மேலும்

மோல்டாவில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருக்கு நேர்ந்த கதி

mangala-samaraweera-moltaகொமன்வெல்த் உச்சிமாநாட்டில் பங்கேற்கச் சென்றுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட சிறிலங்கா குழுவினர், மோல்டாவில் உரிய கௌரவம் அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கொமன்வெல்த் அமைப்பின் தலைமைத்துவத்தை வகிக்கும் சிறிலங்காவின், அதிகாரபூர்வ குழு நேற்று கொமன்வெல்த் உச்சிமாநாட்டில் பங்கேற்க மோல்டா சென்றது.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அமைச்சர் சாகல ரத்நாயக்க ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

இவர்கள், நேற்று பிற்பகல் மோல்டா விமான நிலையத்தைச் சென்றடைந்தனர்.

mangala-samaraweera-molta

அங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்கவின் பயணப் பொதி சோதனையிடப்பட்டு அனுமதிக்கப்படுவதற்கு ஒரு மணிநேரம் சென்றது.

அதே விமானத்தில் சென்றிருந்த மங்கள சமரவீரவுக்கும் அதே கதியே ஏற்பட்டது.

இவர்களுடன் ஒரே விமானத்தில் பயணம் செய்த பயணிகள் நீண்ட நேரத்துக்கு முன்பாகவே, தமது பயணப் பொதிகளுடன் விமான நிலையத்தை விட்டு வெளியேறியிருந்தனர்.

அதேவேளை, நேற்று நடந்த கொமன்வெல்த் நிகழ்வு ஒன்றை முடித்துக் கொண்டு வெளியேறிய சிறிலங்காவின் மூத்த அமைச்சரான சாகல ரத்நாயக்க, விடுதிக்குத் திரும்புவதற்கு அதிகாரபூர்வ வாகன வசதி செய்து கொடுக்கப்பட்டிருக்கவில்லை.

இதனால் அவர், வாடகை கார் ஒன்றிலேயே தனது அறைக்குத் திரும்பினார்.

இதுபோன்று பாதுகாப்பு விடயங்களால், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சுமார் 30 நிமிடங்கள் தமது அறைக்குள் சிக்கிக் கொள்ளவும் நேரிட்டது.

பெருமளவு வெளிநாட்டுப் பிரமுகர்கள் மோல்டா தலைநகர் வலேட்டாவுக்கு வந்திருப்பதால், அவர்களுக்கான பாதுகாப்பு மற்றும் வசதிகளைச் செய்து கொடுப்பதில் அந்த நாடு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, நேற்று நடந்த கொமன்வெல்த் வெளிவிவகார அமைச்சர்களின் கூட்டத்தில் பங்கேற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *