மேலும்

மகிந்தவுடன் தொடர்புகளைப் பேணும் சீனா – பீஜிங்கின் வழமைக்கு மாறான அணுகுமுறை

mahinda-xiசிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுடனான தொடர்புகளை, சீனா தொடர்ந்து பேணி வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த வாரம், சிறிலங்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட சீனாவின் சிறப்புத் தூதுவர் லியூ சென்மின், முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவையும் சந்தித்துப் பேசியுள்ளார்.

கடந்த 8ஆம் நாள் இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக, மகிந்த ராஜபக்ச தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.

மகிந்த ராஜபக்ச தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், சீனர்கள் முதல் தடவையாக அவருடன் தொடர்பு கொண்டிருப்பது இதுவே முதல் முறை என்று, மகிந்த ராஜபக்சவின் பேச்சாளர் ரொகான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.

mahinda- liu

இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தச் சந்திப்புக் குறித்து பதிலளிக்க சிறிலங்கா அரசாங்க அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

அதேவேளை, மகிந்த ராஜபக்சவுடனான சீனாவின் சிறப்பு தூதுவரின் சந்திப்பு, தமது பழைய நண்பருடன் உறவுகளை வலுப்படுத்தும் பீஜிங்கின் விருப்பத்தை வெளிப்படுத்துவதாக, சௌத் சைனா மோர்னிங் போஸ்ட் குறிப்பிட்டுள்ளது.

சீனத் தூதுவர்கள் அரசாங்கத் தரப்புடனான சந்திப்புகளிலேயே கவனம் செலுத்துவது வழக்கம், என்றும் ஆனால் மகிந்த ராஜபக்சவுடனான இந்தச் சந்திப்பு பீஜிங்கின் வழக்கமான அணுகுமுறைக்கு மாறானது என்றும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

தாம் எதிர்க்கட்சியில் இருந்த போது,  தம்முடன் சீனா தொடர்புகளைப் பேணவில்லை என்று சிறிலங்காவின் தற்போதைய ஆட்சியாளர்கள் முன்னர்  கூறிவந்ததையும் அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

பிரதமர் பதவியைக் கைப்பற்றி மீண்டும் அதிகாரத்துக்கு வர முயன்ற மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியுற்று, நெருக்கடியான நிலையில் உள்ள இந்தச் சந்தர்ப்பத்தில், சீன சிறப்புத் தூதுவர் சந்தித்திருப்பது, அவருக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும் என்றும் சௌத் சைனா மோர்னிங் போஸ்ட் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *