மேலும்

எதிர்க்கட்சித் தலைவராக நாளை நியமிக்கப்படுகிறார் சம்பந்தன்? – தட்டிப்பறிக்க முனையும் வாசு

sampanthanசிறிலங்கா நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நியமிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள்  உள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

சிறிலங்காவின் 8ஆவது நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு நேற்று இடம்பெற்ற போதிலும் எதிர்க்கட்சித் தலைவர் நியமனம் அறிவிக்கப்படவில்லை.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் உள்ள – தேசிய அரசாங்கத்துடன் இணையாள கட்சிகளின் உறுப்பினர்கள், தமக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று கோருகின்றனர்.

குமார வெல்கமவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க வேண்டும் என்று கோரி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதம், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவரான மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக, வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

தாமும் ரஞ்சித் சொய்சாவும் இணைந்து இந்தக் கடிதத்தை, சிறிலங்கா அதிபரின் அதிகாரபூர்வ வதிவிடத்தில் வைத்து கையளித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, இரண்டு பிரதான கட்சிகளும் தேசிய அரசாங்கத்தில் இணைந்துள்ள நிலையில், மூன்றாவது பெரிய கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கே அந்தப் பதவி வழங்கப்பட வேண்டும் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைபடி்பு கோரியுள்ளது.

நாடாளுமன்ற வழக்கங்களின் படி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவி அளிக்கப்பட வேண்டும் என்று வல்லுனர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். இதற்கு அரசியல் உயர்மட்டங்களிலும் ஆதரவு காணப்படுகிறது.

மகிந்த ராஜபக்ச அணி இனவாத நோக்கிலேயே தமிழர் ஒருவருக்கு எதிர்கட்சித் தலைவர் பதவி கிடைக்கக் கூடாது என்பதற்காக, கையெழுத்து திரட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நாளை எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது பற்றி சபாநாயகர் கரு ஜெயசூரிய அறிவிக்கவுள்ளார்.

பெரும்பாலும் இரா.சம்பந்தனே இந்தப் பதவிக்கு நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில், 1977ஆம் ஆண்டு தொடக்கம், 1983ஆம் ஆண்டு வரை தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அ.அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *