மேலும்

சிறிலங்காவில் அனைத்துலக பங்களிப்புடன் உள்நாட்டு விசாரணை – அமெரிக்கா வலியுறுத்துகிறது

nisha-desai-biswalசிறிலங்காவில் நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கு, அனைத்துலக சமூகத்தின் கணிசமான பங்களிப்புடன், உள்நாட்டு விசாரணை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

சிறிலங்கா தொடர்பான ஐ.நா விசாரணை அறிக்கை வெளியான பின்னர், முதல் முறையாக அமெரிக்கத் தரப்பின் உயர் மட்டத்தில் இருந்து கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் இது குறித்து பிரிஐ செய்தி நிறுவனத்திடம் கருத்து வெளியிடுகையில்,

‘மனித உரிமைகள் கரிசனைகளுக்குத் தீர்வு காண்பதில் சிறிலங்காவின் புதிய அரசாங்கம், வலுவான நோக்கத்தைக் கொண்டுள்ளதைப் பார்க்கிறோம்.

கடந்த ஒன்பது ஆண்டுகளாக  செய்யப்பட்டதை விட, அதற்கு அப்பால், கடந்த ஒன்பது மாதங்களில், நம்பிக்கையை கட்டியெழுப்பவும், உள்ளடக்கிய சமூகத்தை நோக்கி நகரவும், சிறிலங்கா அரசாங்கம் அதிகமாக முயற்சி செய்துள்ளதைப் பார்க்க முடிகிறது.

அது ஒரு ஊக்குவிக்கும் சமிக்ஞை.இது சிறிலங்காவின் முன்பாக உள்ள- சிறிலங்கா அரசாங்கத்தின் முன்பாக உள்ள- சிறிலங்காவின் புதிய அதிபர் முன்பாக உள்ள- சிறிலங்கா மக்களின் முன்பாக உள்ள மிக நீண்ட பாதை.

சிறிலங்கா படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மிக கொடூரமான போரில், இருதரப்பிலும் ஏற்பட்ட காயங்கள் இன்னமும் திறந்தேயிருக்கின்றன. அவற்றை குணப்படுத்த வேண்டியது மிகவும் அவசியம்.

இதற்கு காலம் எடுக்கும். நல்லிணக்கத்தை நோக்கி எல்லாப் பக்கங்களில் இருந்தும், தீவிரமான தொடர் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இது மிகவும் கடினமான  செயல்முறை. நீண்ட செயல்முறை. இதில் தவிர்க்க முடியாத பின்னடைவுகளும் இருக்கும்.

அமைதி மற்றும் எல்லாக் குடிமக்களுக்குமான செழிப்பை சிறிலங்கா மக்கள் அடிப்படையில் ஆர்வம் கொண்டுள்ளனர்.  எல்லா மக்களுக்கும் செழிப்பான வாய்ப்பையும், அமைதியையும் கொண்டு வருவதற்கு, அந்த நம்பிக்கை எம்மைத் தூண்டுகிறது என்று நான் நினைக்கிறேன்.

சிறிலங்காவில் நீதித்துறை மற்றும் பொறுப்புக்கூறல் சார்ந்த நீண்டகால பிரச்சினைகளுக்கு, நம்பகமான உள்நாட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றே அமெரிக்கா ஆரம்பத்தில் இருந்து கூறிவந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *