மேலும்

முழு உலகினதும் நம்பிக்கையை வென்றெடுத்துள்ளாராம் மைத்திரி – பான் கீ மூன் பாராட்டு

ms-ban-ki-moonசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, முழு உலகத்தினதும் நம்பிக்கையை வென்றிருப்பதாகவும், அவரது செயற்பாடுகளை உலகம் அவதானித்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன்.

நேற்று முன்தினம் நியூயோர்க்கில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார். இதன்போதே ஐ.நா பொதுச் செயலர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக ஐ.நா பொதுச்செயலரின் பணியகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

“அண்மைய அரசியல்  முன்னேற்றங்கள் குறித்து சிறிலங்கா அதிபருடன் ஐ.நா பொதுச்செயலர் உரையாடினார்.

அத்துடன் தேசிய ஒற்றுமை, நல்லிணக்கம், நல்லாட்சி என்பன தொடர்பான சிறிலங்கா அதிபரின் செய்திக்கு ஐ.நா பொதுச்செயலர் வாழ்த்து தெரிவித்தார்.

ms-ban-ki-moon (3)

நிலையான அமைதி, உறுதிப்பாட்டை அடைவதற்கான அடித்தளம் இடுவதற்கான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும்,  அரசியல் தீர்வுக்கான பேச்சுக்களை முன்னகர்த்த ஊக்கமளிப்பதாகவும் ஐ.நா பொதுச்செயலர் குறிப்பிட்டார்.

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் அண்மைய அறிக்கையை வரவேற்ற ஐ.நா பொதுச்செயலர், இந்த அறிக்கை தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கத்தின் சாதகமான ஆக்கபூர்வமான ஈடுபாடு குறித்து மகிழ்ச்சி வெளியிட்டதுடன், இதன் பரிந்துரைகளை சிறிலங்கா அதிபர் நடைமுறைப்படுத்துவார் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.

சிறிலங்காவுக்குத் தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதில் தமது பலமான அர்ப்பணிப்பை உறுதிப்படுத்திய ஐ.நா பொதுச்செயலர், இந்த சிக்கலான நேரத்தில் சிறிலங்கா அதிபர், அரசாங்கம், உள்ளூர் பங்காளர்களுடன்  இணைந்து நெருக்கமாக பணியாற்ற எதிர்பார்த்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, ஐ.நா னித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தில் அடங்கிய பரிந்துரைகள் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும்,  அரசாங்கம் எப்போதும்  நல்லிணக்கம் தொடர்பான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதில் அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றும் சிறிலங்கா அதிபர்  மைத்திரிபால சிறிசேன ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனிடம் உறுதியளித்துள்ளார்.

ஐ.நா. பிரகடனங்களுக்கு மதிப்பளித்து தமது  அரசாங்கம் தொடர்ந்தும் அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *