மேலும்

சிறிலங்கா இராணுவத்தை தரமுயர்த்த உதவுவதாக இந்தியத் தளபதி உறுதி

General Dalbir Singh  colombo (1)சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் தல்பீர்சிங் சுஹக், இன்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா மற்றும், உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

நேற்று கொழும்பு வந்த இந்திய இராணுவத் தளபதிக்கு இன்று காலை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் மைதானத்தில் அணிவகுப்பு மரியாதையுடன் கூடிய வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து, சிறிலங்கா இராணுவத் தலைமையகத்துக்கு சென்ற இந்திய இராணுவத் தளபதிக்கு, சிறிலங்காவின் உயர் மட்ட இராணுவ அதிகாரிகள் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டனர்.

இதையடுத்து, இந்திய இராணுவத் தளபதிக்கும், சிறிலங்கா இராணுவத் தளபதி தலைமையிலான உயர்மட்டக் குழுவினருக்கும் இடையிலான பேச்சுக்கள் இடம்பெற்றன.

இதன்போது, இருநாடுகளுக்கும் இடையிலான வரலாற்றுத் தொடர்புகள் குறித்தும், 1987இல் இந்திய அமைதிப்படையினர் சிறிலங்காவில் நிலைகொண்டிருந்தது குறித்தும் இரு நாட்டுத் தளபதிகளும் நினைவுபடுத்திக் கொண்டனர்.

General Dalbir Singh  colombo (2)General Dalbir Singh  colombo (3)General Dalbir Singh  colombo (4)

சிறிலங்காவில் நிலை கொண்டிருந்த போது, ஒரு கொம்பனி தளபதியாக தாம் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வன்னிப் பகுதிகளில், பணியாற்றிய அனுபவங்கள் குறித்து இந்திய இராணுவத் தளபதி நினைவுகூர்ந்தார்.

இந்தச் சந்திப்பின் போது பிராந்தியத்தின் தற்போதைய நிலவரங்கள் விவகாரங்கள் குறித்தும் ஆராயப்பட்டது.

தகவல் பரிமாற்றம் மூலம் சுமுகமான முறையில் இந்தப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டது.

சைபர் தாக்குதல் உள்ளிட்ட வளர்ந்துவரும் அச்சுறுத்தல்களைச் சமாளிக்க, சிறிலங்கா இராணுவத்தை, அனைத்துலக தரங்களுக்கேற்ப நவீன மயப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை இந்திய இராணுவத் தளபதி சுட்டிக்காட்டினார்.

இந்திய இராணுவத் தளபதியின் கருத்தை ஏற்றுக் கொண்ட சிறிலங்கா இராணுவத் தளபதி, இந்த புதிய பரப்புகளில் சிறிலங்கா இராணுவத்துக்கு இந்திய இராணுவம்  பயிற்சிகளை  அளிப்பதற்கான வாய்ப்புகள் குறித்து பரிசீலிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இந்தப் பேச்சுக்களின் போது, இரண்டு நாட்டு இராணுவங்களினதும் பயிற்சித் திட்டங்கள் குறித்தும் பேச்சுக்கள் நடத்தப்பட்டன.

சிறிலங்கா இராணுவத்துக்கு தொடர்ந்து பயிற்சி அளிப்பதற்கான உறுதி மொழியை அளித்த இந்திய இராணுவத் தளபதி, எதிர்காலத்தில் இதனை விரிவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கவும் இணக்கம் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா இராணுவத்தின் இராணுவத் தேவைகளை தரமுயர்த்துவதற்கான தொழில்நுட்ப உதவிகளை தமது இராணுவம் வழங்கத் தயாராக இருப்பதாகவும், இந்திய இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

General Dalbir Singh  colombo (5)General Dalbir Singh  colombo (6)General Dalbir Singh  colombo (7)

அதேவேளை இந்திய இராணுவத் தளபதி இன்று காலை பாதுகாப்பு அமைச்சில், சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன, பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி, மற்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆகியோரைத் தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *