மேலும்

‘சிறிலங்கா: நீதிக்கான தேடல்’ – புதிய போர்க்குற்ற ஆவணப்படத்தை வெளியிட்டார் கல்லம் மக்ரே

No-Fire-Zone-Callum-Macraeசிறிலங்காவின் போர்க்குற்றங்களை, சனல்4 தொலைக்காட்சி மூலம் அனைத்துலக சமூகத்துக்கு வெளிப்படுத்தியவர்களில் ஒருவரான போர் தவிர்ப்பு வலயம் ஆவணப்படத்தின் இயக்குனர் கல்லம் மக்ரே, மற்றொரு ஆவணப்படத்தை இன்று வெளியிட்டுள்ளார்.

‘சிறிலங்கா: நீதிக்கான தேடல்’ (Sri Lanka: The Search For Justice) என்ற தலைப்பில் இந்த அரை மணிநேர ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஸ் மொழிகளில் தயாரிக்கப்பட்டு இன்று அனைத்துலக சமூகத்துக்கு காண்பிக்கப்படும் இந்த ஆவணப்படம், தமிழ், சிங்களம், ஹிந்தி, பிரெஞ்சு மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு அடுத்த சில நாட்களில் இணையத்தில் வெளியிடப்படவுள்ளது.

அவர்களைக் கேட்க வேண்டும் என்ற தொனிப்பொருளில், சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் வகையில், பாதிக்கப்பட்டவர்களின் குரல்களையும், போர்க்குற்ற ஆதாரங்களையும் கொண்டதாக இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

தற்போது பொலிவியா, பரகுவே, ஆர்ஜென்ரீனா, மெக்சிகோ, பிரேசில் ஆகிய தென்அமெரிக்க நாடுகளில் கல்லம் மக்ரே இந்த ஆவணப்படத்தின் முன்னோட்டத்தை காண்பித்து வருகிறார்.

அவர், அமெரிக்கா சென்று, நியூயோர்க் மற்றும் வொசிங்டனில், அரசியல்வாதிகள், அரசாங்க அதிகாரிகள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மத்தியில் இந்த ஆவணப்படத்தை திரையிட்டுக் காண்பிக்கவுள்ளார்.

அதன் பின்னர், ஜெனிவாவிலும் ஐ.நா தலைமையக வளாகத்தில் இதனை காண்பிக்கவும் கல்லம் மக்ரே திட்டமிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *