மேலும்

பிணையில் விடுவிக்கப்பட்டவர்களும் தண்டிக்கப்படுவர்- என்கிறது சிறிலங்கா அரசு

rajitha-senarathnaகுற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் நாட்டின் சட்டங்களுக்கு அமைவாக, பிணையில் விடுவிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்களும் தண்டிக்கப்படுவார்கள் என்று சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளரான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

”விடுதலைப் புலிகள் இயக்க சந்தேகநபர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தாக்கல் செய்வதற்கு சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட காலஅவகாசத்துக்குள், வழக்குத் தாக்கல் செய்யப்படாவிட்டால், அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள்.

முன்னைய அரசாங்கம், 2010ஆம் ஆண்டு 95 விடுதலைப் புலிகள் இயக்க சந்தேகநபர்களை விடுதலை செய்தது. அவர்களில் ஐந்து பேர் தீவிரமான குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள்.

பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் பலரும், விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்களை பிணையில் விடுவிப்பதால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்கள் விடுவிக்கப்பட்டது குறித்து, சட்டமா அதிபர் திணைக்களமோ, காவல்துறையோ பகிரங்கப்படுத்த தவறியுள்ளது.

இதுபற்றி அரசாங்கத்துக்கு தெரியப்படுத்தியிருக்க வேண்டியது சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் காவல்துறையின் பொறுப்பாகும். ஆனால் இன்னமும் அவர்கள் அமைதியாக இருக்கின்றனர்.

இதுபற்றி கடந்த நவம்பர் 24ஆம் நாள் வரை நாம் அறிந்திருக்கவில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *