மேலும்

சிறிலங்கா போரின் மீது புதிய விசாரணைகளைத் தூண்டும் ஐ.நா அறிக்கை – பாகம் 1

war-victimsமல்லராஜன் றஜீபா மற்றும் அவரது தம்பியான கானகன் ஆகியோர் மே 15 அன்று பதுங்குகுழியில் தஞ்சமடைந்திருந்தனர். அப்போது இவர்கள் இருவருக்கும் முறையே  பத்து மற்றும் ஏழு வயதாகும். இவர்களது பெற்றோர்கள், நான்கு சகோதரர்கள் ஆகியோர் எறிகணை வீச்சின் போது பதுங்குகுழியில் வைத்துக் கொல்லப்பட்டனர்.

இவ்வாறு Nikkei Asian Review ஊடகத்தில் MARWAAN MACAN-MARKAR எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

சிறிலங்காத் தீவின் வடகிழக்கு கரையோரப் பகுதியில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் இரண்டு அறைகளைக் கொண்ட புதிதாக வர்ணம் தீட்டப்பட்ட வீடுகள் பல காணப்படுகின்றன. இவை பிற்பகல் சூரிய ஒளியில் மிகவும் பிரகாசமாகத் தென்படுகின்றன.

இருப்பினும், இவ்வாறான புதிய தோற்றப்பாடுகள் முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய கறைபடிந்த வரலாற்றை ஒருபோதும் மறைக்கடிக்க முடியாது.

இரண்டு சதுரகிலோமீற்றர் பரப்பளவில் அமைந்துள்ள முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்ட யுத்தம் நடந்தேறியது. 26 ஆண்டுகளாக சிறிலங்காவில் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தம் முள்ளிவாய்க்காலிலேயே முடிவுக்கு வந்தது.

புதிதாகக் கட்டப்பட்ட தனது வீட்டின் வாயிலில் நின்றவாறு நகுலன் தர்சனா போரின் போது உடைந்த வீடுகள் தொடர்பாக விளக்கினார். தற்போதும் சிலர் சன்னங்கள் துளைத்த சுவர்களைக் கொண்ட வீடுகளில் வாழ்கின்றனர். சில வீடுகளின் கூரைகள் போரின் போது அழிவடைந்துள்ளன.

ஏப்ரல் 2009இன் நடுப்பகுதியில் இறுதிக்கட்ட யுத்தம் தீவிரமடைந்தது. அப்போது புலிகள் அமைப்பின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்த 100,000 இற்கும் மேற்பட்ட மக்கள் முள்ளிவாய்க்காலிலேயே அடைக்கலம் புகுந்திருந்தனர். ‘மூன்று பக்கங்களிலிருந்தும் எறிகணைகள் வீசப்பட்டன. எல்லா இடங்களிலும் குண்டுகள் வெடித்தன’ என 30 வயதான தர்சனா தெரிவித்தார்.

‘மக்கள் இந்தக் குண்டுகளுக்குள் அகப்படாது தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு முயற்சித்தனர். எமது வளாகத்தில் 10 குடும்பங்கள் வரை தங்கியிருந்தனர்’ என்கிறார் தர்சனா.

war-victims

மல்லராஜன் றஜீபா, அவரது தம்பி கானகன்

எறிகணைகளின் அகோரம் தாங்க முடியாது மல்லராஜன் றஜீபா மற்றும் அவரது தம்பியான கானகன் ஆகியோர் மே 15 அன்று பதுங்குகுழியில் தஞ்சமடைந்திருந்தனர். அப்போது இவர்கள் இருவருக்கும் முறையே  பத்து மற்றும் ஏழு வயதாகும். இவர்களின் குடும்பத்தில் இவ்விருவரும் மட்டுமே எஞ்சினர். இவர்களது பெற்றோர்கள், நான்கு சகோதரர்கள் ஆகியோர் எறிகணை வீச்சின் போது பதுங்குகுழியில் வைத்துக் கொல்லப்பட்டனர்.

‘அன்றிரவு நாங்கள் அனைவரும் இரவுணவை உண்டோம். அப்போது திடீரென மேற்கொள்ளப்பட்ட எறிகணைகளிலிருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக பதுங்குகுழிக்குள் ஓடினோம். இதிலேயே எமது உறவுகள் கொல்லப்பட்டனர்’ என ரஜீபா தெரிவித்தார்.

பல ஆண்டுகால விசாரணையின் பின்னர், தற்போது செயிட் ராட் அல் ஹூசைனின் ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளரின் அலுவலகத்தால் சிறிலங்காவின் இறுதிக்கட்ட யுத்தத்தில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை செப்ரெம்பர் 16 அன்று வெளியிடப்பட்டது.

இதில் சிறிலங்கா அரசாங்கத்தால் ‘பாதுகாப்பு வலயம்’ என அறிவிக்கப்பட்ட இடங்களில் எவ்வாறான குருதி தோய்ந்த படுகொலைகள் இடம்பெற்றுள்ளன என்பது விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

‘பாதுகாப்பு வலயங்களில் தஞ்சம் கோரிய பல நூற்றுக்கணக்கான மக்கள் சிறிலங்கா இராணுவத்தினரின் எறிகணை வீச்சில் படுகொலை செய்யப்பட்டதற்கு பல்வேறு ஆதாரங்கள் சாட்சியமளித்துள்ளன’ என இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பதுங்குகுழியில் பாதுகாப்புத் தேடிய ஒட்டுமொத்தக் குடும்பங்கள் கூட எறிகணை மற்றும் குண்டுத்தாக்குதல்களில் படுகொலை செய்யப்பட்டமை நிரூபணமாகியுள்ளதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ராஜபக்ச அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட மூன்றாவது பாதுகாப்பு வலயமாக முள்ளிவாய்க்கால் காணப்பட்டது. இந்த யுத்தத்தின் போது போரின் பங்குபற்றிய இரு தரப்பினரும் பல்வேறு குற்றங்களை இழைத்துள்ளனர்.

‘சிறிலங்கா இராணுவ நிலைகளைக் குறிவைத்துப் புலிகள் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்தினர். இவர்கள் பொதுமக்களைக் காப்பாக வைத்து தாக்குதல்களை மேற்கொண்டனர்’ என உயர் மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்தால் வெளியிடப்பட்ட 261 பக்க அறிக்கையில்  விதந்துரைக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற யுத்தமே இறுதிக்கட்ட யுத்தகளமாக அமைந்தது. 2009 ஜனவரி தொடக்கம் மே வரையான காலப்பகுதியில் இறுதிக்கட்ட யுத்தம் இடம்பெற்றது. இதில் காணாமற்போன பல ஆயிரக்கணக்கான மக்களின் நிலை என்ன என இன்னமும் தெரியவில்லை.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது 40,000 வரையானோர் படுகொலை செய்யப்பட்டதாக 2011ல் ஐ.நா வல்லுனர்களால் வெளியிடப்பட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இருப்பினும் இந்தக் குற்றச்சாட்டை சிறிலங்காவின் முன்னாள் ராஜபக்ச அரசாங்கம் மறுத்திருந்தது. ‘பூச்சிய பொதுமக்கள் இழப்பை’ உறுதி செய்தே தமது படையினர் யுத்தத்தில் ஈடுபட்டதாக அறிவித்தது.

பொதுமக்களைப் பொறிவைப்பதற்காக சிறிலங்காவின் முன்னாள் அரசாங்கம் ‘மனிதாபிமான நடவடிக்கை’ என்ற பெயரில் பொதுமக்களை ஈடுபடுத்தியாக வேறு நாட்டு அரசாங்கங்கள் குற்றம் சுமத்தியிருந்தன.

இந்த விவாதங்களின் அடிப்படையில் தற்போது ஐ.நா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ‘அனைத்துலக மனிதாபிமானச் சட்டம் மற்றும் போர்ச் சட்டங்களை’ போரில் பங்குபற்றிய தரப்பினர் மிக மோசமாக மீறியுள்ளதாக ஐ.நா அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சிறிலங்கா பாதுகாப்புப் படையினர் பரவலாக பல்வேறு சித்திரவதைகள், பாலியல் வன்புணர்வுகள், திட்டமிட்ட படுகொலைகள், போரின் போது சரணடைந்த கைதிகள் கொல்லப்பட்டமை போன்ற பல்வேறு குற்றங்களைப் புரிந்தனர்.

இதேபோன்று புலிகள் அமைப்பு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டமை, சிறுவர்களைப் பலவந்தமாகப் படையில் இணைத்தமை போன்ற குற்றங்களில் ஈடுபட்டனர்’ என ஐ.நா அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *