மேலும்

வீடமைப்பு உதவிக்கு பாலியல் இலஞ்சம் கோரிய விவகாரம் – கடும் கோபத்தில் புதுடெல்லி

Indiaமுழங்காவில் பகுதியில் இந்திய வீடமைப்புத் திட்ட உதவியைப் பெறுவதற்கு, பெண்களிடம் பாலியல் இலஞ்சம் கோரப்படுவதாக செய்யப்பட்டுள்ள முறைப்பாடுகள், புதுடெல்லிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், இதுகுறித்து சிறிலங்காவுக்கு கடும் அழுத்தங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

முழங்காவில் பகுதியில், இந்திய வீடமைப்புத் திட்ட உதவியைப் பெறும் பயனாளிகளிடம், திட்டத்தை் நடைமுறைப்படுத்தும் பங்காளரான சிறிலங்கா செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் பாலியல் இலஞ்சம் கோருவதாக, கணவனை இழந்த பெண் ஒருவர் ஏழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளார்.

எனினும், இத்தகைய 30 வரையான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக, கிளிநொச்சி செஞ்சிலுவைச் சங்க செயலர் தெரிவித்துள்ளார்.

இந்த முறைப்பாடு குறித்த தகவல் கடந்தவாரம் புதுடெல்லிக்கு கிடைத்தது.

இது சவுத் புளொக்கிற்கு  கடுமையான கோபத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் இந்த விவகாரத்தை தீவிரமாகவும் எடுத்துக் கொண்டுள்ளது.

இது தொடர்பாக சிறிலங்கா செஞ்சிலுவைச் சங்கத்துடன் இணைந்து, விசாரணைகளை ஆரம்பிக்கும் படி, கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவர் வை.கே. சின்ஹாவுக்கு உடனடியாக, பணிப்புரை விடுத்துள்ளார் இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெயசங்கர்.

அதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை எதிர்கொள்ளும் அதிகாரிகள் எவரையும், விசாரணைகள் முடியும் வரையில் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கக் கூடாது என்று, இந்தியத் தூதுவர் வை.கே. சின்ஹா, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சிடம் கோரியுள்ளார்.

“அதிகாரிகள் தப்பிச் செல்வதை நாங்கள் விரும்பவில்லை. எனவே சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு மற்றும் அவர்களின் குடிவரவு அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளோம் என்று இந்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதேவேளை, இந்த விசாரணைகளை மேற்கொள்ள எந்த காலக்கெடுவும் விதிக்கப்படவில்லை என்றும், எனினும், விசாரணைகள் விரைவாகவும், முழுமையாகவும் நடத்தப்படும் என்றும் மற்றொரு இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இத்தகையதொரு குற்றச்சாட்டு முதல் முறையாக எழுந்திருப்பதாகவும், இது புதுடெல்லியின் மோடி அரசாங்கத்தை பெரிதும் சீற்றத்துக்குள்ளாக்கியிருப்பதாகவும் புதுடெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *