மேலும்

போர்க்குற்ற விசாரணையை தட்டிக்கழித்து, உண்மை, நல்லிணக்கம் மீது கவனம் செலுத்தும் சிறிலங்கா

maithri-unசிறிலங்காவில் பாதிக்கப்பட்ட மக்கள் உண்மை மற்றும் நீதியைப் பெற்றுக் கொள்வதற்கான ஒவ்வொரு படிமுறையிலும் அவர்களுக்கு இதயசுத்தியுடன் ஆலோசனை வழங்கப்படுகிறதா என்பதை சிறிலங்கா அதிகாரிகளும் அனைத்துலக சமூகமும் உறுதி செய்யவேண்டும்.

இவ்வாறு ஏசியா ரைம்ஸ் ஊடகத்தில் MUNZA MUSHTAQ எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

ஒன்பது மாத காலமாக சிறிலங்காவின் அதிபராகப் பதவி வகிக்கும் மைத்திரிபால சிறிசேன தனது நடவடிக்கைகளை சரியான முறையில் மேற்கொள்கிறார் போல் தென்படுகிறது.  சிறிசேனவும், பிரதமரான ரணில் விக்கிரமசிங்கவும் உலக நாடுகளுடன் குறிப்பாக அதிகாரத்துவ நாடான அமெரிக்கா உட்பட அனைத்து நாடுகளுடனும் தோழமையுடன் பழகுவதன் மூலம், அனைத்துலக போர்க் குற்ற விசாரணையிலிருந்து தமது நாடான சிறிலங்காவைப் பாதுகாத்துள்ளனர்.

சிறிலங்கா மீது அனைத்துலக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என மேற்கொள்ளப்பட்ட அழுத்தங்கள் அனைத்தையும் சிறிசேன மற்றும் ரணில் ஆகியோர் மிகவும் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர். இவர்கள் அனைத்துலக விசாரணைக்குப் பதிலாக போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உள்ளக விசாரணையை மேற்கொள்வதற்கான ஒப்புதலை அனைத்துலக சமூகத்திடமிருந்து பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஜெனீவாவில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 30வது கூட்டத்தொடரில் ‘சிறிலங்காவில் மீளிணக்கப்பாடு, பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல்’ என்கின்ற தலைப்பில் தீர்மானம் ஒன்று வரையப்பட்டு இம்மாதம் முதலாம் திகதி இது நிறைவேற்றப்பட்டது. அமெரிக்கா உட்பட 25 நாடுகளின் ஆதரவுடன் வாக்கெடுப்பின்றி இத்தீர்மானமானது நிறைவேற்றப்பட்டது.

செப்ரெம்பர் 30 அன்று நியூயோர்க்கில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 70வது ஒன்றுகூடலில் அதிபர் சிறிசேன உரையாற்றியிருந்தார். இந்த உரையின் போது தனது அரசாங்கமானது சிறிலங்காவில் உண்மையைக் கண்டறிதல், நீதி, பாதிக்கப்பட்டவர்களுக்கான பரிகாரம் போன்றவற்றைப் பெற்றுக்கொடுப்பதுடன் இத்தகைய மீறல்கள் எதிர்காலத்தில் இடம்பெறாவண்ணம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் வாக்குறுதி வழங்கியிருந்தார்.

21ம் நூற்றாண்டில் எழுந்துள்ள சவால்களுக்கு முகங்கொடுப்பதற்காக புதிய சமூக, பொருளாதார மற்றும் அரசியல் அணுகுமுறையுடன் கூடிய திட்டத்தை சிறிலங்காவானது முன்னெடுத்துச் செல்வது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும் எனவும் சிறிசேன சுட்டிக்காட்டியிருந்தார்.

‘இந்தவகையில் மீளிணக்கப்பாடு என்பது எனது நாட்டில் முன்னுரிமையைப் பெற்றுள்ளது’ என ஐ.நா பொதுச் சபையில் உரையாற்றும் போது அதிபர் சிறிசேன மேலும் சுட்டிக்காட்டியிருந்தார். தனது அரசாங்கத்தின் விரிவான தொலைநோக்காக நிலையான அபிவிருத்தி மற்றும் மீளிணக்கப்பாடு ஆகிய இரண்டும் முன்னுரிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சிறிசேன மேலும் சுட்டிக்காட்டினார்.

‘இவற்றை அடைந்து கொள்வதற்கான அடிப்படைத் தேவையாக கடந்த கால மீறல்கள் தொடர்பில் நேர்மைத் தன்மையுடன் செயற்படுவதுடன், நவீன சிறிலங்காவையும் கட்டியெழுப்ப வேண்டும். கடந்த காலத்தில் இடம்பெற்ற பல்வேறு மீறல்கள் தொடர்பாக உண்மையைக் கண்டறிதல், நீதியை நிலைநாட்டுதல், இவற்றுக்குப் பரிகாரம் தேடுதல் மற்றும் இவ்வாறான மீறல்கள் மீண்டும் இடம்பெறாது என்பதை உறுதிப்படுத்தல் போன்றவற்றைக் கருத்திற் கொண்டு நாங்கள் பணியாற்றுவோம்.

இவ்வாறான பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பை சிறிலங்கா கொண்டுள்ளது. இந்தவகையில், சிறிலங்காவில் மனித உரிமைகளைக் கட்டியெழுப்புவதற்கான புதிய திட்டங்களையும் செயற்பாட்டுத் திட்டம் ஒன்றையும் வரைய வேண்டிய பொறுப்பையும் நாம் கொண்டுள்ளோம்’ என அதிபர் சிறிசேன மேலும் சுட்டிக்காட்டினார்.

ஐ.நா பொதுச் சபையின் கூட்டத்தொடரில் உரையாற்றிய பின்னர் சிறிலங்காவிற்குத் திரும்பிய சிறிசேன, தனது வதிவிடத்தில் ஊடக மாநாட்டை நடாத்தினார். இந்த மாநாட்டில், போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற பல்வேறு மீறல்கள் தொடர்பில், சிறிலங்காவின் தேசிய இறையாண்மையை உறுதிப்படுத்தும் விதமாக நாட்டின் அரசியல் யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ள வரைபுகளைப் பின்பற்றி முற்றிலும் உள்ளக விசாரணையை மேற்கொள்வதற்கான உறுதிப்பாட்டை சிறிசேன வழங்கினார்.

ஒக்ரோபர் 01 அன்று நிறைவேற்றப்பட்ட ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானமானது சிறிலங்காவுக்குக் கிடைத்துள்ள ‘பாரிய வெற்றி’ எனவும் சிறிசேன தெரிவித்தார். சிறிலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில், போர் வலயங்களில் அகப்பட்ட மக்கள் மீது திட்டமிட்ட வகையில் பல்வேறு தாக்குதல்களை மேற்கொண்ட போர்க் குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கு கலப்பு நீதிமன்றம் ஒன்று உருவாக்கப்படும் என செப்ரெம்பர் 16 அன்று ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர் செய்ட் றாட் ஹூசைன் அறிவித்த போதிலும், தானும் விக்கிரமசிங்க அரசாங்கமும் இணைந்து அனைத்துலக விசாரணை மற்றும் கலப்பு நீதிமன்றம் போன்றவற்றிலிருந்து நாட்டை மிகவும் வெற்றிகரமாகப் பாதுகாத்துள்ளதாகவும் சிறிசேன, தனது ஊடக மாநாட்டில் சுட்டிக்காட்டியிருந்தார்.

‘நாட்டின் அதிபர் என்ற வகையில், அனைத்துலக சமூகத்துடனான சிறிலங்காவின் உறவைக் கட்டியெழுப்புவதே எனது முதலாவது நடவடிக்கையாகும். இவ்வாறானதொரு நட்புறவே இன்று சிறிலங்கா மீதான பேரவையின் தீர்மானமானது எமது நாட்டிற்குச் சாதகமாக வரையப்படுவதற்கு உதவியுள்ளது’ எனவும் சிறிசேன சுட்டிக்காட்டினார்.

முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் தலைமைத்துவத்தின் கீழ் மேற்குலக நாடுகள் மற்றும் அமெரிக்காவுடனான உறவுநிலை விரிசலடைந்து காணப்பட்டதாகவும், சீனாவானது மிகப்பாரிய அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வதற்கு நிதியை வழங்கியதால் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கமானது சீனாவுடன் நல்லுறவைப் பேணியதுடன் மற்றைய நாடுகளுடன் விரிசலை ஏற்படுத்திக் கொண்டதாகவும் அதிபர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளையில், தமிழ் மக்கள் உட்பட நாட்டின் அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் முழுமையான மீளிணக்கப்பாட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஏற்பாடுகளையும் கலந்துரையாடல்களையும் சிறிசேன முன்னெடுக்கவுள்ளார். அதாவது அரசியற் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், மதத்தலைவர்கள், கல்விமான்கள், புலம்பெயர் சமூகம் போன்ற பல்வேறு பங்குதாரர்களுடனும் சிறிசேனவின் அரசாங்கம் பேச்சுக்களை நடத்தவுள்ளது.

சிறிலங்காவில் இடம்பெற்ற பல்வேறு மீறல்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கான சிறப்பு ஆணைக்குழு ஒன்றை அமைக்கவுள்ளதாக விக்கிரமசிங்க அண்மையில் அறிவித்திருந்தார். அதாவது உள்ளக விசாரணைப் பொறிமுறைக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வெளிநாட்டு சட்டவாளர்கள் மற்றும் நீதிபதிகள் பங்களிப்பதற்கு அனுமதியளிக்கக் கூடிய புதிய சட்டம் ஒன்றும் அமுல்படுத்தப்படும் என பிரதமர் அறிவித்திருந்தார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது நல்லெண்ண அடிப்படையில் நிறைவேற்றப்பட்டால், பல்வேறு மீறல்களால் பாதிக்கப்பட்ட மக்கள் கடந்த சில ஆண்டுகளாகக் காத்திருக்கின்ற உண்மை மற்றும் நீதியைப் பெற்றுக்கொள்வதற்கான ஒரு வாய்ப்பை வழங்கும் என தென்னாசியாவிற்கான அனைத்துலக மன்னிப்புச் சபையின் ஆராய்ச்சி இயக்குனரான டேவிட் கிறிபித்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

‘இத்தீர்மானமானது சிறிலங்காவின் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான ஒரு திருப்புமுனையாக உள்ளது. அத்துடன் இதன்மூலம் போரில் ஈடுபட்ட இரு தரப்பினர்களாலும் இழைக்கப்பட்ட பயங்கரமான குற்றங்கள் அடையாளங் காணப்பட முடியும். இது தொடர்பான விசாரணைப் பொறிமுறை நம்பகமாக இடம்பெறுவதை உறுதிசெய்வதற்கு அனைத்துலக கண்காணிப்பு மிகவும் அவசியமானதாகும். அத்துடன் இவ்விசாரணைப் பொறிமுறைக்கான அத்தியாவசிய திறன்கள் மற்றும் வல்லுனர்களையும் அனைத்துலக சமூகம் வழங்கவேண்டும்’ என கிறிபித்ஸ் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறிலங்காவில் பாதிக்கப்பட்ட மக்கள் உண்மை மற்றும் நீதியைப் பெற்றுக் கொள்வதற்கான ஒவ்வொரு படிமுறையிலும் அவர்களுக்கு இதயசுத்தியுடன் ஆலோசனை வழங்கப்படுகிறதா என்பதை சிறிலங்கா அதிகாரிகளும் அனைத்துலக சமூகமும் உறுதி செய்யவேண்டும்.

அடுத்த மாதங்களில் ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர் அலுவலகமானது தொடர்ந்தும் பேரவையின் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகள் நிறைவேற்றப்படுகின்றன என்பதையும் மீளிணக்கப்பாடு, பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான செயற்பாடுகள் அமுல்படுத்தப்படுகின்றனவா என்பதை மதிப்பாய்வு செய்யும்.

இத்தீர்மானம் எவ்வளவு தூரம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்பதை உறுதி செய்வதற்கான புதுப்பிக்கப்பட்ட அறிக்கையை ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர் அலுவலகமானது அடுத்த ஆண்டின் நடுப்பகுதியில் இடம்பெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 32வது கூட்டத்தொடரில் கையளிக்கும் எனவும் கூறப்படுகிறது. அத்துடன் இது தொடர்பான முழுமையான அறிக்கையானது 2017ல் சமர்ப்பிக்கப்படும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதே.

ஒரு கருத்து “போர்க்குற்ற விசாரணையை தட்டிக்கழித்து, உண்மை, நல்லிணக்கம் மீது கவனம் செலுத்தும் சிறிலங்கா”

  1. மனோ says:

    ‘..அனைத்துலக சமூகத்துடனான சிறிலங்காவின் உறவைக் கட்டியெழுப்புவதே எனது முதலாவது நடவடிக்கையாகும். இவ்வாறானதொரு நட்புறவே இன்று சிறிலங்கா மீதான பேரவையின் தீர்மானமானது எமது நாட்டிற்குச் சாதகமாக வரையப்படுவதற்கு உதவியுள்ளது’ அனைத்துலக சமூகம்தான் தமிழர் சமூகம் எனத் தவறுதலாக அர்த்தப் படுத்தி விடாதீர்கள் என்று சொல்லாமல் சொல்லி விட்டீர்கள் நல்லாட்சி நாய்கரே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *