மேலும்

வெள்ளத்தில் தத்தளிக்கும் வடக்கு,கிழக்கு – இன்று கடும் மழை, சூறாவளி எச்சரிக்கை

சிறிலங்காவின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து மழை கொட்டி வரும் நிலையில், வடக்கு கிழக்கில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வங்காள விரிகுடாவில் தோன்றியுள்ள தாழமுக்கத்தினால், சிறிலங்காவின், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பெருமழை பெய்து வருகிறது.

இன்று மிகக் கடுமையான மழையும், 80 கி.மீ வேகத்துக்கு சூறைக்காற்றும் வீசக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

காங்கேசன்துறை தொடக்கம், திருகோணமலை, மட்டமக்களப்பு, அம்பாந்தோட்டை வரையான பகுதிகளில், கடும் காற்றுடன் மழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கடல் மிகவும், கொந்தளிப்பாக இருக்கும் என்பதால் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று மீனவர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். கடற்படையினருக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இன்று சிறிலங்காவில் பல பகுதிகளில் 100 மி.மீ இற்கும் அதிகமான மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதால் வெள்ளம் ஏற்படும் ஆபத்து இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

north-east-flood (3)

north-east-flood (4)north-east-flood (6)north-east-flood (5)

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாகப் பெய்து வரும் தொடர் மழையால், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்று மாலை வரை 2, 228 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன .

பருத்தித்துறையில் 135 குடும்பங்களும், வேலணையில் 41 குடும்பங்களும்,, யாழ்ப்பாணத்தில் 961குடும்பங்களும், நல்லூரில் 85 குடும்பங்களும், கோப்பாயில் 52 குடும்பங்களும், சண்டிலிப்பாயில் 95 குடும்பங்களும், உடுவிலில் 365, தெல்லிப்பழையில் 108 குடும்பங்களும், சாவகச்சேரி 330 குடும்பங்களும், கரவெட்டியில் 56 குடும்பங்களும் இடம்பெயர்ந்துள்ளதாகத் தெரிய வருகிறது.

இதேவேளை, கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் வீசிய கடும் காற்றினால் 50 இற்கும் அதிகமான வீடுகள் சேதடைந்தன. கிளிநொச்சி மாவட்டத்தில் 811 குடும்பங்கள் இடம்பெயர்ந்து பாடசாலைகளில் தங்கியுள்ளன.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவின் பொன்னநகர் மத்தியில் வீடுகளுக்குள் நேற்றுமுன்தினம் இரவு வெள்ள நீர் புகுந்தது. கழுத்து மட்டம் வரை வெள்ளம் உயர்ந்த நிலையில், அப்பகுதியிலுள்ள பொதுமக்கள் இராணுவத்தினரின் உதவியுடன் வெளியேற்றப்பட்டு பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வன்னியில் உள்ள பெரும்பாலான குளங்கள் நிரம்பி வழிகின்றன. இரணைமடுக்குளத்தின் நீர் மட்டம் நேற்று திடீரென அபாய அளவைத் தொட்ட நிலையில், 10 வான் கதவுகள் திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்படுகிறது.

இதனால், கிளிநொச்சியில் தாழ்வான பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

அத்தோடு முல்லைத்தீவு ஒட்டுச்சுட்டான் பிரதேச செயலக பிரிவில் 209 குடும்பங்கள் இடம்பெயர்ந்து பாடசாலையில் தங்கியுள்ளன.

தொடர் மழையினால் வடக்கு, கிழக்கின் ஏனைய மாவட்டங்களிலும் மக்கள் இடம்பெயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள், இன்று கடும் மழை பெய்யும் என்று எச்சரிக்கையால், கலக்கத்துடன் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *