மேலும்

ஜெனிவா தீர்மானம் நம்பகமான இடைக்கால நீதிச் செயற்பாட்டின் முக்கியமான படிநிலை – ஜோன் கெரி

john_kerryஐ.நா மனித உரிமைகள் பேரவையில், அமெரிக்கா முன்வைத்துள்ள சிறிலங்கா தொடர்பான தீர்மான வரைவு, நம்பகமான இடைக்கால நீதிச் செயற்பாட்டின் முக்கியமான படிநிலை என்று அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார்.

‘உண்மை, நீதி மற்றும் பரிகாரத்திற்கான முக்கியத்துவத்தின் பகிரப்பட்ட அங்கீகாரத்தின் மைல்கல்லை பிரதிநிதித்துவம் செய்யும், நல்லிணக்கத்தை முன்னிறுத்தல் மற்றும் அனைத்து இலங்கையர்களுக்கும் நீடித்த சமாதானம் மற்றும் அபிவிருத்தியை  உறுதி செய்வதில்,  மீள நிகழாதிருப்பதற்கான உத்தரவாதத்தை வழங்கும் தீர்மானம் ஒன்றை அமெரிக்காவும், சிறிலங்காவும், எமது பங்காளர்களும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பித்தோம்.

இணை அனுசரணையாளர்களாக இணைந்து கொள்ளும், சிறிலங்கா அரசாங்கத்தின் முடிவானது, தீர்மானத்தில் குறிப்பிடப்பட்ட உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கான வழியை  ஏற்படுத்துகிறது.

சிறிலங்காவை சமாதானப் பாதையில் இட்டுச் செல்வதற்காக இந்த ஆண்டில் சிறிலங்கா மக்கள் இருமுறை வாக்களித்துள்ளதுடன், சிறிலங்காவை நீண்ட காலம் வலுவிழக்கச் செய்து கொண்டிருந்த பிளவுபடுத்தல் அணுகுமுறையில் இருந்தும் நாட்டினை மாற்றியுள்ளனர்.

ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கும், அனைத்து இலங்கையர்களினதும் சிவில் சுதந்திரத்தை மீட்டெடுப்பதற்கும் உற்சாகமிகு நடவடிக்கைகளை  எடுத்து வரும் சிறிலங்காவுக்கான எமது ஆதரவை இந்த தீர்மானம் வெளிப்படுத்துவதுடன், மீள நிகழாதிருப்பதனை உறுதி செய்வதற்கு கடந்த காலத்தின் வலிமிகு அனுபவங்களையும் அடையாளப்படுத்துகிறது.

இலங்கையர்களுக்கு உரித்தான மற்றும் அனைத்துலக சமூகத்தின் ஆதரவு மற்றும் ஈடுபாட்டுடனான நம்பகமான இடைக்கால நீதிச் செயற்பாட்டின் ஊடான முக்கியமான படிநிலையை இந்த தீர்மானம் குறிக்கிறது.

காணாமல்போனவர்களின் குடும்பங்கள் தமது அன்புக்குரியவர்கள் குறித்த பதில்களை அறிந்து கொள்வதற்கு இந்த தீர்மானம் உதவும்.

உண்மை, நீதி, பரிகாரத்தை வழங்குவதற்கான வழிகளை குறிப்பதுடன், கௌரவம் மற்றும் தொழிசார் நிபுணத்துவத்துடன் நடந்து கொண்ட, இராணுவத்தில் உள்ளவர்கள் உள்ளடங்கலாக, அனைவரினதும் நற்பெயரை பாதுகாக்கும் அதேவேளை, மீளநிகழாதிருப்பதற்கான உத்தரவாதத்தையும் அளிக்கிறது.

இந்த ஆண்டின் முற்பகுதியில் கொழும்பில் வைத்து நான் உறுதியளித்ததைப் போல, இந்த முக்கியமான, ஆனால், சவால் நிறைந்த படிநிலைகளை முன்னெடுக்கும் சிறிலங்காவுடன் இணைந்து செல்லும் எமது உறுதிப்பாட்டில் அமெரிக்கா தொடர்ந்தும் திடமாக இருக்கும்  என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *