மேலும்

சிறிலங்காவுக்கு போர்க்கப்பல் அன்பளிப்பு – யாரும் எதிர்க்கவில்லை என்கிறது இந்தியா

SLNS Sagaraசிறிலங்காவுக்கு இந்தியக் கடலோரக் காவற்படையின் ஆழ்கடல் ரோந்துக் கப்பலை அன்பளிப்பாக வழங்கியதற்கு, யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்று இந்திய பாதுகாப்பு இணை அமைச்சர் ராவ் இந்திரஜித் சிங் தெரிவித்துள்ளார்.

இந்திய நாடாளுமன்றத்தில் நேற்று எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த அவர்,

“இந்தியக் கடலோரக் காவல்படையின் பாவனையில் இருந்து ‘வரஹா’ என்ற  ஆழ்கடல் ரோந்துக் கப்பல், 2006ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் குத்தகை அடிப்படையில் சிறிலங்கா கடற்படைக்கு வழங்கப்பட்டது.

பின்னர் காலத்துக்குக் காலம் குத்தகை நீடிக்கப்பட்டது. சிறிலங்கா கடற்படையின் கோரிக்கைக்கு அமைய, கடந்த ஓகஸ்ட் மாதம் ‘வரஹா’ ரோந்துக்கப்பல் சிறிலங்காவுக்கு நிரந்தரமாக அன்பளிப்புச் செய்யப்பட்டது.

இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் நல்லெண்ண அடிப்படையில், இந்தக் கப்பல் வழங்கப்பட்டது.

SLNS Sagara

சிறிலங்காவுக்கு இந்தக் கப்பலை வழங்கும் இந்திய அரசாங்கத்தின் முடிவுக்கு, பாதுகாப்பு அமைச்சுக்கு இந்திய நாடாளுமன்றப் பிரதிநிதிகள் எவரும் எதர்ப்புத் தெரிவிக்கவில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

‘விக்ரம்’ வகையைச் சேர்ந்த இந்த ஆழ்கடல் ரோந்துக்கப்பலுக்கு சிறிலங்கா கடற்படை, ‘ எஸ்எல்என்எஸ் சாகர ‘என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்தப் ஆழ்கடல் ரோந்துப் படகு, விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது, அவர்களின் கடல்வழி விநியோகங்களை தடை செய்வதில் முக்கிய பங்காற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *