மேலும்

சென்னையில் வடிகிறது வெள்ளம் – 49 சடலங்கள் மீட்பு

chennai rainசென்னை நகர மக்களைப் பெருந்துயரில் ஆழ்ந்தியுள்ள வெள்ளம் இன்று சற்று வடியத் தொடங்கியுள்ள நிலையில், வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

இன்று காலை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு மொத்தம் 49 சடலங்கள் கொண்டு வரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவற்றில் 35 சடலங்கள் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் சடலங்கள் என்றும், இவை வெள்ளம் வடிந்த நிலையிலும், ஆங்காங்கே வெள்ளத்தில் மிதந்து வந்தபோதும் மீட்கப்பட்டவை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியட் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 14 நோயாளர்கள் மின்சாரம் கிடைக்காததாலும், மின்பிறப்பாக்கியை இயக்க முடியாததாலும், செயற்கை சுவாசம் அளிக்க முடியாமல் இன்று அதிகாலை இறந்துள்ளனர். இவர்களின் சடலங்களும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

காஞ்சிபுரத்தில் நேற்று மட்டும் 26 பேர் வெள்ளத்துக்குப் பலியாகியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, ஏரிகளில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதாலும், மழை பெய்வது குறைந்துள்ளதாலும், ஆறுகளின் நீர் மட்டம் குறைந்து. இன்று காலை சென்னை நகரில் பல பகுதிகளில் தேங்கியிருந்த வெள்ளம் வழிந்தோடத் தொடங்கியுள்ளது.

பல இடங்களில் முற்றாகவே வெள்ளம் வடிந்து இயல்பு நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பொதுமக்கள் தமக்கான உணவு மற்றும் பிற தேவைகளுக்காக வர்த்தக நிலையங்கள், மருத்துவமனைகளை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

வாகனப் போக்குவரத்துகளும், தொடருந்து சேவைகளும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டும் இடம்பெற்று வருகின்றன.

இலட்சக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தற்காலிக இடங்களில் தங்கியுள்ள நிலையில், அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் பணிகளிலும், மீட்புப் பணிகளிலும் முப்படைகள், மற்றும் அரச அதிகாரிகளும், பொதுமக்களும் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *