மேலும்

சிறிலங்காவின் பொறுப்புக்கூறல் வலிமிக்கது, ஆனால் அவசியமானது – ஐ.நா சிறப்பு ஆலோசகர்கள்

UN pecial Advisers  Adama Dieng- Jennifer Welshமோதல் காலங்களில் எல்லா சமூகங்களுக்கும் பாரிய துன்பங்களை விளைவித்த  இருண்ட காலத்தை சிறிலங்கா கடந்து வந்திருப்பதாக ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனின் சிறப்பு ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறிலங்கா தொடர்பான ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் வெளியிட்ட அறிக்கையில், பாடுபாடற்ற பீரங்கித் தாக்குதல்கள், நீதிக்குப் புறம்பான படுகொலைகள், காணாமற்போகச் செய்யப்படுதல், சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள், சிறார் படைச்சேர்ப்பு என்று மோசமான குற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனின், இனப்படுகொலையைத் தடுத்தலுக்கான சிறப்பு ஆலோசகர் அடமா டையிங், மற்றும் பாதுகாப்புப் பொறுப்புக்கான சிறப்பு ஆலோசகர் ஜெனிபர் வெல்ஸ் ஆகியோர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

”பொறுப்புக்கூறல் என்பது, தனியே நீதியை நிலைநாட்டுவதற்கு மட்டுமானது அல்ல. இது நல்லிணக்கம், அமைதி, மீளத்திரும்பாமை ஆகியவற்றுக்கும் முக்கியமானது.

சிறிலங்காவின் வரலாற்றில் புதிய அமைதியான பக்கங்களை எழுதுவதற்கு கடந்தகாலக் காயங்களுக்கு பொருத்தமான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு குணப்படுத்தப்பட வேண்டும்.

அனைத்துலக மனித உரிமை சட்ட நியமங்களுக்கு ஏற்ப, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க பொறிமுறைகளை உருவாக்கப்பட வேண்டும்.

இந்த செயல்முறை வலிமிக்கதாகவும், கடினமானமாகவும் இருக்கும். ஆனால், நீண்டகால அமைதிக்கும், நாட்டின் உறுதிப்பாட்டுக்கும் இது தவிர்க்கமுடியாத ஒன்றாகும்.

பன்முகத்தன்மைக்கு மதிப்பளித்தல், சமூகங்களுக்கிடையிலான கலந்துரையாடல், பாடுபாடின்மை என்பன தேசிய கொள்கைகளாக வகுக்கப்பட வேண்டும்.

எல்லா இன, மத சமூகங்களின் அதிக பிரதிநிதித்துவத்தை சிறிலங்கா அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்.

சிறுபான்மையினரின் குரல்களையும் கூட கேட்கவேண்டிய தேவை உள்ளது, ஏனென்றால், அவர்களும் இலங்கையர்கள் தான்.” என்றும் ஐ.நா பொதுச்செயலரின் சிறப்பு ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.

இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், இனச்சுத்திகரிப்பு, மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களில் இருந்து தனது நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டிய அடிப்படைப் பொறுப்பு சிறிலங்கா அரசாங்கத்துக்கு இருக்கிறது.

குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களை நீதியின் முன் கொண்டு வருவதிலும் இந்தப் பொறுப்பு இருக்கிறது.

மீள நடக்காது என்பதற்கான உறுதியான நகர்வுகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார் பாதுகாப்புப் பொறுப்புக்கான சிறப்பு ஆலோசகர் ஜெனிபர் வெல்ஸ்.

அதேவேளை, சிங்கள தமிழ் சமூகங்களிடையே காணப்படும் ஆழமான குறைகளால் மேலும் வன்முறைகள் நிகழக் கூடும் என்று இனப்படுகொலைகளைத் தடுப்பதற்கான சிறப்பு ஆலோசகர் அடமா டையிங் எச்சரித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *