புலனாய்வு அதிகாரிகளை பிணையில் விடுவிக்கும் சிறிலங்கா இராணுவ சட்டப்பிரிவின் முயற்சி தோல்வி
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட, கடத்தல் தொடர்பாக, கைது செய்யப்பட்டுள்ள சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளைப் பிணையில் விடுவிக்க, சிறிலங்கா இராணுவ சட்டப் பிரிவு மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்திருக்கிறது.
பிரகீத் எக்னெலிகொட கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் நேற்று ஹோமகம நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவர்களைப் பிணையில் விடுவிக்க சட்டவாளர் கோரிக்கை விடுத்தார்.
எனினும், படையினரைப் பிணையில் விடுவிக்க நீதிவான் மறுத்துவிட்டார்.
கிரிமினல் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் படையினரின் சார்பாக, இராணுவச் சட்டப்பிரிவு சட்டவாளரை நியமிப்பதில்லை என்பது வழக்கமாகும்.
ஆனால், விதிவிலக்காக, சிறிலங்கா இராணுவ சட்டப் பிரிவு, வரலாற்றில் முதல் முறையாக, வெளியில் இருந்து சட்டவாளர் ஒருவரை படையினரின் சார்பாக வாதிடுவதற்கு நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.