மேலும்

மிக்-27 போர் விமானங்கள், எம்.ஐ.24 தாக்குதல் உலங்குவானூர்திகள் அணிவகுப்பில் இருந்து நீக்கம்

Mi-24விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் முக்கிய பங்காற்றிய மிக்-27 போர் விமானங்களோ, எம்.ஐ-24 தாக்குதல் உலங்குவானூர்திகளோ இம்முறை சிறிலங்காவின் சுதந்திர நாள் அணிவகுப்பில் பங்கேற்காது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவின் 68ஆவது சுதந்திர நாள் நாளை கொழும்பில் காலி முகத்திடலில் பிரமாண்டமான முறையில் கொண்டாடப்படவுள்ளது.

நாளை காலை நடக்கவுள்ள கொடியேற்று விழாவையடுத்து, சிறிலங்காவின் முப்படைகளினதும் படைபலத்தை வெளிப்படுத்தும் பாரிய இராணுவ அணிவகுப்புகள் இடம்பெறவுள்ளன.

மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க இராணுவ அணிவகுப்புக்கு தலைமை தாங்கவுள்ளார்.

இந்த அணிவகுப்பில், 4025 இராணுவத்தினர், 984 கடற்படையினர், 1216 விமானப்படையினர், 887 காவல்துறையினர், 674 சிவில் பாதுகாப்பு படையினர், தேசிய கடெற் படையின் 7 அதிகாரிகள் மற்றும் 431 கடெற் பிரிவினர் பங்கேற்கின்றனர்.

parade (1)parade (2)parade (3)parade (4)

சிறிலங்கா இராணுவத்தின் பீரங்கிகள், டாங்குகள், கவசவாகனங்கள், ரேடர்கள் உள்ளிட்ட போர்த்தளபாடங்களும், விமானப்படையின் போர் விமானங்கள், உலங்குவானூர்திகளும், கடற்படையின் போர்க்கப்பல்களும் இந்த இராணுவ அணிவகுப்பில், பங்கேற்கவுள்ளன.

இதற்கான இறுதி ஒத்திகை நேற்றுக்காலை காலி முகத்திடலில் இடம்பெற்றது.

இந்தநிலையில், இம்முறை சுதந்திர நாள் அணிவகுப்பில் விமானப்படையின் மிக் -27 போர் விமானங்களோ, எம்.ஐ-24 தாக்குதல் உலங்கு வானூர்திகளோ பங்கேற்காது என்று சிறிலங்கா விமானப்படைப் பேச்சாளர் குறூப் கப்டன் சந்திம அல்விஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.

இம்முறை விமானப்படையின் அணி வகுப்பில், பெல் 212, பெல்- 412, எம்,ஐ.- 17 உலங்கு வானூர்திகள், வை-12, பீச் கிராப்ட், சி-130, அன்டரோவ்-32, எம்ஏ-60, விமானங்களும், கே-8, கிபிர், எவ்-7 ஜெட் விமானங்களும், பங்கேற்கவுள்ளன.

12ஆவது இலக்க ஜெட் ஸ்குவாட்ரனில் இடம்பெற்றுள்ள மிக் -27 போர் விமானங்கள், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் முக்கிய பங்காற்றியிருந்தன. நான்காவது கட்ட ஈழப்போரில், இந்தப் போர் விமானங்கள், 854 தாக்குதல் பறப்புகளை மேற்கொண்டிருந்தன.

“2009இல் போர் முடிவடைந்த போது 12ஆவது இலக்க ஜெட் ஸ்குவாட்ரனில் ஆறு மிக் 27 போர் விமானங்கள் எஞ்சியிருந்தன. அவற்றில் நான்கு விமானங்கள், 2014ஆம் ஆண்டில் இருந்து, பறக்கமுடியாமல், கைவிடப்பட்ட நிலையில்- தரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

ஏனைய இரண்டும் கடந்த ஆண்டு நடுப்பகுதியில் இருந்து பறப்பு நடவடிக்கைகளில் இருந்து நிறுத்தப்பட்டுள்ளன.

இந்தப் போர் விமானங்களை மறுசீரமைப்பது குறித்து ஆராயப்பட்ட போதிலும், அதற்கு ஏற்படும் செலவுக்கு ஏற்ற பெறுமதியானதாக அது அமையாது” என்று குறூப் கப்டன் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

1980களில் தயாரிக்கப்பட்ட மிக் -27 போர் விமானங்களை சிறிலங்கா 2000ஆண்டுகளில் கொள்வனவு செய்திருந்தது.

கிபிர் போர் விமானங்கள், விநியோகிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் கழித்தே இவை விமானப்படையில் சேர்க்கப்பட்டன. எனினும், கிபிர் போர் விமானங்கள் இன்னமும் விமானப்படையில் பணியாற்றுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன்,  எம்.ஐ-24 தாக்குதல் உலங்குவானூர்திகளும் கூட இம்முறை அணிவகுப்பில் இடம்பெறாது என்றும், குறூப் கப்டன் சந்திம வீரக்கொடி குறிப்பிட்டார்.

போரின் போது தரைத் தாக்குதல்களுக்கு நெருக்கமான சூட்டாதரவை வழங்கிய இந்த உலங்குவானூர்திகளில் பெரும்பாலானவை திருத்தப்பட வேண்டிய நிலையில் இருக்கின்றன என்றும் சிறிலங்கா விமானப்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *