மேலும்

கலப்பு நீதிமன்றத்துக்கு சிறிலங்கா ஒத்துழைக்க வேண்டும் – ‘நியூயோர்க் ரைம்ஸ்’ ஆசிரியர் தலையங்கம்

New-York-Timesசிறிலங்காவின் உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற பல்வேறு போர்க் குற்றங்களை உள்ளடக்கிய அறிக்கையை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை கடந்த புதனன்று வெளியிட்டது. 2009ல் முடிவடைந்த இந்த உள்நாட்டு யுத்தத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் 40,000 இற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

சிறிலங்காவின் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற குற்றங்கள் அனைத்தும் ‘மிகப் பயங்கரமான வன்முறைகள் மற்றும் மீறல்கள்’ என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளதுடன், ‘பல பத்தாண்டுகளாக சிறிலங்காவில் வன்முறைகள் மற்றும் மீறல்கள் தொடரப்பட்டுள்ளன.  இவை தொடர்பில் சிறிலங்காவால் முன்வைக்கப்பட்ட எவ்வித வாக்குறுதிகளும் இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் சிறிலங்காவில் பரவியுள்ள வன்முறைகளை முடிவிற்குக் கொண்டு வருவதில் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை ஒருபோதும் வெற்றியளிக்காது’ என குறிப்பிட்டுள்ளது.

இருப்பினும் இந்தக் கருத்தை சிறிலங்காவின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றும் போது மறுதலித்தார்.

‘சிறிலங்கா அரசாங்கமானது உண்மையான, நீதியான மற்றும் மீளிணக்கப்பாட்டு ஆணைக்குழு ஒன்றை உருவாக்குவதுடன், இதற்கான புதிய அரசியல் யாப்பு ஒன்றையும் வரையும். இதன்மூலம் போர்க் குற்றங்களை விசாரணை செய்யப்படும்’ என சிறிலங்காவின் வெளியுறவு அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

2009ல் சிறிலங்கா இராணுவத்தினர் மூலம் போரை முடிவிற்குக் கொண்டு வந்த மகிந்த ராஜபக்ச தனது ஆட்சிக்காலத்தில் எந்தவொரு அனைத்துலக விசாரணைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கவில்லை. இதன் காரணமாக 2014 மார்ச் மாதம் சிறிலங்காவின் ஒத்துழைப்பின்றி ஐ.நா தனது விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ள வழிவகுத்தது.

ராஜபக்ச ஜனவரி மாதத் தேர்தலில் தோல்வியுற்றபோது, தேசிய மீளிணக்கப்பாடு மற்றும் அனைத்துலக விசாரணையாளர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கான திட்டத்தை வரைவதற்கான கால அவகாசத்தை மனித உரிமைகள் பேரவை, மைத்திரிபால சிறிசேனவின் புதிய அரசாங்கத்திற்கு வழங்கியது.

சிறிலங்காவில் பரவியிருந்த இன மற்றும் மத வன்முறைகளை முடிவிற்குக் கொண்டு வருவதாக சிறிசேன வாக்குறுதி வழங்கினார். இம்மாதம் மூன்றாம் நாள், தமிழரான இராஜவரோதயம் சம்பந்தன், சிறிலங்கா நாடாளுமன்றின் எதிர்க்கட்சித் தலைவராக அறிவிக்கப்பட்டார். 1983 இன் பின்னர் தமிழர் ஒருவர் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டமை இதுவே முதற்தடவையாகும்.

ஆனால் சிறிலங்கா வாழ் தமிழ் மக்கள் தமக்கு எதிராக தமது நாட்டு அரசாங்கத்தால் இழைக்கப்பட்ட பல்வேறு மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறப்பட வேண்டும் என்பதை தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றனர். அத்துடன் இவ்வாறான மீறல்களுக்கு உள்நாட்டுப் பொறிமுறை ஒருபோதும் சாத்தியப்படாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதாவது சிறிலங்கா அரசாங்கமானது உள்நாட்டு விசாரணையை மேற்கொள்வதற்கும், குற்றமிழைத்தவர்களைத் தண்டிப்பதற்கும், சாட்சியமளிப்பவர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிப்பதற்குமான இயலுமையைக் கொண்டிருக்கவில்லை என தமிழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.

2009ல் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்திற்குத் தலைமை தாங்கிய ஜெகத் டயஸ் மற்றும் சரத் பொன்சேகா ஆகிய இருவரும் தற்போது சிறிசேன அரசாங்கத்தின் கீழ் பணியாற்றுகின்றனர். வடக்கில் வாழும் தமிழ் மக்கள் தொடர்ந்தும் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் வாழ்கின்றனர். சிறிசேனவின் அரசாங்கத்தின் கீழும் பல்வேறு மீறல்கள் இடம்பெறுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அனைத்துலக நீதிபதிகள் மற்றும் விசாரணையாளர்களை உள்ளடக்கிய சிறப்பு நீதிமன்றம் ஒன்றை அமைக்குமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இவ்வாறான ஒரு பொறிமுறையின் ஊடாக மட்டுமே போர்க் குற்றங்களைப் புரிந்தவர்கள் தண்டிக்கப்படுவதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பது உறுதி செய்யப்பட முடியும்.

சிறிசேனவின் அரசாங்கமானது எவ்வித கால தாமதமுமின்றி சிறப்பு நீதிமன்றத்தை உருவாக்குவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

மொழியாக்கம் – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *