மேலும்

பேரம் பேசும் பலம் கூட்டமைப்புக்கு உள்ளதா?

TNA_PRESSதமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் பேரம் பேசும் பலத்தைக் கொடுங்கள், அதனைக் கொண்டு தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வைப் பெற்றுத் தருவோம் என்று, நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கோரியிருந்தார்.

இதன் தொடர்ச்சியாக நடந்த தேர்தலில், நாடாளுமன்றத்தில் 16 ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும், வகையிலான பேரம் பேசும் பலத்தை வடக்கு கிழக்கில் உள்ள வாக்காளர்கள் கூட்டமைப்புக்குக் கொடுத்திருந்தனர்.

ஆனால், அந்தப் பேரம் பேசும் பலத்தை கூட்டமைப்பு இதுவரை பயன்படுத்தியிருக்கிறதா? – அந்த பலத்தை வைத்து இதுவரை எதனைச் சாதித்துள்ளது? என்ற கேள்விகள் பரவலாக எழுந்திருக்கிறது.

சில நாட்களுக்கு முன்னர், புலம்பெயர்ந்து வாழும் நண்பர் ஒருவர் உரையாடிய போது, வரவுசெலவுத் திட்டத்தை கூட்டமைப்பு ஆதரித்தது ஏன்? வரவு செலவுத் திட்டத்தை ஆதரித்து வாக்களிப்பதற்கு பிரதியீடாக, அரசியல் கைதிகளின்  விடுதலையை வலியுறுத்தி பேரம் பேசியிருக்கலாமே என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

உண்மை தான், ஆனாலும் இப்போதைய அரசியல் சூழலில் அரசாங்கத்தைக் காப்பாற்றவே கூட்டமைப்பு முனைவதாக தெரிகிறது என்று பதில்  கூறிய போது, இவர்கள் 16 பேர் வாக்களித்துத் தான் அரசாங்கத்தைக் காப்பாற்ற வேண்டும் என்றில்லையே என்று திருப்பிக் கேட்டார் அந்த நண்பர்.

இந்த உரையாடலில் இருந்து விளங்கிக் கொள்ளக்கூடிய ஒரு விடயம் உள்ளது.

அதாவது, அரசாங்கத்துடனான கூட்டமைப்பின் உறவுகள், தொடர்புகள் விடயத்தில் தமிழ் மக்களுக்குள் நிறையவே கேள்விகள், சந்தேகங்கள் இருக்கின்றன.

எதற்காக கூட்டமைப்பு இவ்வாறு நடந்து கொள்கிறது- எதற்காக பொறுமை காக்கிறது- ஏன் கூட்டமைப்பினால் இதனைச் செய்ய முடியாதிருக்கிறது என்பது போன்ற விமர்சன ரீதியான கேள்விகளும், சந்தேகங்களும், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இருக்கிறது.

அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களுக்கு எத்தகைய நிவாரணங்களையோ, உதவிகளையோ அளிக்கும் வகையில் தயாரிக்கப்படவில்லை என்பதே கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அத்தனை பேரினதும் கருத்து.

இதனை அவர்கள் வரவுசெலவுத் திட்ட விவாதங்களின் போது, நாடாளுமன்றத்துக்குள்ளேயும், வெளியேறும் பல்வேறு சந்தர்ப்பங்களில் எடுத்துக் கூறியிருக்கிறார்கள்.

இந்தநிலையில் தான், தமிழ் மக்களுக்கு உதவக் கூடிய ஒன்றாக வரவுசெலவுத் திட்டம் இல்லை என்பதை உணர்ந்திருந்த போதிலும், கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதற்காக ஆதரவாக வாக்களிக்கத் தீர்மானித்தனர் என்ற கேள்வி மக்களிடம் இருக்கிறது.

கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில், வரவுசெலவுத் திட்டத்துக்கு ஆதரதவாக வாக்களிப்பதென முடிவு செய்யப்பட்டிருந்தாலும், பங்காளிக் கட்சிகளில் ஒன்றாக ஈபிஆர்எல்எஎவ்வின் சார்பில் தெரிவான சிவசக்தி அனந்தன் மற்றும் சிவமோகன் ஆகியோர் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, கூட்டமைப்பின் ஏனைய 14 உறுப்பினர்களும் ஆதரித்து வாக்களிக்கும் அளவுக்கு இந்த வரவுசெலவுத் திட்டம் ஒன்றும் தமிழர்களுக்கு உதவியளிக்கக் கூடியதாக இருக்கவில்லை.

இருந்தாலும், கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஆதரவளித்ததற்கான காரணத்தை, வாக்கெடுப்புக்கு முன்னரே, நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா விபரித்திருந்தார்.

அதில் அவர், அரசாங்கம் செயற்படும் விதம், வடக்கு மாகாணசபையுடனோ மக்கள் பிரதிநிதிகளுடனோ கலந்துரையாடாமல் வரவுசெலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டது உள்ளிட்ட விடயங்களைச் சுட்டிக்காட்டியிருந்தார்.

அதாவது, கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து அவர்களின் ஆலோசனையுடன் வரவுசெலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டிருந்தால், பயனுடையதாக இருந்திருக்கும் என்று குறிப்பிட்டார்.

தமது கோரிக்கைகளை அரசாங்கம் புறக்கணித்து வருகின்ற போதிலும் பொறுமை காப்பதற்கு காரணம், அரசியல் தீர்வு ஒன்றைப் பெற்றுக் கொள்வது தான் என்றும், அதற்காகவே பொறுத்திருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.

நிலையான அரசியல் தீர்வு ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக நல்லிணக்க மற்றும் பொறுப்புக்கூறல் விடயங்களை நிறைவேற்ற வேண்டும் என்று, ஜெனிவா தீர்மானம் கூறியிருந்த போதிலும், அந்த தீர்மானம் தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றை உத்தரவாதப்படுத்தும் ஒன்றாக இருக்கவில்லை.

அதேவேளை, இந்த தீர்மானத்தில் அரசாங்கம் தான் பங்களாரே தவிர, கூட்டமைப்பு அல்ல.

எனவே கூட்டமைப்பு முண்டு கொடுத்தாலும் சரி, கொடுக்கா விட்டாலும் சரி, ஜெனிவா தீர்மானத்தின் கடப்பாடுகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்பது ஒரு விடயம்.

மாவை சேனாதிராசா குறிப்பிட்டது போன்று, இறுதியான அரசியல் தீர்வு ஒன்றுக்காகவே பொறுமை காக்கிறோம் என்பது உண்மையாகவே இருந்தாலும், அதனை அரசாங்கத்துக்கு ஆதரவளித்துத் தான் அடைய முடியுமா என்ற கேள்வி இருக்கிறது.

தற்போதைய அரசாங்கத்திடம் இருந்து, தமிழ் மக்களின் சார்பாக, கூட்டமைப்பினால் பெற்றுக் கொடுக்க முடிந்துள்ள விடயங்கள் மிகமிகச் சிறியவை தான்.

ஆனால் இதனையும் கூட மகிந்த ராஜபக்சவின் காலத்தில் செய்ய முடியாத நிலையே இருந்து வந்தது என்பதையும் ஏற்கத் தான் வேண்டும்.

சின்னச்சின்ன விடயங்களை மட்டுமே அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக் கொடுக்க முடிந்துள்ள நிலையில், மிகப்பெரிய இலக்கான அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுப்பது சாத்தியமா என்ற கேள்விகள் எழுவதில் நியாயம் இருக்கிறது.

உதாரணத்துக்கு, கூட்டமைப்பினால், அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பை பெற்றுக் கொடுக்க முடியவில்லை. இது கூட்டமைப்புக்கு சவாலான விடயமாகவே இருக்கிறது.

இந்த இடத்தில், வரவுசெலவுத் திட்டத்தை ஆதரிக்க அரசியல் கைதிகளின் விடுதலையை வைத்து பேரம் பேசியிருக்கலாமே என்ற கேள்வி எழுப்பிய நண்பரின் விடயத்துக்கு வருவோம்.

அவரது கேள்வியிலேயே அதற்கான பதிலும் இருந்தது. 16 பேர் வாக்களித்து தான் அரசாங்கத்தை காப்பாற்ற வேண்டும் என்பதில்லையே என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

அது தான் உண்மை. ஏனென்றால், அரசாங்கத்துக்கு ஏற்கனவே போதிய பெரும்பான்மை பலம் இருக்கிறது. கூட்டமைப்பின் ஆதரவு இருந்தாலும் சரி, இல்லாது போனாலும் சரி, அரசாங்கம் கவிழப் போவதில்லை.

பேரம் பேசுவதற்கான வாய்ப்பு ஒன்று இல்லாதபோது, பேரம் பேச முடியாத நிலை தான் கூட்டமைப்புக்கு இருக்கிறது.

பேரம் பேசுதல் என்பது, ஒரு வியாபார தந்திரம். அங்கிருந்தே அது அரசியலுக்கு வந்தது.

தேவை ஒன்று இருக்கும் போது தான் எந்தப் பொருளுக்கான விலை பற்றிய கேள்வி எழும். அது தான் பேரம் பேசும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

தனியே ஐதேக ஆட்சியமைத்திருந்தால், கூட்டமைப்பினால் பேரம் பேச முடிந்திருக்கும்.

அத்தகையதொரு தருணத்தில், ஒருவேளை அரசியல் கைதிகளின் விடுதலை மட்டுமல்ல அதற்கு அப்பாற்பட்ட பல விடயங்களும் சாத்தியமாகியிருக்கலாம்.

ஆனால், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், ஐதேகவும் இணைந்து பெரும்பான்மை பலம் கொண்டு ஆட்சியை அமைத்திருக்கும் நிலையில், பேரம் பேசும் வாய்ப்பு இல்லாத போது, கூட்டமைப்பினால் எதையும் செய்ய முடியாது.

இப்படியான நிலையில், கூட்டமைப்பு வரவுசெலவுத் திட்ட விடயத்தில் ஏன் நெகிழ்வுப் போக்குடன் நடந்து கொண்டது, நடுநிலை வகித்திருக்கலாமே, என்ற கேள்வியும் எழலாம்.

ஆனால், கூட்டமைப்பு அரசாங்கத்துடன் முரண் அரசியல் செய்யும் தரப்பாக தன்னைக் காட்டிக் கொள்ளத் தயங்குகிறது. இதற்கு, மேற்குலக அழுத்தங்களோ ஆலோசனைகளோ காரணமாக இருக்கலாம்.

தற்போதைய அரசாங்கத்தின் அணுகுமுறை மாற்றங்களை சர்வதேச சமூகம் தலையில் வைத்துக் கொண்டாடுகிறது என்பதை, அண்மைய நாட்களில் கொழும்பு வந்த அத்தனை வெளிநாட்டு இராஜதந்திரிகளின் கருத்துக்களில் மாத்திரமன்றி உலகத் தலைவர்களின் கருத்துக்களிலும் பிரதிபலித்தது.

அதாவது புதிய அரசாங்கம் விட்டுக் கொடுப்புடன் நடக்கிறது, நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்குச் சாதகமான சமிக்ஞைகளை வெளிப்படுத்துகிறது என்று சர்வதேச சமூகம் உறுதியாக நம்புகிறது.

இலங்கை அரசாங்கத்தின் இராஜதந்திர அணுகுமுறை சர்வதேச சமூகத்தை தன் பக்கத்தில் கட்டிப்போட வைத்திருக்கிறது.

தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் காரியங்களில் பெரிதாக அரசாங்கம் எதையும் செய்து விடாத போதிலும், மேற்குலக நாடுகளை கைக்குள் போட்டுக் கொள்ளத் தேவையான காரியங்களை அரசாங்கம் செய்திருக்கிறது.

இது சர்வதேச மட்டத்தில் அரசாங்கம் தொடர்பான ஒரு நல்லபிப்பிராயத்தை ஏற்படுத்தியிருக்கிறது,

இப்படியான நிலையில் முரண் அரசியல் நடத்த முயன்றால், அது மேற்குலக ஆதரவை இழக்கச் செய்து விடும் என்ற அச்சம் கூட்டமைப்புத் தலைமைக்கு ஏற்பட்டிருக்கலாம்.

அல்லது அவர்களின் பொறுமைக்கு வேறு காரணங்களும் இருக்கலாம்.

இரா. சம்பந்தன் அடிக்கடி ஒன்றை ஊடகங்களிடம் கூறுவதுண்டு, “நாம் பேசிய விடயங்கள் எல்லாவற்றையும் உங்களிடம் கூற வேண்டிய அவசியம் இல்லை” என்பதே அது.

இராஜதந்திர சந்திப்புகளின் எல்லா இரகசியங்களும் எல்லோராலும் வெளியிடப்படுவதில்லை என்பது உண்மையே. அது ஒரு இராஜதந்திர மரபும் கூட.

ஆனாலும் வாக்களித்த மக்களுக்கு உண்மை நிலை தெரிய வேண்டியது- தெரியப்படுத்தப்பட வேண்டியது அவசியம்.

இத்தகைய தருணத்தில், கூட்டமைப்புக்கு பேரம் பேசும் பலம் இருந்தாலும், அதற்கான சூழல் ஒன்று இல்லாத நிலையில், எவ்வாறு இறுதியான அரசியல் தீர்வு ஒன்றுக்கு அரசாங்கத்தை இழுத்து வரப் போகிறது என்ற சந்தேகம் மக்களிடம் இருக்கிறது.

அதைவிட, அரசாங்கத்துடன் நெகிழ்வுப் போக்குடன் செயற்படுவது ஏன் என்ற கேள்வியும் இருக்கிறது.

இத்தகைய கேள்விகள் சந்தேகங்களுக்கு, சரியான விளக்கங்களை கூட்டமைப்புத் தலைமை அளிக்காது போனால், இதுபோன்ற கேள்விகள் சரியோ தவறோ, இதுவே நியாயம் என்றாகி விடலாம்.

– கபில்

வழிமூலம் – வீரகேசரி வாரவெளியீடு (06-12-2015)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *