மேலும்

சாள்ஸ் அன்ரனியும் யோசித ராஜபக்சவும் – உபுல் ஜோசப் பெர்னான்டோ

yoshitha-arrest- rajapaksha family (1)பிரபாகரன் ஒரு பயங்கரவாதத் தலைவராக இருந்த போதிலும் அவர் தனது சொந்தச் சமூகத்திற்கு துரோகம் இழைக்க ஒருபோதும் நினைக்கவில்லை. பிரபாகரனின் அர்ப்பணிப்பு மனோநிலைக்கு மாறாக, மகிந்தவின் போலித்தனமான தேசப்பற்று எவ்வாறு அமைந்துள்ளது என்பதை யோசித மீதான ஆணைக்குழுவின் விசாரணை சுட்டிநிற்கிறது.

இவ்வாறு சிலோன் ருடே நாளிதழில் உபுல் ஜோசப் பெர்னான்டோ எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

டிசம்பர் 2006ல் சிறிலங்கா கடற்படையில் இணைந்து கொண்ட மகிந்த ராஜபக்சவின் மகனான யோசித ராஜபக்ச கடந்த பத்தாண்டில் எவ்வாறான பதிவுகளைக் கொண்டுள்ளார் என்பதை இங்கு பார்க்கலாம்.

யோசித கடற்படையில் இணைந்த போது, ஏனைய உலகத் தலைவர்கள் போலல்லாது தான் தனது மகனை இந்த நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் யுத்தத்தில் பங்கெடுக்க ஒப்படைத்துள்ளேன் என மகிந்த பெருமையுடன் அறிவித்தார். மகிந்தவின் இந்த அறிவிப்பின் பின்னர் பௌத்த மகா சங்கம் மகிந்தவை உண்மையான நாட்டுப்பற்றாளர் எனக் கௌரவப்படுத்தியது.

மகிந்த தனது மகனைக் கடற்படையில் இணைத்த போது, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகனான சாள்ஸ் அன்ரனி ஏற்கனவே சிறிலங்காப் படைகளுக்கு எதிராக வன்னிக் காடுகளில் இடம்பெற்ற யுத்தத்தில் பங்கு கொண்டிருந்தார்.

நோர்வே அனுசரணையுடன் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் புலிகள் அமைப்பிற்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட சமாதான முன்னெடுப்புக்கள் முறிந்த பின்னர், மகிந்த ராஜபக்சவால் ஆரம்பிக்கப்பட்ட செய் அல்லது செத்து மடி என்கின்ற யுத்தத்தில் பிரபாகரன் தனது மகனையும் பங்கேற்க வைத்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல் நடவடிக்கைகளை சாள்ஸ் அன்ரனி பொறுப்பெடுத்து நடத்தியதாக கூறப்பட்டது.

கே.பி என அறியப்படும் குமரன் பத்மநாதனின் அண்மைய கூற்றின் பிரகாரம், தனது அப்பா, அம்மா, சகோதரி மற்றும் இளைய சகோதரன் ஆகியோரை பாதுகாப்பான வெளிநாடொன்றுக்கு அனுப்பி வைக்குமாறு கே.பியிடம் சாள்ஸ் அன்ரனி கோரியிருந்தார். சாள்ஸ் அன்ரனி தனது தந்தையான பிரபாகரனிடம் வடக்கை விட்டு வெளியேறி பாதுகாப்பாக வெளிநாட்டிற்குச் செல்லுமாறு மீண்டும் மீண்டும் கோரிக்கை விடுத்த போதும் புலிகளின் தலைவர் பிரபாகரன் அதற்கு செவிசாய்க்கவில்லை என கே.பியிடம் சாள்ஸ் அன்ரனி முன்னர் தெரிவித்திருந்தார்.

எனினும், போர் இடம்பெற்ற போது யுத்த களத்திலிருந்து தப்பிச் செல்லாது தனது மகனுடன் இணைந்து போரின் தோல்வியை எதிர்கொள்ள வேண்டும் என்கின்ற பிரபாகரனின் உறுதிப்பாடானது அவர் தனது அமைப்பிற்காகச் செய்த மிகப்பாரிய அர்ப்பணிப்பாகும். இறுதியில், போரில் கொல்லப்பட்ட சாள்ஸ் அன்ரனியின் உடலம் இராணுவத்தால் கண்டெடுக்கப்பட்டது.

இதற்கு மாறாக, மகிந்த தனது அரசியல் நலன்களைப் பெற்றுக்கொள்வதற்காகவே யோசிதவை கடற்படையில் இணைத்திருந்தார். யோசித இந்த நாட்டைப் பாதுகாப்பதற்காகத் தன்னை ஒருபோதும் யுத்தத்தில் அர்ப்பணிக்கவில்லை. போர்க் காலத்தில் யோசித என்ன செய்தார் என்பது எவருக்கும் தெரியாது. போர் வலயத்திற்குள் யோசித காலடி எடுத்து வைத்தாரா என்பதற்கான எவ்வித சமிக்கையும் இல்லை.

மைத்திரி-ரணில் அரசாங்கம் இந்த நாட்டைப் பொறுப்பெடுத்த பின்னர், போர்க் காலத்தில் யோசித என்ன செய்தார் என்பதை விசாரணை செய்வதற்கான மூன்று உறுப்பினர்களைக் கொண்ட ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

பிரபாகரன் ஒரு பயங்கரவாதத் தலைவராக இருந்த போதிலும் அவர் தனது சொந்தச் சமூகத்திற்கு துரோகம் இழைக்க ஒருபோதும் நினைக்கவில்லை. பிரபாகரனின் அர்ப்பணிப்பு மனோநிலைக்கு மாறாக, மகிந்தவின் போலித்தனமான தேசப்பற்று எவ்வாறு அமைந்துள்ளது என்பதை யோசித மீதான ஆணைக்குழுவின் விசாரணை சுட்டிநிற்கிறது.

சிறிலங்கா கடற்படையில் இணைவதற்கான சட்டஒழுங்கு விதிகளை மீறி, ராஜபக்சவின் மகனான யோசித கனிஸ்க ராஜபக்ச உக்ரேய்ன் அரசாங்கத்தின் சுயஆதரவு வெளிநாட்டு வர்த்தக மற்றும் முதலீட்டு நிறுவனமான Ukrinmarsh இன் நிதி ஆதரவுடன் 13 மாத பயிற்சியைப் பெற்றிருந்தார். இது மட்டுமல்லாது, மருத்துவ சார் முனைவர் பட்டத்தைப் பெறுதல் உட்பட மூன்று வெவ்வேறு துறைசார் பயிற்சி நெறிகளையும் யோசித பெற்றிருந்தமை ஆணைக்குழுவின் விசாரணையின் இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.

இவ்வாறான துறைசார் பயிற்சிகளை யோசித பெற்றுக் கொள்வதற்கு, ரஸ்யாவுக்கான சிறிலங்காவின் முன்னாள் தூதுவரும் ராஜபக்சவின் சொந்த மைத்துனருமான உதயங்க வீரதுங்கவே காரணம் எனவும் அறியப்பட்டது. வீரதுங்க ஏற்கனவே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தற்போது தலைமறைவாக உள்ளார்.

ரஸ்ய ஆதரவு கிளர்ச்சிக் குழுக்களுக்கு ஆயுதங்களை விற்பனை செய்ததாக உக்ரேய்ன் அரசாங்கத்தால் குற்றம் சுமத்தப்பட்ட வீரதுங்க, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுடனும் அவரது சகோதரரான முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவுடனும் நெருங்கிய தொடர்பைப் பேணியிருந்தார் என்பதை இவ்வாறான சில சம்பவங்கள் சான்று பகர்கின்றன.

மைத்திரி-ரணில் அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பின்னர், யோசித ராஜபக்ச தொடர்பாக விசாரணை செய்வதற்காக மூன்று உறுப்பினர்களைக் கொண்ட சபை ஒன்றை கடற்படைத் துணைத் தளபதி ஜெயந்த பெரேரா நியமனம் செய்தார். இந்த ஆணைக்குழு ஜனவரி 2015 தொடக்கம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயற்படுகிறது.

யோசித மீதான விசாரணைக் குழுவில் றியர் அட்மிரல் டி.டபிள்யு.பி.வெட்டேவ, கொமடோர் யு.எஸ்.ஆர்.பெரேரா மற்றும் கொமடோர் எம்.எம்.வி.பி.மெடேகொட ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர். இவர்களது விசாரணை அறிக்கையின் முடிவுகள் அதிர்ச்சியளிக்கின்றன.

மூன்று உறுப்பினர்களைக் கொண்ட விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரகாரம், யோசித ராஜபக்ச கடற்படையில் இணைந்த பின்னர் கடற்படையின் ஒழுக்க விதிகள் மற்றும் பிரமாணங்கள், விதிகள் போன்றவற்றை மீறிச் செயற்பட்டுள்ளார் என்பது தெளிவாகிறது. கடற்படையில் இணைவதற்கான கோவை விதிகள் கூட யோசித கடற்படையில் இணைக்கப்பட்ட போது மீறப்பட்டுள்ளது.

மூன்று அங்கத்தவர்களைக் கொண்ட விசாரணை ஆணைக்குழுவானது பின்வரும் மூன்று விடயங்களை யோசித தொடர்பில் முன்வைத்துள்ளது:

  1. சிறிலங்கா கடற்படையின் 45வது அதிகாரிப் பயிலுனராக கடற்படையில் இணைந்து கொண்ட யோசித ராஜபக்ச க.பொ.த. சா.த பரீட்சையில் ஒரே தடவையில் ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம் மற்றும் சிங்களம் உட்பட ஆறு பாடங்களில் திறமைச் சித்திகளையும், க.பொ.த.உ.த பரீட்சையில் இரண்டு சித்திகளையும் பெற்றிருக்க வேண்டும். ஆனால் யோசித இவ்வாறான கல்வித் தகைமைகளைப் பெற்றிருக்கவில்லை என்பதை இவரது தனிப்பட்ட கோவை உறுதிப்படுத்துகின்றது. ஒரே தடவையில் க.பொ.த.சா.த பரீட்சையில் யோசித சிங்கள பாடத்தில் திறமைச் சித்தி பெற்றிருக்கவில்லை. இவரது சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைகளின் பெறுபேற்றுச் சான்றிதழ்கள் இவருக்காக ஒதுக்கப்பட்ட கோவையில் காணப்படவில்லை.
  1. கடற்படைப் பயிலுனராக இணைந்து கொண்ட யோசிதவால் வழங்கப்பட்ட 2003,2004 காலப்பகுதியில் எடுக்கப்பட்ட க.பொ.த.சா.த பரீட்சைப் பெறுபேறுகளை கடற்படை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனரா அல்லது இல்லையா என்பதற்கான எவ்வித சான்றுகளையும் விசாரணை சபையால் பெற்றுக்கொள்ள முடியவில்லை. இந்நிலையில் யோசித எவ்வாறு கடற்படையில் இணைக்கப்பட்டார் என்பதற்கான தெளிவான அறிக்கையை இந்த சபையால் முன்வைக்க முடியவில்லை. யோசித கடற்படையில் இணைக்கப்பட்டது எவ்வாறு என்பதை சிறப்பு விசாரணை மூலம் முன்னெடுக்கப்படுவதே சாத்தியமாக இருக்கும்.
  1. கடற்படை கரையோரக் கற்கை நிறுவனத்தில் யோசித பயிற்சி பெற்றிருந்தார். இவருக்குப் பாதுகாப்பு வழங்குவதற்காக மூன்று மூத்த கடற்படை மாலுமிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். யோசித பயிற்சி பெற்றிருந்த பகுதிக்கான பாதுகாப்புப் பணியை அதிபர் பாதுகாப்புப் பிரிவு மேற்கொண்டிருந்த போதும் அதற்கும் மேலதிகமாகவே மூத்த கடற்படை மாலுமிகள் மூவர் யோசிதவின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்தனர்.

சிறிலங்கா கடற்படையின் விதிகளுக்கு முரணாகவே யோசித இணைக்கப்பட்டார் என்பதற்கு அப்பால், லெப்ரினன்ட் ராஜபக்சவிற்கு சிறப்புப் பரிசுகளும் வழங்கப்பட்டன. இவருக்கு சில சிறப்பு சலுகைகளும் முன்னுரிமைகளும் வழங்கப்பட்ட அதேவேளையில், முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவால் சிறப்புப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

பிரித்தானிய றோயல் கடற்படைக் கல்லூரியின் புலமைப் பரிசில் பயிற்சிக்குள் யோசித உள்வாங்கப்படாத போதிலும் இவர் இதற்கான புலமைப் பரிசில் கட்டணங்களைப் பெற்றுக்கொண்டார். இதன் பின்னர் கடற்பயிற்சி தொடர்பான இரண்டு மேலதிக பயிற்சி நெறிகளைப் பெற்றுக் கொள்வதற்கு றோயல் கடற்படையுடன் இவர் இணைக்கப்பட்டமை விசாரணை மூலம் நிரூபணமாகிறது.

சப் லெப்ரினனாக இணைந்து கொண்ட பின்னர், இவர் ஹாம்ப்சையரில் உள்ள HMS Collingwood கரையோர போர் மூலோபாயக் கல்லூரியில் அனைத்துலக நிறைவேற்று கற்கை நெறியைப் பெற்றுக் கொள்வதற்காக அனுப்பப்பட்டார்.

யோசித ராஜபக்ச, சப் லெப்ரினன்ட் நிலையை அடைந்த பின்னர், 29 ஒக்ரோபர் 2009 தொடக்கம் 31 ஆகஸ்ட் 2010 வரை உக்ரேய்ன் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டத்தைப் பெற்றுக் கொள்வதற்காக அவரது மாமாவான உதயங்க வீரதுங்கவால் தெரிவு செய்யப்பட்டார். இதன் பின்னர் யோசிதவிற்கான நாளாந்த வெளிநாட்டு கொடுப்பனவு, போக்குவரத்து மற்றும் தொலைபேசிச் செலவுகளை வழங்குமாறு பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச கட்டளையிட்டார்.

வீரதுங்க நெருக்கமான தொடர்பைப் பேணிய உக்ரேய்னின் Ukrinmarsh நிறுவனத்தால் யோசிதவிற்கு ஏற்கனவே சலுகைக் கொடுப்பனவுகள் வழங்கப்பட்ட சமநேரத்திலேயே கோத்தபாயவின் கட்டளைக்கு இணங்க மேலதிக வெளிநாட்டுக் கொடுப்பனவும் வழங்கப்பட்டன. யோசித தனிப்பட்ட முறையிலேயே உக்ரேய்ன் நிறுவனத்தின் புலமைப்பரிசிலுக்குள் உள்வாங்கப்பட்டாரே தவிர, இவர் சிறிலங்கா கடற்படையின் விதிமுறைகளுக்கு அமைவாக இவ்வாறான பயிற்சித் திட்டங்களுக்குள் உள்வாங்கப்படவில்லை. இந்த பயிற்சி நெறியைப் பூரணப்படுத்திய பின்னர், இவர் ‘தத்துவவியல் கலாநிதிப்’ பட்டத்தைப் பெற்றுக் கொள்வதற்கான பயிற்சி நெறிக்குத் தெரிவு செய்யப்பட்டார் என்பது இங்கு அதிர்ச்சி தரும் தகவலாகும்.

திருகோணமலையில் இடம்பெற்ற பயிற்சி நிறைவு அணிவகுப்பின் போது, பயிலுனரான யோசித ராஜபக்சவிற்கு அந்த ஆண்டிற்கான Midshipman பதவி வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. அத்துடன் இவர் ‘கௌரவ பட்டயமும்’ வழங்கி மதிப்பளிக்கப்பட்டார். இவ்வாறான சிறப்பு விருதுகளை யோசித பெற்றுக் கொள்வதற்கு முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் கரன்னகொடவே காரணமாகும்.

இதன்பின்னர், கோத்தபாய ராஜபக்சவின் பாதுகாப்பு அமைச்சின் உத்தரவின் பேரில், யோசித அதிபர் பாதுகாப்புப் பிரிவுடன் இணைக்கப்பட்டார். கடற்படைத் தலைமையகத்தில் சாதாரண பணிகளைப் புரிந்த யோசித பின்னர், அதிபர் பாதுகாப்புப் பிரிவின் கீழ் அலரி மாளிகையில் பணியாற்றினார்.

இதற்காக இவருக்கு சிறப்பு அடையாள அட்டையும் வழங்கப்பட்டது. புதிய அரசாங்கம் சிறிலங்காவின் ஆட்சியைப் பொறுப்பெடுத்துக் கொண்ட பின்னர், அதிபர் பாதுகாப்புப் பிரிவின் கீழ் யோசித பணியாற்றுவதற்கான கட்டளை இரத்துச் செய்யப்பட்டது.

யோசித ராஜபக்சவினதும் சாள்ஸ் அன்ரனியினதும் சம்பவங்கள் மகிந்த ராஜபக்சவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் எவ்வாறான அர்ப்பணிப்புக்களுடனும் நாட்டுப்பற்றுடனும் பணியாற்றியுள்ளனர் என்பதை மிகத் தெளிவாக விளக்கி நிற்கின்றன.

தனது மகன் போரில் பங்கு கொண்டு போராடினான் என்பதை நினைத்து தலைவர் பிரபாகரன் திருப்தியடைந்தார். ஆனால் மகிந்தவின் மகன் போரின் நிழலைக் கூடத் தொட்டுப் பார்க்கவில்லை. குறிப்பாக இந்த நாட்டைப் பாதுகாப்பதற்காகத் தனது மகனை கடற்படையில் இணைத்துக் கொள்வதாகக் கூறி தனக்கான சொந்த அரசியல் இலாபத்தை மகிந்த ராஜபக்ச தேட முயற்சித்த போதிலும் இவரது மகனான யோசித ராஜபக்ச போர் வலயத்திற்குள் தனது காலடியைக் கூட எடுத்து வைக்கவில்லை என்பதே உண்மை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *