மேலும்

இந்திய குடியரசுத் தலைவரிடம் நியமன ஆவணங்களை கையளித்தார் சிறிலங்காவின் புதிய தூதுவர்

இந்தியாவுக்கான சிறிலங்காவின் புதிய தூதுவர் எசல வீரக்கோன், இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் தனது நியமனம் தொடர்பான ஆவணங்களை அதிகாரபூர்வமாக கையளித்துள்ளார்.

இந்திய குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்வு ஒன்றில், சிறிலங்கா தூதுவர் இதனைக் கையளித்தார்.

இந்தியாவுக்கான புதிய தூதுவராகப் பொறுப்பேற்றுள்ள எசல வீரக்கோன், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பணியாற்றிய துறைசார் இராஜதந்திரியாவார்.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் முக்கிய பதவிகளை வகித்துள்ள இவர்,  அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜப்பான், அவுஸ்ரேலியா, டென்மார்க், மலேசியா, சிஷேல்ஸ் ஆகிய நாடுகளில் உள்ள சிறிலங்கா தூதரகங்களிலும் பணியாற்றிய அனுபவம் மிக்கவராவார்.

சிறிலங்கா அதிபர் மற்றும் பிரதமர் புதுடெல்லிக்கும், இந்தியப் பிரதமர் கொழும்புக்கும் பயணங்களை மேற்கொண்டு, இந்திய – சிறிலங்கா உறவுகள் முக்கியமானதொரு கட்டத்தை அடைந்துள்ள நிலையில் தாம் இந்தப் பதவியை ஏற்றுள்ளதாகவும், இருநாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்த முயற்சிப்பேன் என்றும், எசல வீரக்கோன் தெரிவித்துள்ளார்.

இவர், சிறிலங்காவில் அரை நூற்றாண்டு காலமாக, 9 அரசுத் தலைவர்களுடன் நெருகக்கமாகப் பணியாற்றிய முன்னாள் நிர்வாக அதிகாரியான பிரட்மன் வீரக்கோனின் மகன் என்பதும், சிறிலங்காவின் முக்கிய இராஜதந்திரிகளில் ஒருவராக விளங்கிய பேனாட் திலகரட்னவின் மருமகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்திய குடியரசுத் தலைவரிடம், நேற்று முன்தினம் தனது நியமன ஆவணங்களைக் கையளித்த பின்னர், எசல வீரக்கோன் புதுடெல்லியில் உள்ள தனது வதிவிடத்தில் தேநீர் விருந்துபசாரம் ஒன்றுக்கு ஒழுங்கு செய்திருந்தார்.

இதில், பாகிஸ்தான் , மாலைதீவு, நேபாளம் ஆகிய நாடுகளின் தூதுவர்கள், சிறிலங்காவுக்கான முன்னாள் இந்தியத் தூதுவர், மகாராஜ்குமார் ரஸ்கோத்ரா, நிருபம் சென், லக்கன் லால் மெஹ்ரோத்ரா, மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர். ப.சிதம்பரம், இந்திய வெளிவிவகார அமைச்சின் இணைச்செயலர் ரேணு பால், சிறிலங்கா, மாலைதீவுக்கான இந்திய வெளிவிவகார அமைச்சின் பிரதிச் செயலர் கலாநிதி பிரபுல்ல சந்திர சர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *