மேலும்

போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்- என்கிறார் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா

sarath fonsekaபோர்க்குற்றங்களில், மகிந்த ராஜபக்சவோ  கோத்தாபய ராஜபக்சவோ அல்லது உயர் இராணுவ அதிகாரிகளோ ஈடுபட்டிருந்தால் நிச்சயம் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.

தொலைக்காட்சி செவ்வி ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

“மகிந்த ராஜபக்ச மாறிவிட்டார் என நான் கருதவில்லை. பிரதமரின் பதவிப் பிரமாண நிகழ்வில் மகிந்த ராஜபக்ச எனக்கு அருகில், அமர்ந்திருந்தார்.

பல தடவைகள் என்னைப் பார்த்து உரையாட முயற்சித்தார் அவர். நான் அவரை பார்க்காமலேயே இருந்தேன்.

பின்னர் ஹேமா பிரேமதாசவை விலக்கிக் கொண்டு, “எப்படி சரத்?” என மகிந்த ராஜபக்ச கேட்டார்.

அதற்குப் பதிலளிக்கப் போயிருந்தால் நான்  நீண்ட விளக்கம் அளித்திருக்க வேண்டும். அதனால் “பிரச்சினையில்லை“ எனக் கூறி விட்டு, அந்தப் பக்கத்திலிருந்து பார்வையை விலக்கிக் கொண்டேன்.

ஒரு தடவை பாம்பு தீண்டியது, அதே பாம்பின் வாயில் மீண்டும் ஒருமுறை கைவிடுவது தவறு.  மகிந்த மாறிவிட்டார் என நான் கருதவில்லை.

நான் பதவி வகித்த காலத்தில் வெள்ளை வானில் எவரும் கடத்தப்பட்டமைக்கு எவ்வித ஆதாரங்களும் கிடையாது.

எனது காலத்தில்ஊடகவியலாளர் பிரகீத்  எக்னெலிகொட கடத்தப்படவில்லை. நான் ஓய்வு பெற்ற பின்னரே அந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கிரித்தலை முகாமில் போலிப் புலிகள் அமைப்பு ஒன்றை நடத்தியதாக புலனாய்வுப் பிரிவினர் ஒப்புக்கொண்டுள்ளனர்.

நான் பதவி வகித்த காலத்தில் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறவில்லை. நிச்சயமாக பிரகீத் எக்னெலிகொட பழிவாங்கப்பட்டுள்ளார்.

குமரன் பத்மநாதன் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடவில்லை என சட்ட மா அதிபர் கூறினால் சட்ட மா அதிபரே பயங்கரவாதி. எனவே அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் துப்பாக்கியால் சுட்டு உயிரிழந்தார் என எனக்குத் தோன்றவில்லை.

பெரிய ஆட்டிலறி அல்லது மோட்டார் குண்டு ஒன்றின் இரும்புப் பகுதியொன்று தலையில் அவர் அறியாமலேயே பட்டிருக்க வேண்டும். அதனால்தான், இறப்புக்குப் பின்னர் அவரது கண்கள் மூடப்படவில்லை.

இரண்டு பிரதான கட்சிகள் ஒன்றிணைந்து அரசாங்கம் அமைத்திருப்பதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும். அதில் தவறில்லை.

போரின் போது சரியான வழிமுறைகள் பின்பற்றப்பட்டது என அமெரிக்கா கருதியதால் தான், உள்ளக விசாரணை நடத்தப்பட வேண்டுமென தெரிவித்துள்ளது.

விசாரணை நடத்தப்படுவது மிகவும் நல்லது. எனக்கு எதிராக விசாரணை நடத்தினால் நான் அதனை ஏற்றுக்கொண்டு விசாரணைகளை எதிர்கொள்வேன்.

கோத்தாபாய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச அல்லது உயர் இராணுவ அதிகாரிகள் போர்க்குற்றங்களில் ஈடுபட்டிருந்தால் அவர்களுக்கு நிச்சயம் தண்டனை விதிக்கப்பட வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *