மேலும்

முரண்பட்ட விடயங்களை உள்ளடக்கியுள்ளது பரணகம ஆணைக்குழுவின் அறிக்கை – சுமந்திரன்

sumanthiranபரணகம ஆணைக்குழுவின் அறிக்கையில் பல்வேறு முரண்பட்ட விடயங்களும் தகவல்களும் இடம்பெற்றுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் சமர்ப்பிக்கப்பட்ட பரணகம ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“போரின் முடிவில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் 40 ஆயிரம் பேரின் அழிவுகளை இராணுவ ரீதியாக நியாயப்படுத்தியுள்ள அறிக்கை சனல்–4 ஆவணப்படம் மற்றும் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் படுகொலை போன்றவற்றுக்கு அனைத்துலக விசாரணை வேண்டுமென பரிந்துரை செய்திருப்பது முரண்பட்ட தன்மையை காட்டுகிறது.

பொதுமக்களுக்கும் போராடும் தரப்பினர்களுக்கும் இடையில் உள்ள வித்தியாசத்தைப் பேண வேண்டுமென்பதே பொதுவான பாகுபாடு என்பதாகும்.

பொதுமக்களைக் கொல்லமுடியாது. ஆயுதம் ஏந்தி போராடுகின்றவர்களையே கொல்ல முடியும் என்பதை இந்த பாகுபாடு என்ற விடயம் சுட்டிக்காட்டுகிறது.

இரண்டாவது விடயம் எவ்வளவு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன என்பதை ஆராய்கின்றது. கூடுதலாக பயன்படுத்தப்பட்டனவா என்று ஆராய்வதை இது குறிக்கும்.

மூன்றாவது விடயம் ஏற்பட்ட அழிவுகள் சம்பந்தப்பட்டதாகும். சுற்றிவர இடம்பெற்ற பாதிப்புக்களா, கண்மூடித்தனமாக தாக்கியதால் ஏற்பட்ட பேரழிவுகளா என்பது பற்றியே போர்குற்ற விசாரணையில் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

இம்மூன்று விடயங்கள் சம்பந்தமாக ஏற்கனவே டெஸ்மன் டி சில்வாவின் ஆலோசனையை சிறிலங்கா அரசாங்கம் பெற்றிருந்தது.

அஅதன்போது, டெஸ்மன் டி சில்வா சிறிலங்காவுக்கு சார்பாக, ஒரு அறிக்கையை வழங்கியிருந்தார்.

அந்த அறிக்கையில் 40 ஆயிரம் பொதுமக்களை சிறிலங்கா இராணுவம் படுகொலை செய்தமைக்குரிய காரணம் 3 இலட்சம் மக்களின் உயிரைப் பாதுகாப்பதற்காகவேயென்று அவர் நியாயப்படுத்தியிருந்தார்.

3 இலட்சம் பொது மக்களை விடுவிக்கும் போரில் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டமை நியாயத்தன்மை வாய்ந்தது என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

அதுமட்டுமன்றி விடுதலைப்புலிகள் சாதாரண மக்கள் அணியும் ஆடைகளை அணிந்து கொண்டு போரிட்டால் அவர்களை அடையாளம் காண்பது கடினம் என்ற நியாயங்களைக் குறிப்பட்டு இவையெல்லாம் இராணுவத்தை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதேயென குறிப்பிட்டிருந்தார்.

இந்த ஆலோசனை அறிக்கையை டெஸ்மன் டி சில்வா இரகசியமாகவே கையளித்திருந்தார். அதன் பின்பே அவர் சிறிலங்கா அரசாங்கத்தால் ஆணைக்குழுவின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

இது எமக்குத் தெரியவந்த போது, நாம் அதை எதிர்த்தோம்.

ஆலோசனை அறிக்கையை அரசுக்குச் சார்பாக வழங்கிவிட்டு தான் ஒரு சுயாதீனமானவர் எனக் கூறிக் கொண்டு ஆணைக்குழுவுக்கு வருவது அவரின் ஒழுக்கவியலுக்கும் நீதிக்கும் புறம்பானது.

அரசாங்கமும் இவ்வாறு செய்வது தவறானது என நான் நாடாளுமன்றில் உரையாற்றும் போது குறிப்பிட்டிருந்தேன்.

இந்த டெஸ்மன் டி சில்வா பிரித்தானிய நீதி அமைப்பில் இருப்பதால் பிரித்தானிய வழக்கறிஞர் சங்கம் இவருக்கெதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்திருந்தேன்.

தற்பொழுது அவருக்கெதிரான விசாரணைகள் பிரித்தானியாவில் நடைபெற்று வருகின்றன.

இவ்வாறான பின்னணியிலேயே பரணகம அறிக்கை, வெளிவந்துள்ளது.

பரணகம அறிக்கையில் டெஸ்மன் டி சில்வா கொடுத்த விடயங்கள் எவ்வித மாற்றமும் இல்லாமல் பதியப்பட்டிருக்கின்றன.

ஏனைய விடயங்கள் சம்பந்தமாக, குறிப்பாக சனல் 4 காணொளி , பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் படுகொலை மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பாளர் இசைப்பிரியா, ரமேஸ் படுகொலை, வெள்ளைக் கொடி விவகாரம் போன்ற அனைத்திற்கும் போதிய ஆதாரங்கள் உள்ளன. இவை விசாரிக்கப்பட வேண்டும்.

இவை சுயாதீன நீதிமன்றால் விசாரிக்கப்பட வேண்டுமென குறிப்பிட்டது மட்டுமல்லாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டுமென்றால் வெளிநாட்டு நீதிபதிகளை நியமித்து விசாரணை செய்யப்பட வேண்டுமென பரணகம தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சூழ் நிலையில், கலப்பு நீதிமன்றமொன்றுதான் பொருத்தமானது என பரணகம தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பரணகம அறிக்கை முரண்பாடான அறிக்கையாக காணப்படுவதற்கு இதுவே காரணமாகும்.

எனவே தான் அவசரம் அவசரமாக பரணகம, உடலகம அறிக்கைகளை அரசாங்கம் பாராளுமன்றில் சமர்ப்பித்துள்ளமை தெளிவாகின்றது.

கலப்பு நீதிமன்றத்துக்கு உடன்பட்டுள்ள சிறிலங்கா அரசாங்கம் மகிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவே வெளிநாட்டு நீதிபதிகளின் அனுசரணையோடு, விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென பரிந்துரை செய்திருக்கிற போது நாமும் அதையே செய்ய நினைக்கிறோம் என்று கூறுவதற்கே மேற்படி அறிக்கை அவசரம் அவசரமாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பரணகம, தன்னால் பெறப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் பதிவுகளை மேற்கொண்டுள்ளார் என்பது தெரியவருகிறது.

எனவே இதற்கான சட்சியங்கள் உள்ளன. எனவே உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனக் குறிப்பிட்டுள்ளார்.

இதில் குறிப்பிடக்கூடிய முக்கியமான விடயம் கலப்பு நீதிமன்றம் சம்பந்தமாக அனைத்துலக விசாரணையிலும் சொல்லப்பட்டிருக்கிறது.

சிறிலங்கா வழிமொழிந்த தீர்மானத்திலும் ஐ.நா. பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென்று சொல்லப்பட்டிருக்கிறது.

அமெரிக்க பிரேரணையின் 1ஆம் பந்தியிலும் 6ஆம் பந்தியிலும் கூறப்பட்டவாறு வெளிநாட்டு மற்றும் கொமன்வெல்த் நீதிபதிகள் அடங்கிய கலப்பு நீதிமன்றம் ஒன்றின் மூலம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது.

வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்டே விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்ற விடயம் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் அறிக்கையில் மாத்திரமல்ல, முன்னாள் ஜனாதிபதி நியமித்த ஆணைக்குழுவின் பரிந்துரையிலும் உள்ளடக்கப்பட்டிருப்பது, அனைத்துலக விசாரணையே என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

அனைத்துலக விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் முக்கியமான விடயமொன்று பரணகம அறிக்கையை தடுக்க வேண்டும் என்பதாகும். இதை சிறிலங்காவும் ஏற்றுக் கொண்டுள்ளது.

ஆனால் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பே பரணகம விசாரணை முடிவடைந்து விட்டது.

எனவே பரணகம, உடலகம அறிக்கைகளை நாடாளுமன்றில் வெளியிட்டு பகிரங்கப்படுத்தியுள்ளார்களே தவிர அவ்வறிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதற்காக அது வெளியிடப்படவில்லை.

இதேவேளை உடலகம அறிக்கையை பகிரங்கப்படுத்த வேண்டுமென்பதும் ஒரு பரிந்துரையாக இருந்துள்ளது.

வெளியிடப்படாமல் இருந்த அறிக்கையை தற்பொழுது வெளியிட்டுள்ளது அரசாங்கம் என்பதே உண்மை. மாறாக அந்த அறிக்கைகளை பின்பற்ற அரசாங்கம் முயற்சிக்கிறது என்று அர்த்தமல்ல.

அவ்வறிக்கைகள் பகிரங்கப்படுத்தியாகி விட்டது. அத்துடன் அவ்வத்தியாயம் நிறைவு பெற்றுவிட்டது.

நடைமுறைப்படுத்தப்பட வேண்டியது ஐ.நாவின் அறிக்கையே தவிர இந்த அறிக்கைகள் அல்ல.

அதாவது அனைத்துலக விசாரணை சம்பந்தமான விடயங்களும் அவற்றோடு ஒட்டிய விடயங்களுமே சிறிலங்கா அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய விடயங்களாக உள்ளன.

நடைபெறவுள்ள அனைத்துலக விசாரணைக்கும் பரணகம, உடலகம விசாரணைக்கும் இடையில் எவ்வித தொடர்பும் இருக்காது என்றே கொள்ளலாம்.

ஆனால் பரணகம அறிக்கையை நிறுத்த வேண்டும். எனினும் அதில் வெளிவந்த உண்மைகள் பயன்படுத்தப்பட வேண்டும்.

அதேபோல் உடலகம அறிக்கையில் வெளிவந்த விடயங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு அனைத்துலக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *