மேலும்

கலப்பு நீதிமன்றத்தை அமைக்குமாறு ரணிலைக் கோரும் உரிமை எவருக்கும் இல்லை – விக்கிரமபாகு

கலப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்ற, ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரையை நிராகரித்துள்ள புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன, சிறப்பு கலப்பு நீதிமன்றத்தை அமைக்கும்படி ரணில் விக்கிரமசிங்கவைக் கோரும் உரிமை எவருக்கும் கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“ரணில் விக்கிரமசிங்க இனவாதியல்ல.  அவர் விடுதலைப் புலிகளின் தலைவருடன் உடன்பாட்டில் கையெழுத்திட்டவர். கலப்பு நீதிமன்றத்தை நடைமுறைப்படுத்துமாறு அவரிடம் கோரும் உரிமை எவருக்கும் இல்லை.

2005 அதிபர் தேர்தலில் அவர் வெற்றி பெற்றிருந்தால் போர் தடுக்கப்பட்டிருக்கும். தமிழர்கள் வாக்காளிக்காததால் தான் அவர் தோல்வியடைந்தார்.

கலப்பு நீதிமன்றம் என்ற பரிந்துரை, ஜனநாயகத்துக்காக போராடிய எம்மை, இலக்கு வைத்து அவமானப்படுத்தும் செயல்.

இந்த கலப்பு நீதிமன்றம், சிலரால், ஜனவரி 8ஆம்  நாளுக்கு முன்னர் பரிந்துரைக்கப்பட்டது.

ஆனால், முன்னைய காவல்துறை, நீதித்துறை தான் சிறிலங்காவில் இன்னமும் இருக்கிறது என்று யாராலும் கூற முடியாது.  ஜனவரி 8 புரட்சி எல்லாவற்றையும் தூய்மைப்படுத்தியுள்ளது.

புதிய இடதுசாரி முன்னணி, தமிழர்களின் தன்னாட்சி உரிமைகளையும், வடக்கில் போரின் போது குற்றங்கள் இழைக்கப்பட்டது என்பதையும், ஏற்றுக் கொள்கிறது.

லசந்த விக்கிரமதுங்க, பிரகீத் எக்னெலிகொட, தாஜுதீன் படுகொலைகளும்  போர்க்குற்றங்களுக்குள் அடக்கப்பட வேண்டும். ஏனென்றால், ஆயுதப்படைகளினால், போர்க்காலத்தில் தான் இவை மேற்கொள்ளப்பட்டன.

இவை குறித்து விசாரிக்க சிறிலங்கா தமது சொந்த நீதிமன்றத்தை உருவாக்க முடியும்.

இந்தியாவைப் போன்று இந்தப் பிரச்சினையை ஒற்றையாட்சி அரசுக்குள் தீர்க்கப்பட முடியும். சமஸ்டி முறை இங்கு தேவையற்றது.

எல்லா கெரில்லா தலைவர்களும், போராளிகளும், பெரும் எண்ணிக்கையான பொதுமக்களை கொன்றிருக்கிறார்கள். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் விடயத்தில் இது ஒன்றும் புதியதல்ல.

நெல்சன் மண்டேலா கூட வெள்ளையின மக்களையும், குடும்பங்களையும் கொலை செய்திருக்கிறார். புதிய இடதுசாரி முன்னணி வன்முறைகளைக் கண்டிக்கிறது.” என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *