மேலும்

வவுனியாவுக்கு சிங்கள அரச அதிபர் – சிறிலங்கா அரசு வாக்குறுதியை மீறிவிட்டதாக குற்றச்சாட்டு

TNA-vanniவவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக தமிழ்ப்பேசும் ஒருவரே நியமிக்கப்பட வேண்டும் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை உறுப்பினர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

வவுனியாவில் நேற்று நடத்திய செய்தியாளர் மாநாட்டில், பெரும்பாலும் தமிழ்ப்பேசும், மக்கள் வசிக்கும் வவுனியா மாவட்டத்துக்கு தமிழ்ப்பேசும் அரசாங்க அதிபர் ஒருவரே நியமிக்கப்பட வேண்டும் என்று தாம் ஏற்கனவே சிறிலங்கா அதிபர் மற்றும் பிரதமர் ஆகியோரிடம் கோரியிருந்ததாக குறிப்பிட்டனர்.

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதற்கு உத்தரவாதம் வழங்கிய போதிலும், சிங்களவர் ஒருவரை மீண்டும் அந்தப் பதவிக்கு நியமித்துள்ளதன் மூலம் அந்த உறுதிமொழி மீறப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண அமைச்சர் சத்தியலிங்கம் தெரிவித்தார்.

TNA-vanni

தமிழ்ப் பேசும் மக்கள் அதிகம் வசிப்பதால், அவர்களின் பிரச்சினைகளை தமிழ்ப் பேசும் அரசாங்க அதிபர் ஒருவர் மூலமே உணர்ந்து கொள்ள முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கிய வாக்குறுதிகளை மீறிச் செயற்படும் சிறிலங்கா அரசாங்கத்துக்கு வெளியில் இருந்து வழங்கி வரும் ஆதரவை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று கூட்டமைப்புத் தலைமையிடம் கோருவதாகவும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிவசக்தி ஆனந்தன், சிவமோகன் மற்றும், மாகாணசபை உறுப்பினர்களான சத்தியலிங்கம், இந்திரராசா, லிங்கநாதன், நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக ரோகண புஷ்பகுமார நேற்றுமுன்தினம் பொறுப்பேற்ற நிலையிலேயே கூட்டமைப்பு பிரதிநிதிகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *