மேலும்

கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனுக்கு நுழைவிசைவு வழங்க சிறிலங்கா மறுப்பு

jayabalanநோர்வேயில் வசிக்கும் ஈழத்துக் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனுக்கு சிறிலங்கா வருவதற்கு, நுழைவிசைவு வழங்க சிறிலங்கா அரசாங்கம் மறுத்துள்ளது.

கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் எழுதிய மூன்று படைப்புகளின் சிங்கள மொழியாக்கத் தொகுப்பான ‘செக்கு கோண’ நூல் நேற்று பிற்பகல் 3 மணியளவில் யாழ். பொது நூலக மண்டபத்தில் வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்வில் பங்கேற்க கவிஞர் வ.ஐ.ச ஜெயபாலனுக்கு, சிறிலங்கா அரசாங்கம் நுழைவிசைவு வழங்க மறுத்துள்ளது.

சிறிலங்காவின் புதிய அரசாங்கம் தனக்கு நுழைவிசைவு விண்ணப்பத்தை நிராகரித்து விட்டதால் இந்த நிகழ்வில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் தனது முகநூலில் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன் வதிவிட நுழைவிசைவைக் கொண்டிருப்பதால், அது காலாவதியான பின்னரே விண்ணப்பிக்க முடியும் என்று அரசாங்கத் தரப்பில் கூறப்பட்ட போதிலும், தன்னிடம் வதிவிட நுழைவிசைவு இல்லை என்று கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன் தெரிவித்துள்ளார்.

கடந்த 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன் மாங்குளத்தில் உள்ள தனது தாயாரின் நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்தச் சென்ற போது, சிறிலங்கா படையினரால் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டிருந்தார்.

படங்கள் -சிறிலங்கா மிரர்

படங்கள் -சிறிலங்கா மிரர்

கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனின் மூன்று குறுநாவல் படைப்புகளை, யாழ்.பல்கலைக்கழக மொழியியல் துறை விரிவுரையாளர் விமல் சுவாமிநாதன் ‘செக்கு கோண’ என்ற பெயரில் சிங்களத்தில் மொழிபெயர்ப்புச் செய்துள்ளார்.

இந்த நிகழ்வில், சிங்களத்தில் உபுல்சாந்த சன்னஸ்கல எழுதிய நூலின் தமிழ் மொழியாக்கமான “அம்மா“ என்ற நூலும் நேற்று வெளியிடப்பட்டது.

இந்த நூலையும் விரிவுரையாளர் விமல் சுவாமிநாதன் மொழியாக்கம் செய்துள்ளார்.

இந்த நிகழ்வில், தென்னிலங்கை சிங்கள கலைஞர்கள், எழுத்தாளர்களால் யாழ். பொது நூலகத்துக்கு, 10,000 நூல்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *