பிரதேசங்களுக்கிடையில் சமமான பொருளாதார வாய்ப்புக்கு அடித்தளமிட வேண்டும் – அமெரிக்க அதிகாரி
சிறிலங்காவில் பிரதேசங்களுக்கிடையில் சமமான பொருளாதார வாய்ப்புகளுக்கு அடித்தளம் இடப்பட வேண்டும் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அடிநிலைச் செயலராகப் பொறுப்பேற்கவுள்ள, தூதுவர் தோமஸ் சானொன் தெரிவித்துள்ளார்.
நேற்று திருகோணமலைக்குப் பயணம் மேற்கொண்டிருந்த அவர், கிழக்கின் அபிவிருத்தி மற்றும் சமூக பொருளாதார செயற்பாடுகள் குறித்து நடந்த கலந்துரையாடலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
”இது சிறிலங்காவுக்கான எனது முதல் பயணம். தெற்காசியாவுக்கான முதல் பயணம்.
நான் தங்கியிருந்த விடுதியில் இருந்து சமுத்திரத்தைப் பார்த்த போதும், இந்த இடத்துக்கு உலங்குவானூர்தி மூலம் பயணம் மேற்கொண்டிருந்த போதும்,அற்புதமாக இருந்தது.
இந்த அழகிய நாட்டிலேயே தங்கி விடவேண்டும் என்ற வழியில் நான் நினைத்துக் கொண்டேன்.
சிறிலங்காவில் உள்ள தொழில் முனைவோரின் கடின உழைப்பையும் யு.எஸ்.எயிட்டின் நிபுணத்துவத்தையும் இணைக்கும் வகையில் இந்நிகழ்வு இங்கு இடம்பெறுகிறது.
சிறிலங்காவில் தற்பொழுது நல்லதொரு அரசியல் சூழ்நிலை உருவாகியிருப்பதை அமெரிக்கா வரவேற்கிறது.
இங்கு சிவில் அமைப்புகளும் அதிகாரிகளும் தலைவர்களும் செயற்படும் விதம் குறித்து நான் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைகிறேன்.
சிறிலங்காவின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் அரசியல் சமத்துவத்தை உண்டாக்கவும் அவர்கள் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருவதையும் என்னால் உணர முடிகிறது.
உங்களின் முன்னேற்றத்துக்கு ஆதரவளிப்பதிலும், இணைந்து பணியாற்றுவதிலும் அமெரிக்கா பெருமை கொள்கிறது.
சமூக,பொருளாதார மற்றும் அரசியல் மறுமலர்வுகளுக்காக உங்களோடு பணியாற்றுவதற்கு அமெரிக்கா என்றும் தயாராகவுள்ளது.
சிறிலங்காவுக்கும் அமெரிக்காவுக்குமான உறவுகள் கடந்த 60 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும்.
கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக சிறிலங்காவின் அபிவிருத்தி சார்ந்த உதவிகளை செய்து வருகின்றோம்.
விவசாயம், மீன்பிடிக்கைத்தொழில், இயற்கைவளங்கள், சுகாதாரம், கல்வி, ஜனநாயகம், நல்லாட்சி என்ற வகையிலும் மனிதநேய உதவிகள் என்ற வகையிலும் செய்வதற்கு அமெரிக்கா என்றும் தயாராகவுள்ளது.
சிறிலங்காவில் பிரதேசங்களுக்கிடையிலான சமமான பொருளாதார வளர்ச்சி, தொழில்துறை உருவாக்கம், வேலைவாய்ப்பு என்ற பலதுறைசார்ந்த அபிவிருத்திகள் காணப்படவேண்டும். அதற்கான அடிப்படைகள் இடப்பட வேண்டும்.
இத்தகையதொரு பொருளாதார , சமூக , அரசியல் பயணமென்பது நீண்டதொரு பயணமாகும். அந்த நீண்ட பயணத்தில் சகல இனங்களும் சமூகங்களும் பங்கு கொள்ள வேண்டும்.
சகிப்பு, சமாதானம், நல்லிணக்கம் என இலங்கை மக்களின் வரலாற்றுப் பயணத்தில் அமெரிக்கா என்றும் துணைநிற்கும்.
நாம் எல்லோரும் ஒன்று இணைந்து நல்ல சமூகத்தை, சிறந்த எதிர்காலத்தை உருவாக்கமுடியுமென்பது எமது நம்பிக்கையாகும்.” என்ற தெரிவித்தார்.
இந்தநிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட், கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்னான்டோ, ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கிழக்கிற்கான பயணத்தின் போது தோமஸ் சானொனுடன், அமெரிக்க அதிகாரிகள், திருகோணேஸ்வரர் ஆலயத்துக்கும் சென்று வழிபாடுகளில் கலந்து கொண்டார்.