மேலும்

விசாரணையில் வெளிநாட்டு நிபுணர்கள் பங்கேற்பது அரசியலமைப்பு மீறல் – என்கிறார் மகிந்த

mahinda-vajraசிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான  விசாரணைகளில், வெளிநாட்டு நிபுணர்களை ஈடுபடுத்துவது சிறிலங்காவின் அரசியலமைப்பை மீறும் செயல் என்று தெரிவித்துள்ளார், சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச.

போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு, உதவ சிறிலங்கா வந்திருந்த ஜப்பானிய நீதிபதியும், போர்க்குற்ற விவகாரங்கள் தொடர்பான நிபுணருமான மோட்டூ நுகுசியிடமே, அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.

சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுக்கவுள்ள, உள்ளக விசாரணை தொடர்பான முயற்சிகளுக்கு, உதவுவதற்காக சிறிலங்கா வந்திருந்த, ஜப்பானிய நீதுிபதி மோட்டூ நுகுசி, ஜப்பான் திரும்ப முன்னர் நேற்றுக்காலை, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவை அவரது இல்லத்தில் சந்தித்தார்.

நீண்டநேரம் நடந்த இந்தச் சந்திப்பில், சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசும் கலந்து கொண்டார்.mahinda-motoo noguchi

இதன் போது கம்போடியாவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான நீதிமன்ற செயற்பாடுகளையும், அதில் தனது அனுபவங்களையும், ஜப்பானிய நீதிபதி மோட்டூ நுகுசி, மகிந்த ராஜபக்சவுடன் பகிர்ந்து கொண்டார்.

அப்போது, போர்க்குற்றங்கள் தொடர்பாக, கம்போடியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான வித்தியாசம் தொடர்பாக, மோட்டூ நுகுசிக்கு மகிந்த ராஜபக்ச தெளிவுபடுத்தியுள்ளார்.

சிறிலங்காவில் மிகமோசமான பயங்கரவாத இயக்கமான தமிழீழ விடுதலைப் புலி கள் இயக்கத்தை தோல்வியடையச் செய்தமையின் ஊடாக அனைத்து இனத்தவர்களுக்குமிடையில் ஐக்கியத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த முடிந்ததாக மகிந்த ராஜபக்ச இதன்போது சுட்டிக்காட்டியிருந்தார்.

முன்னைய அரசாங்கத்தினால்,மக்ஸ்வெல் பரணகம தலைமையில் நியமிக்கப்பட்ட காணாமல்போனோர்  குறித்த விசாரணை ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்க தன்னை அழைத்தமைக்கு மோட்டூ நுகுசி  இதன்போது நன்றி தெரிவித்தார்.

இது குறித்து மகிந்த ராஜபக்ச தெளிவுபடுத்துகையில், மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக, அனைத்துலக  போர்ச்சட்டங்கள் தொடர்பிலான ஆலோசனைகளை வழங்குவதற்கு மாத்திரமே வெளிநாட்டு மனித உரிமை தொடர்பிலான நிபுணர்களை சிறிலங்காவுக்கு அழைத்தேன்.

கருத்துப் பரிமாறலுக்கு அப்பால் அந்த நிபுணர்களினால் இங்கே எதனையும் செய்ய இயலாது.

சிறிலங்கா இராணுவம் அல்லது வேறு குடிமக்கள் தொடர்பாக நீதிமன்ற ரீதியான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு அனைத்துலக நிபுணர்களுக்கு அதிகாரமில்லை.

அவ்வாறு அனைத்துலக நிபுணர்கள் சிறிலங்காவுக்கு வருகை தருவது சிறிலங்காவின் அரசியலமைப்பை மீறும் செயல். இத்தகைய செயலை எமது நாட்டு மக்கள் ஒருபோதும் விரும்பமாட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு, ஜப்பானிய நீதுிபதி மோட்டூ நுகுசி, சிறிலங்காவின் பிரச்சினைக்கு உள்ளக நீதிமன்றக் கட்டமைப்பின் ஊடாக இலகுவாக தீர்வு காண முடியும். அதுவே உகந்த செயற்பாடு என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *