மேலும்

ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் பிள்ளையான் கைது

pillayanதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான, சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) இன்று மாலை குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த, ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாகவே பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவுத் தலைமையகத்துக்கு, விசாரணைக்காக வந்த போதே, இன்று மாலை 6 மணியளவில், அவர் கைது செய்யப்பட்டதாக சிறிலங்கா காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

முன்னதாக, பிள்ளையானிடம் விசாரணைகளை மேற்கொள்ள, நேற்று அவரது வீட்டுக்கு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் சென்றிருந்தனர். எனினும் அவர் அப்போது வீட்டில் இருக்கவில்லை.

இதையடுத்து இன்று மாலை 5 மணியளவில் அவரை குற்றப்புலனாய்வுப் பிரிவுத் தலைமையகத்துக்கு வருமாறு, அழைப்பாணை விடுக்கப்பட்டது.

pillayan

படம் – லங்காதீப

இதன்படி, இன்று மாலை 5.15 மணியளவில் குற்றப் புலனாய்வுப் பிரிவுத் தலைமையகத்துக்கு வந்திருந்தார். இதன் போது, அவரை மேலதிக விசாரணைகளுக்காக கைது செய்திருப்பதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

2005ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 25ஆம் நாள், மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் நத்தார் நள்ளிரவு ஆராதனையில் ஈடுபட்டிருந்த போது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டார்.

இந்தப் படுகொலை தொடர்பாக, முன்னர் பிள்ளையானுடன் சேர்ந்து இயங்கிய பி்ரதீப் மாஸ்ரர், கஜன் மாமா ஆகியோர் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *