மேலும்

சம்பந்தனின் கணக்கு தப்புமா?

sampanthanஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சர்வதேச அளவில் அதிகரித்து வரும் செல்வாக்கு தமிழ்ர்களுக்குச் சாதகமாக அமையும், என்ற கருத்தை முன்வைத்திருக்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

மட்டக்களப்பில் கூட்டமைப்பின் பிரமுகர்களுடன் நடத்திய சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்திருக்கிறார்.

“மைத்திரிபால சிறிசேனவை பொறுத்தவரையில் சரியானதை செய்ய விரும்புகிறார். சரியானதை செய்யும்போதே இந்த நாட்டில் நல்லிணக்கம் ஏற்படும், சமாதானம் ஏற்படும், நாடு முன்னேறும் என அவர் நினைக்கின்றார்.

அவ்வாறான நிலைப்பாடுகள் காரணமாக சர்வதேச மட்டத்தில் அவரின் செல்வாக்கு அதிகரிக்கிறது.

அவரது செல்வாக்கு அதிகரிக்கும்  அளவுக்கு எமக்கும் நன்மையளிக்கும். அப்போது சர்வதேச சமூகத்தின் கருத்திற்கு அவர் இடமளிப்பார்.” இது தான் அவர் குறிப்பிட்ட விடயம்.

மைத்திரிபால சிறிசேனவின் செல்வாக்கு சர்வதேச அளவில் அதிகரிக்கும் போது, அவர் சர்வதேச அழுத்தங்களுக்குள் சிக்கிக் கொள்வார் என்பதே இதன் சாராம்சம்.

இரா.சம்பந்தனின் கணிப்பு சரியாக அமைந்தால், சர்வதேச அழுத்தங்கள் தமிழர் தரப்புக்குச் சாதகமானதாக மாறும் வாய்ப்புகள் உள்ளன.

ஆனால், அதிகரித்து வரும் மைத்திரிபால சிறிசேனவின் செல்வாக்கு, சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணியும் ஒன்றாக இருக்குமா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

2009ஆம் ஆண்டு மே மாதம், போரை முடிவுக்குக் கொண்டு வந்த போது, ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்சவை உலகம் இரண்டு விதமாக நோக்கியது.

ஒரு தரப்பு அவரை மனித உரிமைகளை காலில் போட்டு நசுக்கிய ஒரு சர்வாதிகாரியாக பார்த்தது. அதனை தமிழர்களின் கண்ணோட்டத்துடன் ஒப்பிடலாம்.

இன்னொரு தரப்பு பயங்கரவாதத்தை வேரோடு அழிப்பதில் வெற்றிபெற்ற ஒரு அபூர்வ தலைவராக பார்த்தது. இது இலங்கை அரசின் கண்ணோட்டத்தை ஒத்தது.

இந்த இரண்டு நிலைளிலும், மகிந்த ராஜபக்சவை பயங்கரவாதத்தை வேரோடு அழிப்பதில் வெற்றி பெற்ற தலைவராக பார்த்த நாடுகளே அதிகமாக இருந்தன. அந்தக் கருத்தே வலுவாக இருந்தது

காரணம், செப்ரெம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னர், பயங்கரவாதம் என்பது உலகத்தை அச்சுறுத்தும் ஒன்றாகவே பெரும்பாலான நாடுகளால் பார்க்கப்பட்டது.

அரசுகளுக்கு எதிரான எல்லா போராட்டங்களும் கிட்டத்தட்ட பயங்கரவாதமாகவே பார்க்கப்படுகின்ற ஒரு நிலை அதனால் ஏற்பட்டது.

அத்தகைய துரதிஷ்ட நிலைக்குள் தமிழர்களின் ஆயுதப் போராட்டமும் சிக்கிக் கொண்டது.

பயங்கரவாதத்துக்கு எதிரான உலகளாவிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வந்த போது, அத்தகைய போராட்டம் வெற்றி பெறுமா என்ற சந்தேகங்கள் உலகளவில் இருந்தது.

ஏனென்றால், ஆயுதப்போராட்ட அமைப்புகளை அடியோடு அழிப்பது சாத்தியமில்லை என்ற கருத்து சர்வதேச மட்டத்தில் காணப்பட்டது. அதற்கான முன்னுதாரணங்களும் அரிதாகவே காணப்பட்டன.

இந்தத் தருணத்தில், பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் வெற்றியைப் பெறலாம் என்று நம்ப வைப்பதற்கான சந்தர்ப்பம் ஒன்று சர்வதேச சமூகத்துக்கு கிடைத்தது.

இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டதை, ஒரு முன்னுதாரணமாக பல நாடுகள் காட்ட முனைந்தன.

அது மகிந்த ராஜபக்சவை உலகளவில் பெரும் செல்வாக்குப் பெற்றவராக மாற்றியது. மனித உரிமைகள் பற்றிய விமர்சனங்களையெல்லாம் பின்தள்ளிக் கொண்டு, அது அவரை முன்னிலைப்படுத்தியது.

இந்த நிலை தான், போர் முடிவுக்கு வந்தவுடன் அதில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை கண்டிக்கும் வகையில் கூட்டப்பட்ட ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் விசேட கூட்டத்தில் சுவிஸ் அரசாங்கம் கொண்டு வந்த தீர்மானத்தையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டது.

இலங்கையின் மனித உரிமை மீறல்களைக் கண்டிப்பதற்காக கூட்டப்பட்ட அந்தக் கூட்டம், கடைசியில் பயங்கரவாதத்தை அடியோடு அழித்த இலங்கை அரசாங்கத்துக்குப் பாராட்டும் தீர்மானத்தை நிறைவேற்ற வழி வகுத்தது.

போரின் முடிவில் மனித உரிமை மீறல்களைக் கண்டித்த நாடுகளை விட பயங்கரவாதத்தை அடியோடு அழித்ததற்காக பாராட்டிய நாடுகளே அதிகம்.

இந்த நூற்றாண்டில் பயங்கரவாதத்தை தோற்கடித்த முதலாவது உலகத் தலைவராக மகிந்த ராஜபக்ச கொண்டாடப்பட்டார். அது அவரது செல்வாக்கை சர்வதேச மட்டத்தில் அதிகரிக்கச் செய்தது.

அமெரிக்காவும் வேறு பல நாடுகளும் கூட, அவரை ஆதரித்தன. அவ்வாறு செய்வதன் மூலம், இலங்கையில் நடந்த மீறல்களுக்கு பொறுப்புக்கூறச் செய்யவும், நிலையான அமைதியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முடியும் என்று பல நாடுகள் நம்பின.

ஆனால், மகிந்த ராஜபக்சவின் செல்வாக்கு அதிகரித்த போதிலும், அத்தகைய அழுத்தங்களுக்கு அவர் அடிபணியவில்லை. மேற்குலகின் அழுத்தங்களுக்குப் பிடிகொடுக்காதவராக அவர் நடந்து கொண்டார்.

கடைசியில், வேறு வழியின்றி, மகிந்த ராஜபக்சவை அதிகாரத்தில் இருந்து அகற்ற வேண்டிய நிலைக்கு அந்த நாடுகளே தள்ளப்பட்டன.

அது போன்றதொரு நிலை மைத்திரிபால சிறிசேன விடயத்தில் ஏற்படாது என்பதற்கு உத்தரவாதம் இல்லை.

ஆனாலும், இங்கு சாதகமான ஒரு விடயம் உள்ளது. மகிந்த ராஜபக்சவுக்கு போரில் வெற்றியை ஈட்டியதன் மூலம் பெற்ற உள்நாட்டுச் செல்வாக்கு அவரை சர்வதேசத்தின் முன்பாக மண்டியிடாத தலைவராக நிற்க வைத்தது.

ஆனால், மைத்திரிபால சிறிசேனவுக்கு உள்நாட்டில் செல்வாக்கு இருந்தாலும், மகிந்த ராஜபக்சவுக்கு இருந்த அளவுக்கு அலையை ஏற்படுத்தவில்லை.

ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றி என்பது, மகிந்த ராஜபக்சவின் எதிர்ப்பு அலையினால் சாத்தியமானதே தவிர, மைத்திரிபால சிறிசேன மீதான கவர்ச்சி அலையினால் ஏற்பட்ட ஒன்று அல்ல.

எனவே, சர்வதேச அளவில் மைத்திரிக்கு அதிகரித்து வரும் செல்வாக்கு அவர் மீது கூடுதல் அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கும், அதற்கு அவர் வளைந்து நெளிந்து போவதற்கும் கூடுதல் வாய்ப்புகளை அளிக்கலாம்.

ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்றிருந்த போதும், மோல்டாவில் நடந்த கொமன்வெல்த் மாநாட்டின் போதும், உலகத் தலைவர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் படம் எடுப்பதற்கு முண்டியடித்ததாக கூறுவதில் அமைச்சர்கள் பலரும் பெருமைப்பட்டுக் கொண்டனர். இது உண்மையும் கூட.

தமிழர் தரப்பைப் பொறுத்தவரையில் இது அச்சுறுத்தலுக்குரிய விடயமும் தான்.

நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக அரசாங்கம் பல்வேறு விடயங்களில் விட்டுக் கொடுத்து நெகிழ்ந்து கொடுப்பதான கருத்து சர்வதேச அளவில் வலுப்பெற்று வருவதும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செல்வாக்கு அதிகரித்து வருவதும் தமிழரின் மீதான  கவனத்தைக் குறைப்பதாகவே பலராலும் கருதப்படுகிறது.

ஆனால், இதற்குப் பின்னாலும் மைத்திரிக்கு ஒரு பொறி இருக்கிறது என்பதைத் தான் இரா.சம்பந்தன் வெளிப்படுத்தியிருக்கிறார்.

சர்வதேச சமூகத்தினால் எந்தளவுக்கு அவர் கொண்டாடப்படுகிறாரோ அந்தளவுக்கு அவர் சர்வதேச சமூகத்தின் கருத்துக்களுக்கும் செவிமடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று அவர் கணிக்கிறார். அதில் உண்மை இல்லாமலும் இல்லை.

2002இல் இலங்கை அரசாங்கத்துடன் போர்நிறுத்த உடன்பாடு செய்து கொண்ட போது, விடுதலைப் புலிகளுடன் மேற்குலகம் நெருங்கிப் பழகியது. நோர்வே, ஜப்பான் போன்ற நாடுகளின் ஊடாக அமெரிக்கா கூட புலிகளை வசப்படுத்த முயன்றது.

புலிகளை இந்த நாடுகள் தலையில் வைத்துக் கொண்டாடியதற்குக் காரணமும் இருந்தது. புலிகளை அரசியல் வழிக்குமறைக்கு கொண்டு வரும் முயற்சியே அது. பிரபாகரனுக்கு வேட்டி கட்டிப் பார்க்க அமெரிக்கா ஆசைப்பட்டது.

அதற்காக, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய அதேவேளை, புலிகள் மீது தடைகளை விதித்து அழுத்தங்களையும் கொடுத்தது. ஆனால் அதற்குள் புலிகள் அகப்படவில்லை.

இது போன்று, இப்போது தலையில் வைத்துக் கொண்டாடப்படும் மைத்திரிபால சிறிசேனவும் சர்வதேச விருப்பங்களை நிறைவேற்ற வேண்டிய பொறிக்குள் சிக்கிக் கொள்வார் என்று இரா.சம்பந்தன் கணக்குப் போட்டிருக்கிறார்.

சர்வதேசத்தின் கருத்துக்கு இவர் இடமளிக்க வேண்டியதொரு சூழல் ஏற்படும் போது, அது தமிழர்களுக்கு நன்மையளிப்பதாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு முதிர்ந்த, பக்குவமான அரசியல் தலைவர் என்ற வகையில் அவரது அரசியல் கணிப்பு சரியானதாக அமைந்தால், மைத்திரிபால சிறிசேனவும் சர்வதேச சமூகத்தின் கருத்துக்கு செவிமடுப்பவராக இருந்தால், அது தமிழருக்கு சாதகமானதாகவே அமையும்.

அதற்கு, மைத்திரிபால சிறிசேனவும், இன்னொரு மகிந்த ராஜபக்சவைப் போல மாறாமல் இருக்க வேண்டியது அவசியம்.

அதைவிட, சர்வதேச அரசியல் சூழமைவும், இலங்கைக்கு அழுத்தங்களைக் கொடுக்கக் கூடிய ஒன்றாகத் தொடர வேண்டும்.

அவ்வாறானதொரு நிலை இல்லாவிட்டால் அதாவது, மேற்குலகின் பிடிக்குள் சிக்காமல் இலங்கை தப்பிக்க முனையும் ஒரு சூழல் ஏற்பட்டால், வேதாளம் மீண்டும் முருங்கையில் ஏறிய கதையாகி விடும்.

– சத்ரியன்
வழிமூலம் – வீரகேசரி வாரவெளியீடு

ஒரு கருத்து “சம்பந்தனின் கணக்கு தப்புமா?”

  1. Karthigesu Indran
    Karthigesu Indran says:

    தமிழர்களின் பிரச்சினை எப்படியாவது நல்ல தீர்வு கிடைப்பதை அனைவரும் விரும்புகிறார்கள் ஆரம்பத்தில் சமத்துவ சோசலிச சிந்தனை மிக்க.SWRD. பண்டாரநாயக்கா தந்தை செல்வநாயகத்துடன் செய்து கொண்ட தீர்வு நகலை கிழித்து எறிந்ததும் பேரினவாதிகளை திருப்திப்படுத்த1957.ல் சிங்கள காடையர்களை ஏவி முதல் இனக்கலவரத்தை உருவாக்கி பலநூறு தமிழர்களை கொன்றொளித்ததுடன் பல கோடி சொத்துக்களையும் கொள்ளை அடித்து தீயிட்டு கொழுத்தினார் பின் புத்த பிக்குமாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். மக்களிடத்திலோ நாடாளுமன் மன்றத்திலோ முழு செல்வாக்கு இல்லாத மகிந்த குழுவினால் சூழப்பட்ட மைத்திரியும் தமிழருக்கு எதுவித தீர்வும் கிடைக்க கூடாது என்தில் உறுதியாக இருக்கின்ற ரனிலும் ஒரு தீர்வை கொண்டு வந்தால் எட்டாவது உலக அதிசயம்தான் சம்பந்தருக்கு இது கடைசி சந்தப்பம் மனம் போனபடி உளறுவார் பொறுத்து இருந்து பார்ப்போம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *