மேலும்

இனப்பிரச்சினைத் தீர்வுக்கு கூட்டமைப்புடன் பேச்சுக்களைத் தொடங்கி விட்டோம் – ஜப்பானில் ரணில்

ranil-japanஅரசியல் தீர்வு காண்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட அரசியல் கட்சிகளுடன் ஏற்கனவே  பேச்சுகளை ஆரம்பித்து விட்டதாக நேற்று ஜப்பானிய நாடாளுமன்றத்தில் ஆற்றிய  சிறப்புரையில் தெரிவித்துள்ளார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

“சிறிலங்காவில் இனப்பிரச்சினை மற்றும் பயங்கரவாதப் பிரச்சினை ஏற்பட்ட காலத்தில் அப்போது ஜப்பானின் வெளிவிவகார அமைச்சராக இருந்த அபே மற்றும் பிரதமராக இருந்த தசேனா ஆகியோர் எமக்கு பல உதவிகளை செய்தனர்.

2001 ஆம் ஆண்டு நான் பிரதமராக பதவியேற்ற பின்னர் விடுதலைப் புலிகளுடன் சமாதானப் பேச்சு நடத்தினேன். அப்போது ஜப்பான் பிரதமராக இருந்த கைசுமி ரோக்கியோவில்  சிறிலங்காவுக்கு  உதவி வழங்கும் நாடுகளில் மாநாட்டை நடத்தி  சிறிலங்காவின் சமாதான செயற்பாடுகளின் இணைத்தலைமை நாடுகளாக ஜப்பானையும் முன்கொண்டு வந்தார்.

இம்முறை  எனது ஜப்பான் பயணத்தின் போது இருதரப்பு ஒத்துழைப்பு கூற்றொன்றை விடுக்க விரும்புகின்றேன். அரசியல், பொருளாதார, தொழில்நுட்ப , கலாசாரம் ஆகிய துறைகளில் இரண்டு நாடுகளும் இணைந்து செயற்பட முடியும்.

தற்போதைய நிலைமையில் அமெரிக்கா, மற்றும் பிரித்தானியாஆகிய நாடுகளில் பொருளாதாரத்தில் நேரடியான மற்றும் செயற்பாட்டு ரீதியாக இயங்கி வருகின்ற நிலையில் ஐரோப்பிய ஒன்றியமும் ஜப்பானும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன.

இந்தியா, தமது வளர்ச்சியை பேணக்கூடிய இயலுமையை வெளிக்காட்டி நிற்கின்றது.  சிறிலங்காவின் தேசிய அரசாங்கம் விரைவான பொருளாதார வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்துள்ளது.

ranil-japan-parliament (1)

தெற்காசிய பொருளாதார வளர்ச்சிக்கான பின்னணியை உருவாக்குவதற்கு ஜப்பானின் ஆதரவு அவசியமாகும். இதற்காக பல்வித அனுகுமுறையை மேற்கொள்ளவும்  சிறிலங்கா ஊடாக இந்தியாவுடனான ஜப்பானின் தொடர்புகள் அதிகரிக்கப்பட வேண்டும்.

சிறிலங்காவுக்கு கடந்த ஜனவரி மாதம் புதிய ஜனாதிபதி ஒருவர் தெரிவானார். ஓகஸ்ட் மாதம் புதிய அரசாங்கமும் உருவாகியது. இன்று எமது நாட்டில் ஜனநாயகத்தின் அடிப்படையான நல்லாட்சி, வெளிப்படைத் தன்மை,  சட்டத்தை ஆட்சிப்படுத்தல், சுயாதீன நீதிச்சேவை, ஆகியவை முக்கிய விடயமாக கவனத்தில் கொள்ளப்படவுள்ளன.

சிறிலங்காவின் இரண்டு பெரிய கட்சிகளும் சம்பிரதாய அரசியல் எதிர்ப்பை ஒரு பக்கம் வைத்து விட்டு ஜேர்மனியில் உள்ளதைப் போன்ற கருத்தொருமைவாத ஆழமான யுகமொன்றுக்காக பயணித்துக் கொண்டிருக்கின்றன.

இந்த புதிய முறைமையினால் அரசியல் ஸ்திரம் , வெளிப்படைத் தன்மை என்பன நிறுவப்பட்டுள்ளன. அமைதியான அரசியல் சமூகம் ஒன்றை மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய அரசியலமைப்பை உருவாக்குதல், மனித உரிமைகளை உறுதிப்படுத்துதல், நிறுவனக் கட்டமைபை பலப்படுத்துதல் என்பன எமது அரசியல் நோக்கங்களின் பிரதானமாக காணப்படுகின்றன.

அத்துடன் தேசிய ஒற்றுமை மற்றும் மத இனப்பிரச்சினை தொடர்பாக விடயங்களுக்கு அரசியல் தீர்வுகளை தேடுவதே எமது முக்கியமான நோக்கமாக அமைந்துள்ளது.

தமிழ் தேசியக்கூட்டமைப்பு உள்ளிட்ட ஏனைய அரசியல் கட்சிகளுடன் அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்காக ஏற்கனவே நாங்கள் பேச்சுகளை ஆரம்பித்து விட்டோம்.

கடந்த ஐந்து தசாப்தகாலமாக  சிறிலங்காவில் மொழி, மற்றும் இனப்பிரச்சினை முக்கிய இடமாக இருந்ததுடன் கடந்த பத்தாண்டுகளில் மதப் பிரச்சினையும் முன்னுக்கு வந்தது.

அனைத்துப் பிரச்சினைகளுக்கும் மிகவும் பலமான  சிறிலங்கா என்ற அடையாளத்துடன் தீர்வு காணப்படும். அனைத்து மக்களையும் சமமாக மதிக்கக்கூடிய வகையிலான கொள்கை ஒன்றை அனைத்து சமூகங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையிலும், அனைவரது பங்களிப்புடனும் மேற்கொள்ளவேண்டும் என்பதே எனது நம்பிக்கையாகும்.

நாடாளுமன்றத்தை பலப்படுத்துவதற்கு பேச்சுகள் இடம் பெற்று வருகின்றன. ஐரோப்பிய நாடாளுமன்றம், அமெரிக்க காங்கிரஸ், ஜப்பானின் சட்டப் பேரவை, போன்றவற்றுக்கு ஒத்த வகையில் நாடாளுமன்ற ஆலோசனைக்குழுக்கள் அமைக்கப்படும்.

நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஜேவிபிக்கு எதிர்க்கட்சியின் பிரதமர் கொறடா பதவி வழங்கப்பட்டுள்ளது. இதன் ஊடாக அனைத்து கட்சிகளும் நாடாளுமன்றத்தினதும் அரசாங்கத்தினதும் செயற்பாடுகளில் பங்களிப்பு செய்ய முடியுமாக உள்ளது.

பௌத்த, கிறிஸ்தவ, இந்து, மற்றும் இஸ்லாமிய மதத் தலைவர்களைக் கொண்ட சமாதான ஆலோசனை சபை, உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு என்பவற்றை நிறுவுவதற்கு தென்னாபிரிக்காவுடன் பேச்சு நடத்தி வருகிறோம்.

அதுமட்டுமன்றி மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிப்பதற்கு நீதிமன்ற பொறிமுறையொன்றை உருவாக்கி வருகின்றோம். ஊழலை ஒழிப்பதற்காக புதிய சட்டதிட்டங்களை கொண்டு வருவோம்.

இந்தியாவுக்கும்  சிறிலங்காவுக்குமிடையில் பொருளாதார வேலைத்திட்டங்களை மேற்கொள்வதன் மூலம் இரண்டு நாடுகளுக்கும் நன்மை கிடைக்கும்.

அத்துடன் பாகிஸ்தான், பங்களாதேஸ், மியன்மார் , தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய நாடுகளுடனும் வர்த்தக உடன்படிக்கை செய்துகொள்ளப்படவுள்ளன.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சு நடத்தி ஜி எஸ்.பி. பிளஸ் சலுகை பெறப்படுவதுடன் சீனாவுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை மேற்கொள்ளவுள்ளோம்” என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *