மேலும்

மேற்கையும் சீனாவையும் சமாளித்தல் – தற்கால சர்வதேச அரசியல், பொருளாதார நோக்கு

pakistan-chinaஇந்தியாவுக்கான அமெரிக்க உதவிகள் பிராந்திய மட்டத்தில் சீனாவுடன் சமநிலைப்படுத்தல் என்பதையே மையமாக கொண்டது. சீன தலையீடும் செல்வாக்கும் தெற்காசிய நாடுகளில் அதிகரித்திருக்கிறது .இதனால் தெற்காசிய நாடுகள் இந்திய – அமெரிக்க கூட்டுக்குள் அடங்காது கை நழுவிப்போவதை தடுப்பதிலே மிகவும் பிரயத்தனம் எடுக்கப்படுகிறது.– புதினப்பலகைக்காக லோகன் பரமசாமி*

பிராந்திய அளவிலும் உலகப் பரப்பரப்பிலும் மேற்கின் கடல் போக்குவரத்தில் அதிகாரம் செலுத்தும் நீண்டகால பண்பை மாற்றி அமைக்கும் சக்தியாக உள்ள சீன-பாகிஸ்தானிய பொருளாதார பாதை ஒப்பந்தம் ஆட்ட-மாற்றீட்டு சக்தி கொண்டதாக அமையும்.

இந்தியாவின் இந்து சமுத்திர ஆதிபத்தியம் குறித்த வளர்ச்சியில், அமெரிக்கா முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த ஆண்டு ஜனவரி மாத இறுதியில் அமெரிக்க அதிபர் ஒபாமா அவர்களின் இந்திய பயணத்துடன் பொது மக்கள் பாவனைக்கு உரிய அணுதொழில்நுட்ப ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.  இதன் பிரகாரம் அமெரிக்க அணு மின் உற்பத்தி தொழில்நுட்பம் இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு வாய்ப்பு ஏற்பட்டது.

இந்தியாவுக்கு புதிய உயர்தர யுத்த விமானமான F-35 விமானங்களையும், F-16 F-18 ரக விமானங்களும் பல்வேறு விதமான பாதுகாப்பு உபகரணங்களும் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஆட்சி அதிகாரத்தை பெற்று கொண்டதிலிருந்து இந்தியாவின் கருத்துருவமே மாறிவிட்டது என பல ஆய்வாளர்கள் எழுதி வருகின்றனர். அதிவேகமாக முன்னேறிவரும் இந்திய பொருளாதாரத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் இந்த வளர்ச்சி வேகத்திற்கு ஏற்றாற்போல், இந்தியா சமூக தேவைகளுக்கான அணுமின் உற்பத்தி செய்வதற்கான வர்த்தக அனுமதியைப் பெற சர்வதேச அணுசக்தி நிறுவனத்திடம் அமெரிக்கா அழுத்தம் பிரயோகித்து அந்த அனுமதியை பெற்று கொடுத்தது.

இந்தியாவுக்கான அமெரிக்க உதவிகள் பிராந்திய மட்டத்தில் சீனாவுடன் சமநிலைப்படுத்தல் என்பதையே மையமாக கொண்டது. சீன தலையீடும் செல்வாக்கும் மிகமுக்கியமாக தெற்காசிய நாடுகளில் அதிகரித்திருக்கிறது என்பது பொதுவான நோக்கு. இதனால் தெற்காசிய நாடுகள் இந்திய -அமெரிக்க கூட்டுக்குள் அடங்காது கை நழுவிப்போவதை தடுப்பதிலே மிகவும் பிரயத்தனம் எடுக்கப்படுகிறது.

பதிலுக்கு சீனா பல பில்லியன் டாலர் திட்டங்களை ஆசிய நாடுகள் மத்தியிலே அறிமுகப்படுத்தி அந்த நாடுகளை தன் வசம் கொண்டுவர முயற்சிக்கிறது. இந்த அரசியல் இராசதந்திர அரங்க சந்தியிலே, இராசதந்திர அழுத்தங்கள். வர்த்தக தலையீடுகள்,படைபல காட்சி நிகழ்வுகள் (கூட்டு படைப் பயிற்சிகள் கடற்படை விமானந்தாங்கிகளின் வருக,  பாதுகாப்பு அதிகாரிகளின் வருகை என்பனவற்றை குறிப்பிடலாம்.) என பல்வேறு வகையிலும் தெற்காசிய நாடுகள் பெரும் சோதனைகளை கண்டு வருகின்றன.

world-map-china

ஆக இந்து சமுத்திர பிராந்தியம் 21ஆம் நூற்றான்டின் பூகோள இராசதந்திரத்தின் மத்திய அரங்காக காட்டப்படுகிறது. இந்து சமுத்திரத்திலே கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நாடுகளாக பாகிஸ்தான் சிறீலங்கா மியான்மர் ஆகிய மூன்று நாடுகளும் அந்த மூன்று நாடுகளுக்குள் உள்ள தனிம கூறுகளும் இந்த இருதரப்பிற்கும் மத்தியில் மிக ஆழமான செல்வாக்கிற்கு உட்பட்ட நிலையில் உள்ளன .

இங்கே முதலில் பாகிஸ்தான் குறித்த ஆய்வை பார்ப்பதற்கு முன்பாக பாகிஸ்தான் -இந்திய உறவு மீதான மேற்கத்தேய பார்வை எவ்வாறு உள்ளது என்பது முக்கியமானதாகும். பாகிஸ்தானிடம் இருக்கும் அணுஆயுத பலம் குறித்த கவலை அமெரிக்க இராணுவ ஆய்வாளர்கள் மத்தியில் எப்பொழுதும் உள்ளது.

பாகிஸ்தானிடம் இருக்கும் அணு ஆயுத தொழில்நுட்பம் அமெரிக்க எதிர் போக்குடைய எந்த சக்திகளிடமும் போய் விடக் கூடாது என்பதிலே அமெரிக்க இராணுவ ஆய்வாளர்கள் மிகவும் கரிசனை கொண்டுள்ளனர். அவர்களுடைய கருத்துப்படி,  உலகில் பொதுவாக நாடுகள் தமது தேவைகளுக்காக இராணுவத்தை வைத்திருக்கின்றன, ஆனால் பாகிஸ்தானில் மட்டும் இராணுவம் தனது தேவைக்காக நாட்டை வைத்திருக்கிறது என்பதாகும். ஏனெனில் பாகிஸ்தானிய அரசியலில் இராணுவத்தின் செல்வாக்கு மிகவும் ஆழமானது என்பது அமெரிக்க ஆய்வாளர்களின் பார்வையாக உள்ளது.

அதேவேளை, பிரபல அரசியல், பொருளியல் மேதையும் சமூக பொருளாதார விஞ்ஞான ஆய்வுக்காக நோபல் பரிசு பெற்று கொண்டவருமான  அமர்தியா சென் (Amartya Sen) ,  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது பிரதமர் பதவி ஏற்பு வைபவத்திற்கு பாகிஸ்தானிய பிரதமர் நவாஸ் சரீப் பை விருந்தினர்கள் பட்டியலில் சேர்த்துக் கொண்டதை, நரேந்திர மோடியின் புத்திசாலித்தனம் என்று  மெச்சியிருந்தார்.

அதுமட்டுமல்லாது,  “இந்தியா பிரிக்கப்பட்ட போது காங்கிரஸ் கட்சியினர் இந்து- முஸ்லீம் மக்களிடையே பிரிவினை இருக்கக் கூடாது என்ற கூறி வந்தனர்.  அதாவது இந்து நாடு இந்தியா வென்றும்  இஸ்லாமிய நாடு பாகிஸ்தான் என்றும் பிரிவே இருக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினர். ஆனால் பாகிஸ்தானிய தேச தந்தையாக கருதப்பட்ட தலைவர் முகமது அலி ஜின்னா தான் முஸ்லீம்களுக்கு ஒரு நாடு,  இந்துகளுக்கு ஒருநாடு என்று கூறி வந்தார்.  இப்பொழுது இந்தியாவில் மோடியின் வெற்றியுடன் இந்தியா இந்து நாடாக இன்று மாறியுள்ளது.  இன்று பாகிஸ்தானியர்கள் தமது விருப்பப்படி இஸ்லாமிய நாடாகவும்,  இந்தியா இந்து  நாடாகவும் மாறி, ஜின்னா விருப்பப்பட்ட அந்த மாதிரி அமைப்பை, மோடி இட்டு நிரப்பி இருக்கிறார்” என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அமர்தியா சென்னின் அதே பேட்டியில்  இந்தியா மதசார்பற்ற நாடாக இருப்பதாக கொண்ட சிந்தனையை மோடியால் மாற்ற முடியாது, ஆனால் பாகிஸ்தான் மத சார்புடைய நாடாகவே இருக்கும் சிந்தனையை கொண்டது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்தியாவின் வளர்ச்சியும் அமெரிக்க இராணுவ தொழில் நுட்ப, இராசதந்திர பலமும் தெற்காசியாவின் பல நாடுகளை சமூக ,பொருளாதார,  அரசியல் மாற்றங்களை உருவாக்கி வருகிறது.  சென் அவர்களின் கூற்றுக்கு இணங்க ஆரம்பத்திலிருந்தே இந்திய – பாகிஸ்தானிய போட்டிநிலையை தமது பூகோள நலன்களின் தேவைக்கு ஏற்ப இன்றும் மத வடிவிலான ஒருபார்வை மேலை நாடுகளால் நகர்த்தப்படுகிறது.

இந்த நகர்வு அதீத போட்டி மனப்பாங்கை ஒருபகுதிக்கும் அதீத அதிகார நிலையை மறுபகுதிக்கும் உள்ளார்ந்த நிலையில் உருவாக்குவதில் கரிசனை காட்டப்படுகிறது. போட்டி மனநிலை கொண்ட பாகிஸ்தான், இந்தியாவுக்கு நிகரான கேந்திர முக்கியத்துவத்தை தனது வளர்ச்சிக்கு உறுதுணையாக கொண்டு செயற்பட்டு வருகிறது.

சீன- பாகிஸ்தானிய பொருளாதார பாதை ( China-Pakistan Economic Corridor (CPEC)  என்ற, இதுவரை காலத்திலும் சீனா முதலீடு செய்திராத மிகப்பெரிய 46 பில்லியன் டொலர் பெறுமதியான ஒப்பந்தம் ஒன்றை பாகிஸ்தான், சீன அரசுடன் செய்து கொண்டுள்ளதை இந்திய- பாகிஸ்தான் போட்டி நிலைக்கு மிகச்சிறந்த உதாரணமாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

பிராந்திய அளவிலும் உலகப்பரப்பரப்பிலும் மேற்கின் கடல் போக்குவரத்தில் அதிகாரம் செலுத்தும் நீண்ட கால பண்பை மாற்றி அமைக்கும் சக்தியாக உள்ள இந்த CPEC  ஒப்பந்தம் ஆட்டம்-மாற்றீட்டு சக்திகொண்டதாக அமையும் என்ற பரப்புரை பரவலாக உள்ளது. வெறும் அதிவேக வீதி அமைக்கும் ஒப்பந்தமாக அல்லாது போக்குவரத்துடன் தொலைதொடர்பு, சக்திவள கட்டமைப்பு ஆகியவற்றையும் உள்ளடக்கிய 3000 கிலோ மீட்டர் நீளமான திட்டமாக இருப்பதால் பாகிஸ்தானிய பொருளாதார வளர்ச்சியில் பெருமாற்றத்தை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனது உள்நாட்டு பொருளாதாரத்தில் சுழற்சியை ஏற்படுத்தும் குறிக்கோள் கொண்ட“ஒரு சூழல் ஒரு பாதை” திட்டத்தின் கீழ், சீன வட-மேற்கு பிராந்தியமான Xinjiang , Uygur Autonomous Region, Kashgar  எனும் பகுதியிலிருந்து தெற்காக பாகிஸ்தானிய காஷ்மீர் பகுதி பிரதான நகரான கில்கிட் ஊடாக இந்து நதி கரையோரமாக காரக்கோரம் வேகப்பாதை அமைக்கப்பட்டு பாகிஸ்தானிய தலைநகரான இஸ்லாமாபாத் ஊடாக பாகிஸ்தானின் பிரதான மாநிலங்களான பஞ்சாப், சிந்து, பலூசிஸ்தான் மாநிலங்களுடாக தெற்கே கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகமான குவடார் வரை அமைகிறது.

இந்த திட்டத்தின் கேந்திர முக்கியத்துவம் குறித்து பல ஆய்வுகள் பிராந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. பாகிஸ்தானிய பொருளாதார பாதையின் மூலம் சீனாவுக்கு என்ன நன்மைகள் என்பதை நோக்கினால் இத்திட்டம் நிறைவு பெறும் பட்சத்தில் கோர்மூஸ் நீரிணைக்கு மிக அருகில் அமைந்துள்ள குவடார் துறைமுகம் மூலம் அடுத்த நாற்பது வருடத்திற்கு சீனா உலகின் அறுபது சதவீத மசகு எண்ணெய் ஏற்றுமதியை கொண்ட கடற்போக்குவரத்தை கண்காணிக்க முடியும்.

அடுத்து பெரும் தொகையான எண்ணெய் வளங்களை இந்த பாதை யூடாக செல்லும் எண்ணெய்க் குழாய்கள் வழியாக பாதுகாப்பாக பெற்றுக்கொள்ளலாம்.  இதன் மூலம் பல பில்லியன் பெறுமதியான பணச் செலவையும் நேர மிச்சத்தையும் பெற்றுக் கொள்ளலாம். இந்து சமுத்திரம் வழியாக மிக நெருக்கமான  மலாக்கா நீரிணையை ஊடறுத்து தென் சீனக்கடல் வழியாக வந்தடையும்  எண்ணெய் வளத்தை மிகக்குறுகிய காலப்பகுதிக்குள் குறைந்த செலவில் பெற்று கொள்ளக்கூடிய சாத்தியகூறுகள் இருப்பதாக சீன தொழில்நுட்ப பொருளியலாளர்கள் கருதுகின்றனர்.

இது தவிர ஐக்கிய அமெரிக்க கடற்படையின் பிரசன்னம் கூடியளவில் காணப்படும் தென் சீன கடல் பகுதியை தவிர்த்துக் கொண்டு, தனது வழங்கல்களை உறுதி செய்து கொள்ளும் நிலை சீனாவுக்கு ஏற்படும். இதன் முலம் அமெரிக்க கடற்படையினால் தென் சீனக் கடற்பகுதிக்கு கொடுத்து வரும் பெறுமானத்தை வலுவிழக்க அல்லது நீர்த்து போக வைக்க முடியும்.

அத்துடன் குவடார் ஒரு வர்த்தக துறைமுகமாக  சாதாரண மக்கள் தேவையை நோக்காக கொண்ட வகையில் கட்டி அமைக்கப்பட்ட போதிலும் தேவைகள் ஏற்படுமிடத்து இராணுவ கடற்படை உபயோகத்திற்கும் ஏற்றவாறு சீன கடற்படை தளபாடங்களை இலகுவாக பொருத்தி உபயோகப்படுத்த கூடிய வகையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது.

தேவை ஏற்படும் பொழுது எந்தவித வடிவமைப்பு மாற்றங்களும் செய்து கொள்ளாது சீன கடற்படை இராணுவ தேவைகளுக்கு பாவித்து  கொள்ள கூடிய வகையில் ஒவ்வொரு துறைமுகமும் அமைக்கப்பட்டு வருவது குறித்த மேலைத்தேய கேந்திர பாதுகாப்பு நோக்கர்கள் கரிசனை கொண்டுள்ளனர்.

சீனாவின் Uygur பிரதேசத்திலிருந்து பாகிஸ்தானிய எல்லைக்குள் நுழைவதற்கு குஞ்சிராப் கடவை எனும் பகுதி ஊடாக, 1947 ஆம் ஆண்டு தொடக்கம் பாகிஸ்தான் தனது கட்டுபாட்டிற்குள் வைத்திருக்கம் காஷ்மீரப் பகுதி ஊடாக இப்பாதை தொடங்குகிறது. இந்தியா தனது சொந்தமான வரலாற்று முக்கியத்துவம் கொண்ட புறநிலப்பகுதியாக இந்த பிரதேசத்தை பார்க்கிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஒருபகுதியான கில்கிட்-பல்திஸ்தான் மீதான சீன பாகிஸ்தானிய தலையீட்டுகள் தனது புவியியல் முலோபாயத்திற்கு சவால் விடும் நகர்வாக இந்தியா நோக்குகிறது. அதே வேளை நீண்ட காலமாக தீர்க்கப்படாது இருக்கும் இரு நாடுகளுக்கும் இடையிலான காஷ்மீரப் பிரச்சினையை தீர்த்து விடுவதற்கு இது நல்ல சந்தர்ப்பமாக அமைவதாக பாகிஸ்தானிய ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

சீன அதிகாரிகள் பாகிஸ்தானிய தரப்பிற்கு ஏற்கனவே கொடுத்த அழுத்தங்களின் அடிப்படையில் கில்கிட் – பல்திஸ்தான் பகுதியை தனது சட்டபூர்வ மாநிலமாக மாற்றுவதில் பாகிஸ்தான் முயன்று வருகிறது. இந்த வகையில் சீனாவின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டிய நிலையில் இருக்கும் பாகிஸ்தான், இந்தியாவையும் திருப்தி செய்யும் வகையில் தீர்ப்பது குறித்த கவனத்தில் உள்ளது.

அதேபோல சீன-பாகிஸ்தானிய பொருளாதார பாதையின் செயல் வேகம் உச்சநிலையை அடைந்து கொண்டிருக்கும் அதேவேளை, பாகிஸ்தானிய அரசாங்கம் தென்மாநிலமான பலூசிஸ்தானில் பாதுகாப்பு சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்தவேண்டிய தேவையில் உள்ளது. பலூசிஸ்தான் தேசியவாதிகள், இஸ்லாமிய அடிப்படைவாதிகள், மதப் பிரிவினைவாதிகள் என பல ஆயுதக்குழுக்களின் செல்வாக்கினை கடந்து சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்த வேண்டிய பொறுப்பு பாகிஸ்தானிய அரசாங்கத்திடம் உள்ளது

ஆக சடுதியான மாற்றங்களை உருவாக்கக் கூடிய பலூசிஸ்தான் பிரதேசம் இந்த முழுத்திட்டத்திற்கும் வாயிற்கதவாக அமைந்திருப்பது பாகிஸ்தானின் பாதுகாப்பு செலவீனத்தை பெருமளவில் அதிகரிக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.

சீன-பாகிஸ்தானிய பொருளாதார பாதையில் பாகிஸ்தானின் அயல் நாடான ஈரான் இனைந்து கொள்ளும் போது சீன- பாகிஸ்தான்- ஈரானிய கூட்டு மத்திய ஆசிய பிராந்தியத்தை தன்னிறைவு பெற்ற பிராந்தியமாக மாற்றக்கூடிய நிலை ஏற்படலாம் என்பது மேலைதேய ஆய்வாளர்களின் பார்வையாகும்.

பிராந்திய நாடுகள் மத்தியிலான “ஒன்றில்-ஒன்று தங்கி இருக்கக்கூடிய இராசதந்திரம் வளர்ச்சியடையும் போது, மேலைத்தேய இராசதந்திர பலம் பிராந்தியங்களில் வலுவிழந்து போவது தவிர்க்க முடியாது என்பது சர்வதேச உறவு குறித்த கோட்பாட்டாளர்களின் பார்வையாகும்.

பிரதான கனிம வளங்களை கொண்ட மத்திய ஆசியாவின் முக்கியத்துவம் மிக வேகமாக வளர்ச்சி நிலையை கண்டுவரும் அதேவேளை, சீன பொருளாதார உதவியும். இருதரப்பிற்கும் வெற்றியை தரும் பொருளாதார ஒப்பந்தங்களும் நாடுகள் பிராந்திய நாடுகள் மத்தியிலே போர் தவிர்ப்பு உடன்படிக்கைகளை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது.

சீன-பாகிஸ்தானிய பொருளாதார பாதையின் உறுதிப்பாடும் அதன் அவசியமும்  பாகிஸ்தானுக்கு எதிரான எந்த வல்லரசின் நடவடிக்கையும் சீன பொருளாதார வளர்ச்சிக்கான பிராண வாயுவை தடுக்கும் செயலாக சீனா பார்க்க வேண்டிய நிலை ஏற்படும். மிக நீண்ட தூரத்திற்கு முழு நாட்டையும் கொள்ளடக்கி உள்ள இப்பாதை அமைக்கும் திட்டத்திற்காக, பாகிஸ்தானை ஒரு கட்டமைப்பின் கீழ் வைத்திருப்பதன் முலமே சீனா தனது பொருளாதார வளர்ச்சியை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.

தோல்வியுற்ற அரசுகளின் பட்டியலில் பாகிஸ்தானை சேர்த்து விமர்சித்து வரும் மேலை நாடுகள், சிறு சிறு ஆயுதக்குழுக்கள், மதவாத அமைப்புகள், அடிப்படைவாதக் குழுக்களின் தலைமைகளை விமானி அற்ற விமானங்கள் மூலம் குண்டு வீசி அரசியல் படுகொலைசெய்யும் நடவடிக்கைகளை பாகிஸ்தானின் பின்தங்கிய பிரதேசங்களில் மேற்கொண்டு வருகின்றன.

அதேவேளை இந்த குழுக்களை பாகிஸ்தான் கட்டுப்படுத்த வேண்டும் என்பது மேற்கின் தொடர்ச்சியான அழுத்தமாகும். நாட்டின் சட்டம் ஒழுங்கு வலுஅற்ற நிலை, உள்ளுர் மக்களின் வறுமை நிலை, அரசியல் தலைவர்களின் ஊழல் அரசியல், இராணுவ தலையீடுகள், ஆகிய உள்ளக அழுத்தங்களோடு சீன-பாகிஸ்தானிய பொருளாதார பாதையின் புதிய நலன்களை எதிர்பார்த்து பயணிக்கிறது பாகிஸ்தான்.

அடுத்து பர்மாவின் அழுத்தங்கள் குறித்து காணலாம்.

– லோகன் பரமசாமி

*இலண்டனில் வசித்துவரும் லோகன் பரமசாமி அரசறிவியல் துறைசார் மாணவராவர். கட்டுரை பற்றியதான கருத்தினை எழுதுவதற்கு: loganparamasamy@yahoo.co.uk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *