தேசிய பாதுகாப்பு இரகசியங்கள் வெளியே கசியாது – ருவான் விஜேவர்த்தன
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்டது தொடர்பாக இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த 11 அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதால், தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட்டு விடாது என்று சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்தார்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயந்த சமரவீர எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர்.
“ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமற்போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாலும், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாலும், தேசிய பாதுகாப்புத் தொடர்பான இரகசிய தகவல்கள் வெளியே கசிய விடப்படாது பாதுகாக்கப்படும்.
பிரகீத் கடத்தல் தொடர்பாக, 11 இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் நான்கு பேர் சேவையில் உள்ள அதிகாரிகள் அவர்களில் ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளார். நான்கு பேர் ஓய்வுபெற்ற அதிகாரிகள் இவர்களில் இருவர் விடுவிக்கப்பட்டுள்ளனர். மூவர் புலனாய்வுச் செயற்பாட்டார்கள். இவர்கள் மூவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஹோமகம நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், மூன்று இராணுவ அதிகாரிகள் மகசின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இரண்டு ஓய்வுபெற்ற அதிகாரிகள் குற்றப்புலனாய்வுப் பிரிவுத் தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
மகசின் சிறையில் உள்ள புலனாய்வு அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனை உயர் இராணுவ இரகசியங்கள் அம்பலப்படுத்தப்பட்ட மிலேனியம் சிற்றி விவகாரத்துடன் ஒப்பிட முடியாது. இரகசிய ஆவணங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு குற்றப்புலனாய்வுத் துறை கேட்கப்பட்டுள்ளது.
எனவே தேசிய பாதுகாப்புத் தொடர்பான இரகசியத் தகவல்கள் கசியும் என்று அநாவசியமாக அஞ்சத் தேவையில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.