மேலும்

‘கூட்டமைப்பினரிடம் காட்டுங்கள்… சந்தோசப்படுவார்கள்’ – நீதிமன்றில் பிள்ளையான்

pillayan-arrest (1)‘நன்றாக படம் எடுத்து ரீ.என்.ஏ. காரர்களிடம் (தமிழ் தேசிய கூட்டமைப்பு) காட்டுங்கள், சந்தோசப்படுவார்கள்’ என்று  கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான பிள்ளையான் எனப்படும், சிவனேசதுரை சந்திரகாந்தன்  தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட  அவரது விளக்கமறியல் நீடிக்கப்பட்ட பின்னர், நீதிமன்ற வளாகத்தில் வைத்து ஒளிப்படம் பிடித்த செய்தியாளர்களிடமே இவ்வாறு குறிப்பிட்டார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக, கடந்த 11ஆம் நாள் கைது செய்யப்பட்ட பிள்ளையான் நேற்று பிற்பகல் 1 மணியளவில் புதுக்கடை முதலாம் இலக்க நீதிவான் நீதிமன்றின் நீதிவான் கிஹான் பிலப்பிட்டிய முன்னிலையில் நிறுத்தப்பட்டார்.

நீதிவானின் அதிகாரபூர்வ அறையில் சட்டத்தரணிகள், குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், பிள்ளையான் ஆகியோர் மட்டும் இருந்த போது அவரை அடுத்த மாதம் 4ஆம் நாள் வரை தடுத்து வைத்து விசாரிப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனையடுத்து திறந்த நீதிமன்றப் பகுதிக்கு பிள்ளையான் அழைத்து வரப்பட்ட போது, அவரது சட்டத்தரணி அவருக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

pillayan-arrest (2)

“எதிர்வரும் நொவம்பர் 4 ஆம் நாள் உங்களை இதே நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவர். அப்போது நாம் வருவோம். ஒன்றும் பயப்பட தேவையில்லை.

உறவினர்கள் சனிக்கிழமை உங்களை பார்வையிடலாம். உணவும் கொண்டு வந்து தரலாம்” என சட்டத்தரணி பிள்ளையானிடம் கூறினார்.

இதனையடுத்து கைவிலங்கிடப்பட்ட நிலையில் பிள்ளையான் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நீதிமன்றத்துக்கு வெளியே அழைத்து வரப்பட்டார்.

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தின் பிரதான வாயிலை பிள்ளையான் அடைந்த போது அங்கிருந்த ஒளிப்படப் பிடிப்பாளர்கள் அவரை படம் எடுத்தனர்.

அப்போது, விலங்கிடப்பட்ட கைகளை சற்று உயர்த்தி ‘நன்றாக படம் எடுங்கள்… ரீ.என்.ஏ.காரர்களுக்கு காட்டுங்கள். சந்தோசப்படுவார்கள்..’ என்று கூறியவாறு புலனாய்வுப் பிரிவின் வாகனத்தில் ஏறிச் சென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *