மேலும்

போர்க்குற்றங்கள் குறித்த டெஸ்மன் டி சில்வாவின் அறிக்கையை வெளியிடப் போகிறாராம் கம்மன்பில

gammanpila - desmond de silva reportபோர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக, டெஸ்மன்ட் டி சில்வா சமர்ப்பித்த  அறிக்கையை அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள், சிறிலங்கா அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்காவிடின், தான் அதனை வெளியிடுவேன் என்று எச்சரித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில.

கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள, அவர்,

”தனியே, ஐ.நா அறிக்கையை வைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் பரணகம அறிக்கை, உடலகம ஆணைக்குழுக்களின் அறிக்கைகளின் தன்மை குறித்தும் ஆராய வேண்டும்.

அதேபோல் மிகமுக்கியமாக டெஸ்மன்ட் டி சில்வாவின் அறிக்கையை சபையில் உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும்.

போர் முடிவுக்கு வந்தவுடன், சுமத்தப்பட்ட போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆதாரங்களை சேகரித்து கடந்த 2014ஆம் ஆண்டு பெப்ரவரி 23ஆம் நாள் டெஸ்மன்ட் டி சில்வா அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்திருந்தார்.

gammanpila - desmond de silva report

அந்த அறிக்கையில், சிறிலங்காவின் போர்ச் சூழல் மற்றும் போரின் பின்னரான மனித உரிமை மீறல்கள் என்பன தொடர்பிலும், போர்க்காலத்தில் சட்டதிட்டங்கள் மீறப்பட்டுள்ளதா என்பது தொடர்பாகவும், முழுமையான விபரங்களை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த விடயங்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டவில்லை. அடுத்த 24 மணித்தியாலத்தில் இந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இந்த அறிக்கையை சிறிலங்கா அதிபரோ, பிரதமரோ உடனடியாக வெளிப்படுத்தாவிடின் அந்தப் பொறுப்பபை நான் செய்ய வேண்டிவரும்.

நாளை இந்த அறிக்கையை நான் வெளிப்படுத்துவேன். இதற்காக என்னை சிறையில் அடைத்தாலும் பரவாயில்லை. மக்களுக்காக எந்த அழுத்தங்களையும் எதிர்கொள்ள நான் தயாராகவே உள்ளேன்.

எம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகளையும் அமெரிக்காவின் அறிக்கையையும் மாத்திரம் கவனத்தில் கொண்டு செயற்படாது எமது நீதிபதிகள், எமது ஆணைக்குழுக்களின் அறிக்கையையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அமெரிக்காவின் நிபந்தனைக்கு அமைய இன்று நாட்டுக்குள் அவர்களுக்கு இடம்கொடுத்தால் நாளை ஏனைய நாடுகளும் எம்மை சீண்டிப் பார்க்க ஆரம்பிக்கும்.

அதேபோல் இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனுக்கு அரசாங்கம் கட்டுப்படுகிறது.

சம்பந்தன் என்பவர் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட எதிர்க்கட்சி தலைவர் அல்ல. அவருக்கு வடக்கின் பிரச்சினைகள் மட்டுமே தெரியும். நாட்டின் தேசிய ஒற்றுமை, சிங்கள மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தெரியவில்லை.” என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *