்படிக்கை பின்னர் இரத்துச் செய்யப்பட்டது.

இந்தியாவின் அழுத்தமே இந்த உடன்பாடு கைவிடப்பட்டமைக்கான காரணம் என ஊடகங்கள் சுட்டிக்காட்டின. ராஜபக்ச காலத்தில் சீனாவுடன் நெருக்கமான உறவு பேணப்பட்டதால் இந்தியாவுடனான சிறிலங்காவின் உறவில் விரிசல் ஏற்பட்டது. இதனை சமப்படுத்துவதற்கான முயற்சிகள் சிறிசேன அரசாங்கத்தால் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன. இந்நிலையில், இந்தியாவிற்கு விருப்பமில்லாத போர் விமானக் கொள்வனவு உடன்பாட்டை பாகிஸ்தானுடன் மேற்கொள்வதற்கு சிறிலங்கா விரும்பவில்லை.

இந்தியாவின் முன்னாள் ஆட்சியாளர்களைப் போலல்லாது, இந்தியாவின் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி சிறிலங்காவுடனான தனது பொருளாதார உறவை தமிழர் பிரச்சினையின் குறுகிய அலைக்கற்றையின் ஊடாக நோக்கவில்லை. இந்தியாவின் இத்தகைய நிலைப்பாட்டை சிறிலங்கா தனக்குச் சாதகமாக்கியுள்ளது.

மறுபுறத்தே, இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் சிறிலங்காவினதும் தனதும் பாதுகாப்பு நலன்களைப் பாதுகாப்பதில் இந்தியா அதிக அக்கறை காண்பிக்கின்றது. இதனாலேயே இந்தியத் தீபகற்பத்தின் நெருங்கிய சுற்றுவட்டாரத்தில் பாகிஸ்தானிய விமானப் படையினர் பயிற்சியில் ஈடுபடுவதையும் சீன விமானப்படை தனக்கான வளங்களைப் பெற்றுக்கொள்வதையும் தளத்தை அமைத்துள்ளதையும் இந்தியாவால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

ஆங்கிலத்தில் – கேணல் ஹரிகரன்
வழிமூலம்       – சண்டே லீடர்
மொழியாக்கம்  – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *