மேலும்

சிறிலங்கா போரின் மீது புதிய விசாரணைகளைத் தூண்டும் ஐ.நா அறிக்கை – பாகம் 2

war-missingமுள்ளிவாய்க்காலில் நடந்தேறிய மீறல்களை நேரில் பார்த்த மக்களைப் பொறுத்தளவில் சிறிலங்காவின் அரசியல் மாற்றமானது சிறிதளவான நம்பிக்கையையே கொடுத்துள்ளது. போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தாம் சந்தித்த இழப்புக்களைச் செவிமடுப்பதற்கு நடுநிலையான ஒரு பொறிமுறையை மட்டுமே விரும்புகின்றனர்.

இவ்வாறு Nikkei Asian Review ஊடகத்தில் MARWAAN MACAN-MARKAR எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

சிறுவர் போராளிகள் பலர் போரின் இறுதிக்கட்டத்தில் இராணுவத்திடம் சரணடைந்தனர். ஆனாலும் இவர்கள் தற்போது ‘காணாமற்போயுள்ளதாக’ மனித உரிமைகள் அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன. 1990களிலிருந்து காணாமற்போனவர்களின் எண்ணிக்கை 16,000 என சிறிலங்கா அதிபர் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தமது பிள்ளைகளின் தகவல்கள் எதுவும் அறியாத பெற்றோர் யுத்தம் முடிவடைந்து பல ஆண்டுகள் கடந்த நிலையிலும் தற்போதும் இவர்களைத் தேடும் முயற்சியைக் கைவிடவில்லை.

போர் முடிவடைவதற்கு சில வாரங்களுக்கு முன்னர் புலிகளால் படையில் இணைக்கப்பட்ட அப்போது 15 வயது நிரம்பிய தனது மகள் மேகலா போரின் இறுதியில் இராணுவத்திடம் சரணடைந்ததன் பின்னர் அவளுக்கு என்ன நடந்தது என்பதை அறியமுடியவில்லை என முள்ளிவாய்க்காலுக்கு அருகிலுள்ள கிராமம் ஒன்றில் வசிக்கும் கலாதேவி இராமாயம் கண்ணீருடன் தெரிவித்தார்.

போரின் இறுதியில் சிறிலங்கா இராணுவத்தினரின் சோதனைச் சாவடி ஒன்றில் மேகலாவைக் கண்டதாக சிலர் தெரிவித்தபோது தனது மகள் மீண்டும் தம்மிடம் வந்து விடுவாள் என்ற நம்பிக்கையுடன் பெற்றோர் வாழ்ந்தனர். ஆனாலும் யுத்தம் முடிவடைந்து ஆறு ஆண்டுகள் கடந்தும் தனது மகளுக்கு என்ன நடந்தது என்பதை தம்மால் அறியமுடியவில்லை என மேகலாவின் தாயார் வேதனையுடன் பகிர்ந்து கொண்டார்.

தமது உறவுகளைத் தேடும் பணியில் ஈடுபட்டிருக்கும் ஏனைய குடும்பத்தவர்களுக்கு நடந்தது போல் சிறிலங்கா இராணுவத்தினர் மேகலாவின் தாயாரின் விண்ணப்பத்தையும் நிராகரித்து விட்டனர்.

war-victim-1

இவ்வாண்டு இரண்டு தேர்தல்கள் இடம்பெற்ற நிலையில் சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து மக்கள் தமது காணாமற் போன உறவுகள் மீண்டும் தம்மிடம் வந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையுடன் உள்ளனர். கடந்த ஜனவரியில் இடம்பெற்ற அதிபர் தேர்தல் மூலம் அதிகாரத்துவ ஆட்சியை நடாத்திய மகிந்த ராஜபக்ச தோற்கடிக்கப்பட்டார்.

இதேபோல் கடந்த மாதம் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தல் மூலம் ராஜபக்சவின் கட்சி போதியளவு ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளாததால் பிரதமராக வருவதற்கான ராஜபக்சவின் கனவு கைகூடவில்லை.

ராஜபக்சவைத் தொடர்ந்து பிரதமரான மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமரான ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தமது முன்னைய ஆட்சியாளரை விட போரால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதில் ஆர்வமாக உள்ளது போல் தென்படுகிறது.

சிறிலங்காவில் பரந்துபட்டு வாழும் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளைக் கருத்திற் கொள்வதுடன், கடந்த காலத் தவறுகள் மற்றும் எமது நிறுவகங்களின் பலவீனம் தொடர்பாக விழிப்புடன் உள்ளதாக சிறிலங்காவின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர, ஐக்கிய நாடுகள் சபையால் அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

எதுஎவ்வாறெனினும், சிறிலங்காவின் புதிய அரசாங்கமும் அரசியல் சவாலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. போரில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என அனைத்துலக மனித உரிமைகள் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

சிறிலங்கா மீதான அனைத்துலக விசாரணையில் ஈடுபடும் அனைத்துலக நீதிபதிகள் சுயாதீனமாகச் செயற்படுவது உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் மனித உரிமைகள் அமைப்புக்கள் அழுத்தம் கொடுத்துள்ளன.

சிறிலங்கா மீதான விசாரணையில் அனைத்துலக நீதிபதிகள் பங்கேற்க வேண்டும் என செய்ட் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனாலும் இவர்கள் ‘கலப்பு நீதிமன்றில்’ விசாரணைகளை மேற்கொள்ளும் போது அங்கு சிறிலங்காவின் உள்நாட்டு நீதிபதிகளும் பங்கேற்பார்கள் என்பது இங்கு கவனத்திற் கொள்ளத்தக்க ஒன்றாகும்.

கலப்பு நீதிமன்ற முறைமை மற்றும் அனைத்துலக விசாரணை ஆகிய இரண்டையும் சிறிலங்கா அரசாங்கம் மறுதலித்துள்ளது. உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையானது போர்க் குற்றங்கள் மற்றும் இதர குற்றங்களை விசாரணை செய்வதற்கு போதுமானது என சிறிலங்கா அரசாங்கம் வாதிடுகிறது.

எதுஎவ்வாறிருப்பினும், உள்ளக விசாரணை மேற்கொள்ளப்படுவதற்குக் கூட, ‘போர்க் குற்றவாளிகளை தண்டிக்கத்தக்க’ முறையில் சிறிலங்காவின் அரசியல் யாப்பில் புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டிய தேவையுள்ளது என சிறிலங்காவின் மனித உரிமைகள் ஆவணப்படுத்தல் அமைப்பைச் சேர்ந்த றுக்கி பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனாலும் இவ்வாறான ஒரு சட்டமூலத்தைக் கொண்டு வருவதற்கு பெரும்பான்மை சிங்கள சமூகம் சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஆதரவளிக்குமா என்பது மகிந்த ராஜபக்சவிற்கு மக்கள் மத்தியில் ஆதரவிருக்கும் வரை பெரும் சவாலான ஒன்றாகவே இருக்கும்.

பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக வாதிடும் சட்டவாளர்கள் மத்தியில் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை என்பது நம்பிக்கையற்ற ஒன்றாகவே காணப்படுகிறது. அனைத்துலக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கோரி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் கையெழுத்துப் போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

இந்தப் போராட்டமானது ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் நீதிச்சேவைகளில் தலையீடு மேற்கொள்ளப்பட்டதை எதிர்த்தும் மேற்கொள்ளப்படுகிறது.

‘உள்நாட்டு மற்றும் அனைத்துலக நீதிபதிகளைக் கொண்ட கலப்பு நீதிமன்ற முறைமை கூட வெற்றியளிக்காது’ என போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் சார்பாக வாதிடும் சட்டவாளர் கனகசபை ரட்னவேல் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘காவற்துறை, நீதிபதிகள், பிரதம வழக்கறிஞர் போன்றோரில் நாங்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. அதாவது இவர்கள் நாட்டிற்காகச் சண்டையிட்ட இராணுவத்திற்கு எதிராகத் தீர்ப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்பதில் நாங்கள் நம்பிக்கை கொள்ளவில்லை’ என சட்டவாளர் மேலும் தெரிவித்தார்.

இம்மாத இறுதியில் ஐ.நா சபைக்கு உட்பட்ட மனித உரிமைகள் பேரவையைச் சேர்ந்த 47 உறுப்பு நாடுகள் சிறிலங்கா மீதான வரைபு தொடர்பில் வாக்களிக்கவுள்ளன. அதன் பின்னர் சிறிலங்கா மீதான விசாரணை எப்பொறிமுறையில் மேற்கொள்ளப்படும் என்பது தெளிவாகும்.

சிறிசேன அரசாங்கமானது உள்நாட்டு விசாரணை என்கின்ற பதம் இந்த தீர்மானத்தில் உள்ளடக்கப்படுவதற்கான அழுத்தத்தை வழங்கிவருகிறது. இது மட்டுமல்ல. முன்னர் சிறிலங்கா மீது அனைத்துலக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த அமெரிக்காவும் தற்போது உள்நாட்டு விசாரணைக்கு ஆதரவு வழங்கியுள்ளது.

‘போர்க் காலக் குற்றங்கள் தொடர்பில் நம்பகமான பொறுப்புக் கூறல் மற்றும் மீளிணக்கப்பாடு போன்றவற்றை உருவாக்குவதற்கான முயற்சிகளுக்கு நாங்கள் அடிப்படையில் ஆதரவளிக்கிறோம்’ என கடந்த மாதம் சிறிலங்காவில் தேர்தல் இடம்பெற்ற பின்னர் அமெரிக்காவின் தென் மற்றும் மத்திய ஆசியாவிற்கான உதவி இராஜாங்கச் செயலர் நிசா பிஸ்வால் அறிவித்திருந்தார்.

கடந்த ஜனவரியில் மேற்குலகத்திற்கு சார்பான சிறிசேனவின் மிதவாத அரசாங்கம் சீனாவிற்கு ஆதரவான ராஜபக்ச அரசாங்கத்தை வெற்றி கொண்டதன் பின்னர், அமெரிக்காவானது சிறிலங்கா மீதான தனது வெளியுறவுக் கோட்பாட்டை மாற்றியமைத்தது.

ஆனால் முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய மீறல்களை நேரில் பார்த்த மக்களைப் பொறுத்தளவில் சிறிலங்காவின் அரசியல் மாற்றமானது சிறிதளவான நம்பிக்கையையே கொடுத்துள்ளது. போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தாம் சந்தித்த இழப்புக்களைச் செவிமடுப்பதற்கு நடுநிலையான ஒரு பொறிமுறையை மட்டுமே விரும்புகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *